பண்டிகைகளை நாம் மட்டும் கொண்டாடாமல், அனைவரிடத்திலும் கொண்டாட்ட உணர்வை கொண்டுசேர்க்கவேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, இவ்வாண்டு பல பொங்கல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்துள்ளது லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம்.
அதன் ஒரு பகுதியாக, ஜனவரி 15ஆம் தேதிமுதல் 17ஆம் தேதிவரை லிட்டில் இந்தியா ஆர்கேட்டிற்கு வெளியே சர்க்கரைப் பொங்கலைப் பொதுமக்களுக்கு லிஷா இலவசமாக விநியோகிக்கிறது.
அந்நாள்களில் மாலை ஐந்து மணியளவில் கிளைவ் ஸ்திரீட்டில் பொங்கல் விநியோகம் தொடங்குகிறது. தினமும் கிட்டதட்ட 5,000 மக்களுக்குப் பொங்கல் கொடுக்கவேண்டும் என இலக்கு வகுத்துள்ளதாக ‘லிஷா’ பொங்கல் நடவடிக்கைகள் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் கார்த்திகேயன், 40, கூறினார்.
ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில், ஸ்ரீ ஶ்ரீநிவாசப் பெருமாள் கோவில், பொத்தோங் பாசிர் ஸ்ரீ சிவ துர்க்கா கோவில் ஆகிய மூன்று கோவில்களும் பொங்கல் சமைத்து இம்முயற்சிக்குக் கைகொடுக்கின்றன.
பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரியும் 50 வயது சசிகுமார், “நமது பாரம்பரிய முறைப்படி நடக்கும் பொங்கல் கொண்டாட்டங்களும், இந்தப் பொங்கல் விநியோகமும், எனக்குப் பொங்கல் உணர்வை ஏற்படுத்துகின்றன. நம்முடைய பாரம்பரியத்தைச் சிங்கப்பூரில் தொடர்ந்து கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பாக உள்ளது,” என்று கூறினார்.
“இந்த இடமே களைகட்டியுள்ளது. இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும்போது, எல்லா சிங்கப்பூரர்களுக்கும் பொங்கல் திருநாள் பற்றிய ஆர்வம் மேலிட்டு, இன்பமளிக்கிறது,” என்றார் ஆசிரியர் ஸேனாப் ரஹ்மான்.
பொங்கல் உணர்வைத் தாதிமை இல்லங்களில் உள்ள முதியவர்களுக்கும் கொண்டுசேர்க்கவேண்டும் என லிஷா நோக்கம் கொண்டது. அவ்வகையில், ஜனவரி 15 அன்று, ஸ்ரீ நாராயண மிஷன், சன்லவ், நியூஹோம் ஆகிய இல்லங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 100 பேரை லிட்டில் இந்தியாவிற்கு அழைத்துவந்து, அவர்களோடு பொங்கல் கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ நாராயண மிஷன் தலைமை நிர்வாக அதிகாரி தேவேந்திரன் அந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
“விறகடுப்பில் மண்பானையைப் பயன்படுத்தி பொங்கலிட்டோம். இது அவர்களுக்கு ஒரு புதிய அனுபவம். என் மனைவியோடு சேர்ந்து ஆண்டுதோறும் முதியவர்களோடு பொங்கல் கொண்டாடுவது எனக்கு ஈடில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்றார் அபிராமி நகைக்கடையின் திரு ராமநாதன், 48.
இதனிடையே, தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பாரம்பரியக் கலைகளையும் இசைக்கருவிகளையும் கற்றுக்கொடுக்கும் மூன்று நாள் பயிலரங்கும் இடம்பெற்றது.
வரும் 17ஆம் தேதி சனிக்கிழமை லிஷா மகளிர் பிரிவைச் சேர்ந்த 30 தொண்டூழியர்கள் ஶ்ரீ நாராயண மிஷனுக்குச் சென்று அங்குள்ள முதியவர்களுக்காகப் பொங்கல் சமைத்துப் பரிமாறவுள்ளனர்.
ஆண்டுதோறும் நடத்துப்படம் கூட்டுப் பொங்கல் நிகழ்ச்சி, வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சிங்கப்பூர் இந்தியக் கழகத்தோடு இணைந்து ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கும் வார இறுதியில் பொங்கல் சார்ந்த சுவாரசியமான நடவடிக்கைகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.

