நிறைவேறாக் கனவுகளைத் திரையேற்றிய குறும்படம்

நிறைவேறாக் கனவுகளைத் திரையேற்றிய குறும்படம்

3 mins read
cc55021f-7877-4971-b7ed-794d5404e691
‘சவுதாஜ்’ திரைப்படத்தில் இடம்பெறும் உணர்வுபூர்வமான காதல் காட்சி. - படம்: நைட்ஸ்கை கிரியேட்டிவ்ஸ்

நாம் மிகவும் விரும்பிய ஒன்று கிடைக்காதபோது ஏற்படும் ஏக்கத்தை மனத்திலிருந்து திரைக்குக் கொண்டுவந்தது ‘சவுதாஜ்’ (Saudade) எனும் உள்ளூர்த் தயாரிப்பு.

‘சவுதாஜ்’ எனும் போர்ச்சுகீசிய மொழிச் சொல்லுக்கு ஆங்கிலத்திலோ தமிழிலோ இன்றுவரை சரியான மொழிபெயர்ப்பு இல்லை.

ஆனால், அதன் பொருளைக் கதாநாயகர்களின் உணர்வுபூர்வமான நடிப்பு எடுத்துரைத்தது.

காதல் என்பது மொழிக்கும் அப்பாற்பட்டது என்பதற்குக் குறும்படத் தலைப்பு மட்டுமன்றி, இந்த நடிகர்களும் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

தமிழரான யுகேஷ் கண்ணனுக்கும் வட இந்தியரான வாரியா சக்சேனாவுக்கும் இடையே காதல் பூக்கிறது.

சிறுவயதில் கிடைக்காத அன்பு இளமையில் கிடைக்கும்போது அதை மனத்தால் ஏற்கமுடியுமா? காதலுக்கும் குழப்பத்துக்கும் இடையே ஊசலாடும் மனம் எதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்? 

கதாநாயகர்களின் கண்ணீர், திரையைத் தாண்டி பார்வையாளர்களின் கண்களிலும் பெருக்கெடுத்தது இக்குறும்படத்துக்குக் கிடைத்த வெற்றி.

2023ல் தொடங்கப்பட்ட ‘நைட்ஸ்கை கிரியேட்டிவ்ஸ்’ (NightSky Creatives), சமூக ஊடகக் குறுங்காணொளிகளையே பெரும்பாலும் தயாரித்துவந்துள்ள நிலையில், அது வெளியிடும் நான்காவது குறும்படம் ‘சவுதாஜ்’. 

மே 9ஆம் தேதியன்று ‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ்’ அரங்கில் நடைபெற்ற சிறப்புத் திரையிடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

திரையில் மலர்ந்த காதல், தம் கலைமீது ‘நைட்ஸ்கை’ குழுவினர் வைத்துள்ள காதலைப் பிரதிபலித்தது.  

 ‘சவுதாஜ்’ படக்குழு உறுப்பினர்கள்.
 ‘சவுதாஜ்’ படக்குழு உறுப்பினர்கள். - படம்: நைட்ஸ்கை கிரியேட்டிவ்ஸ்

40 நிமிடக் குறும்படத்திலுள்ள ஒவ்வொரு காட்சியும் துல்லியமாகச் செதுக்கப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளர் சாய்மாதவ் கைவண்ணத்தில், கையடக்க கேமரா மூலம் எடுக்கப்பட்ட இக்குறும்படத்தில், உணர்வுகள் உயிரோட்டத்துடன் காட்டப்படுகின்றன.

கதையின் தொடக்கத்திலும் முடிவிலும் வரும் காட்சிக்காக நான்கைந்து முறை, மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரைகூடப் படப்பிடிப்பு நடந்தது என்றார் குறும்படத்தின் இயக்குநரும் கதாசிரியருமான ‘நைட்ஸ்கை கிரியேட்டிவ்ஸ்’ இணை நிறுவனர் சுரேஷ் சுபாஷ்.

இக்குறும்படத்தைத் தயாரிக்கும் இலக்கு, சுரேஷின் மனத்தில் 2012லேயே உதித்தது. ஆனால், ‘நைட்ஸ்கை கிரியேட்டிவ்ஸ்’ தொடங்கியபிறகுதான் அதைத் திரைக்குக் கொண்டுவருவது சாத்தியமானது.

“இரண்டே காட்சிகளோடு தொடங்கிய திரைக்கதை, குறும்படமாக திரைப்படமாக விரிவடைந்ததற்குக் காரணம் நடிகர்களின் திறனே,” என்றார் சுரேஷ். 

‘மிஸ் படிட் குளோபல் சிங்கப்பூர் 2025’ வெற்றியாளர், ‘மிஸ் படிட் குளோபல்’ அனைத்துலக அழகுராணிப் போட்டியில் ‘மிஸ் ஆசியா’, நான்காம் நிலை போன்ற வெற்றிகளைக் குவித்துள்ள வாரியாவுக்கு இது முதல் நடிப்பு அனுபவம். வசந்தம் ஒளிவழியின் ‘வி சுப்ரீம்’ வெற்றியாளரான யுகேஷ், மேடை நாடகங்களிலும் குறும்படங்களிலும் நடித்திருந்தாலும் அவர் நடித்த குறும்படம் திரையிடப்படுவது இதுவே முதன்முறை.

“உண்மையில் எனக்கும் நான் நடித்த கதாபாத்திரத்துக்கும் இடையே பல வித்தியாசங்கள் உள்ளன. அவர் இன்னும் அமைதியானவர்; தன்னைச் சுற்றி அதிகமானோர் இருப்பதை விரும்பாதவர். ஆனால், அடிப்படையில் இருவரும் உணர்வுமயமானவர்கள். அவற்றை மீண்டும் மீண்டும் அனைவரின் முன்னிலையிலும் நடித்துக் காட்டுவது சவால்மிக்கதாக இருந்தது,” என்றார் வாரியா. 

“மனத்துக்கு நெருக்கமானவர்களுடன் குறும்படத் திரையிடலைக் காண்பது மகிழ்ச்சியாக இருந்தது. இதைத் தொடர்ந்து, மக்களை மகிழ்விக்கும் கதாபாத்திரங்கள், ஆழமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் ஆசை எனக்கு உண்டு,” என்றார் யுகேஷ்.

“வேறு எந்தத் தயாரிப்புக்கும் நாங்கள் இவ்வளவு முயற்சி செய்ததில்லை. கதைக் கருப்பொருளுடன் ஒன்றிப் போனோம்,” என்றார் ‘நைட்ஸ்கை கிரியேட்டிவ்ஸ்’ இணை நிறுவனரும் குறும்படத் தொகுப்பாளருமான வசந்தகுமார் அன்பழகன்.

“உருக்கமான காட்சிகளில் உடனடியாக அழுகை வந்துவிடாது. காதல் காட்சிகளில் நடிப்பது மிகச் சிரமம். உணர்வுகளைக் காட்டும் அதே நேரம், வரம்புகளையும் மீறக்கூடாது. என்மீதும் சக நடிகர்மீதும் முழு நம்பிக்கை வைத்து நடித்துள்ளனர். அவர்கள் தம் கலைப்பயணத்தில் வெகுவாக முன்னேற வேண்டும் என்பதே என் ஆசை,” என நடிகர்களைப் பாராட்டினார் சுரேஷ்.

மே 15ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு இந்தக் குறும்படம் https://www.youtube.com/@NightSkyCreatives எனும் தளத்தில் வெளியாகும்.

குறிப்புச் சொற்கள்