பராமரிப்பு இல்லத்தில் கமழும் தமிழ்மணம்

பராமரிப்பு இல்லத்தில் கமழும் தமிழ்மணம்

3 mins read
e2da222b-3433-44fe-8a36-09d944417da5
சன்லவ் இல்லத் தாதியரான 29 வயது ஜெ.அர்ச்சனா, தமிழ் வகுப்பு நடத்துகிறார். - படம்: பே. கார்த்திகேயன்

ஆங்கிலமும் பிற மொழிகளும் அதிகம் பேசப்படும் சிங்கப்பூரில், சிறுபான்மைத் தமிழ்ச் சமூகத்தினருக்குத் தாய்மொழி அணுக்கமான உணர்வையும் நிம்மதியையும் தருகிறது.

முதியோரைப் பராமரிப்பவர்கள் இதனை நன்கு அறிந்தவர்கள். அவர்களில் தமிழ் தெரியாதோர், ‘எப்படி இருக்கிறீர்கள்?’, ‘சாப்பிட்டீர்களா?’ போன்ற அடிப்படைச் சொற்களைச் சிறிதளவாவது தெரிந்துகொள்ள முயல்வர்.

தமிழ்மொழி விழாவை முன்னிட்டு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இடையே, தமிழர் அல்லாதோருக்கு இம்மொழியைக் கொண்டுசேர்க்கும் வகுப்பை முதியோர் பராமரிப்பு இல்லம் ஒன்று நடத்தியுள்ளது.

புவாங்கோக் வியூவிலுள்ள (Buangkok View) ‘சன்லவ்’ இல்லத்தின் தலைமையகத்தில் தமிழர் அல்லாத பணியாளர்கள், மூத்தோர் என மொத்தம் 22 பேருக்கு அந்த இல்லத்தின் தமிழ் பேசும் ஊழியர்கள் தமிழ் வகுப்பை நடத்தினர்.

தமிழ் தெரியாத சன்லவ் ஊழியர்கள் சிலருக்கும் முதியோர்க்கும் தமிழ் வகுப்புகளை இல்லப் பணியாளர்களே நடத்தினர்.
தமிழ் தெரியாத சன்லவ் ஊழியர்கள் சிலருக்கும் முதியோர்க்கும் தமிழ் வகுப்புகளை இல்லப் பணியாளர்களே நடத்தினர். - படம்: பே. கார்த்திகேயன்

ஒன்று முதல் 10 வரையிலான எண்களுக்கான தமிழ்ச் சொற்கள் முதலில் அவர்களுக்குக் கற்றுத்தரப்பட்டன. அடுத்து, வணக்கம், நன்றி போன்ற அன்றாடப் பேச்சில் அதிகம் பயன்படுத்தப்படும் சொற்களை அவர்கள் சொல்லப் பழகினர்.

படங்கள் நிறைந்த பயிற்சித் தாள்களில் தமிழ் எழுத்துகளை எழுதும் வாய்ப்பையும் வழிகாட்டுதலையும் பங்கேற்பாளர்கள் பெற்றனர்.

சிங்கப்பூரில் ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படும் தமிழ்மொழி விழாவின், ‘தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்’ என்ற வாசகத்தைச் சொல்லியவாறே அவர்கள் படம் எடுத்துக்கொண்ட காட்சி வியப்பு கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இவ்வகுப்பில் பங்கேற்ற முதியோரில் ஒருவரான 80 வயது மூதாட்டி லாய் ஷூ ஃபோங், புதிய மொழியைக் கற்கும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்வதாகக் கூறினார்.

அடிப்படைச் சொற்களைக் கற்ற மகிழ்ச்சியில், பங்கேற்பாளர்கள்
அடிப்படைச் சொற்களைக் கற்ற மகிழ்ச்சியில், பங்கேற்பாளர்கள் - படம்: பே. கார்த்திகேயன்

“குவீன்ஸ்டவுனில் நான் வளர்ந்தபோதும், அதற்குப் பிறகும் சீனர் அல்லாதோருடன் பழகும் வாய்ப்பைப் பெற்றதில்லை. இந்த இல்லத்திற்கு வந்ததிலிருந்து பிற இனத்தவரின் மொழியையும் பண்பாட்டையும் தெரிந்துகொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

திருவாட்டி லாயைப் போலவே, இல்ல நிர்வாகப் பணியாளர் கார்லா லீ சியோக் செங், 58, தாமும் தமிழ்ச் சொற்களைக் கற்கும் வாய்ப்பைப் பெற்றதை எண்ணி மகிழ்வதாகக் கூறுகிறார். “தமிழ் பேசும் முதியவர்களிடம் நான் தமிழில் பேசும்போது அவர்கள் இதமடைவதைக் காண்கிறேன்.

“தமிழ் பேசும்போது தமிழர்கள் முகங்களில் காணும் மகிழ்ச்சி மேலும் தமிழ் கற்க என்னை ஊக்குவிக்கிறது. கற்கும்போது நாக்கு பிறழ்கிறது; ஆனாலும் நன்கு பயிற்சி செய்து கற்கிறேன்,” என்று அவர் கூறினார்.

ஆசிரியர்களின் பொறுமை, திறமை

வகுப்பை நடத்திய சன்லவ் இல்லப் பராமரிப்பாளரான 71 வயது ஆர். ஹைமாவதி, ஆசிரியர் பணியில் அனுபவம் இல்லாதபோதும் மிகுந்த சிரத்தையுடன் கற்பித்தார்.

முதியோரைப் பல்லாண்டுகளாகப் பராமரித்து வரும் அனுபவம், இதற்குத் தேவையான பொறுமையைத் தந்துள்ளதாக அவர் கூறினார்.

இல்லப் பராமரிப்பாளர் ஆர். ஹைமாவதி, 71, தமிழ் வகுப்பை நடத்துகிறார்.
இல்லப் பராமரிப்பாளர் ஆர். ஹைமாவதி, 71, தமிழ் வகுப்பை நடத்துகிறார். - படம்: பே. கார்த்திகேயன்

தமிழ் அறியாதோரின் உதடுகள் ‘அம்மா’ என்று உச்சரிக்கும்போது, தமது செவி குளிர்வதாகத் திருவாட்டி ஹைமாவதி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

வகுப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிறந்த அனுபவம் கிட்டியதைக் கண்டு மகிழ்வதாகக் கூறிய சன்லவ் இல்ல நிர்வாகி மகாலட்சுமி அண்ணாமலை, இத்தகைய கற்றல், செறிவூட்டல் நிகழ்ச்சிகளுக்குப் பொதுமக்கள் தங்களால் இயன்ற ஆதரவைத் தரவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

சன்லவ் இல்லம் எல்லா இனத்தவரின் கொண்டாட்டங்களையும் கடைப்பிடித்து, ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் ஊக்குவிக்கும் நல்ல தருணங்களுக்கு உதவுகிறது என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்