தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கல்லிலே கலைவண்ணம் கண்ட சம்வர்தினி

3 mins read
ab709c63-f19d-4f10-80ab-0b09923ef3d3
சிங்கப்பூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் வளாகத்தில் ஸ்ரீ சம்வர்தினி. - படம்: த.கவி

கோவில் கட்டடக்கலை மீதுள்ள பேராவல் காரணமாக, தமது பணியைத் துறந்து முழுநேர ஸ்தபதியாராகப் பணியாற்றத் தொடங்கியுள்ளார் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்ரீ சம்வர்தினி.

“இதுதான் என் இயல்பு, இதுதான் என் அடையாளம்,” என்று சிரித்தவாறு கூறினார் 35 வயது சம்வர்தினி.

இவரின் குடும்பம் மூன்று தலைமுறைகளாக கோவிலுக்கான உலோக அச்சுக்கலைத் தொழிலை மேற்கொண்டு வருவதால் சிறுவயதிலிருந்தே கோவில் கட்டடம் குறித்த வரைபடங்கள், அச்சு இயந்திரங்கள், உலோக, மரப்பொருள்களுடனே வளர்ந்தவர் இவர்.

தந்தை ஒருபுறம் தொழில் நடத்த, தாய் ஒருபுறம் நகை வடிவமைப்பு, பிற உலோக வடிவமைப்புகளில் ஈடுபட்டுத் தம் தந்தைக்கு உதவியாக இருப்பது ஆகியவற்றைக் கண்டு அத்தொழிலைத் தாமும் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.

இத்தொழிலை மேற்கொள்வது கடினம் என்பதால் நல்ல ஊதியம் வழங்கும் பணி தேவை என்ற பெற்றோர் பரிந்துரையில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் படிப்பு முடித்து, மனிதவள மேலாளராகப் பணியாற்றி வந்தார் சம்வர்தினி.

“நல்ல வேலை, ஊதியம், வேலை வாழ்க்கைச் சமநிலை எல்லாம் இருந்தும் என் இயல்பிலிருந்து மாறுபட்ட ஒன்றில் ஈடுபட்டிருப்பது போன்ற உணர்வு என்னுள் இருந்தது,” என்றார் சம்வர்தினி.

எனினும், சிந்திக்க நேரமின்றி ஓடிக்கொண்டிருந்ததைச் சுட்டிக்காட்டினார் இவர். பெருந்தொற்றுக் காலத்தில் சற்றே ஓய்வு கிடைத்தபோது தம்மைக் குறித்த தேடலில் இறங்கினார் சம்வர்தினி. அத்தேடலின் முடிவில் 11 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த பணியைத் துறந்து முழுநேரமாகச் சிற்பத் தொழிலை மேற்கொள்ள முடிவெடுத்தார்.

“நான் ஒரு ஸ்தபதி என்று சொல்லிக் கொள்வதே பொருத்தமாகத் தோன்றுகிறது. ஆர்வம், ஆசை இருந்தாலும் சரியான திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என நினைத்தேன்,” என்றார் இவர்.

அனைத்துலக அளவில் புகழ்பெற்ற கோவில் பணிகளை மேற்கொண்டுள்ள ஸ்தபதி டாக்டர் தட்சிணாமூர்த்தியிடம் பாடம் கற்றார். கோவில் சிற்பக்கலை, ஆகம விதிகள், சிற்பங்கள் குறித்த விவரங்கள் என அனைத்தையும் கற்றதுடன், ‘மந்தரா கோல்டு கோட்டிங்ஸ்’ எனும் நிறுவனத்தையும் தொடங்கினார்.

தமது குடும்பத் தொழிலான உலோக வேலைப்பாடுகளுடன் கல், மர, சிற்ப வேலைகளையும் கையிலெடுத்தார் சம்வர்தினி.

“ஒவ்வொரு கோவிலும் கட்டியெழுப்பப்பட்ட காலம், அக்கோவிலின் மூலவர் உள்ளிட்டவற்றைப் பொறுத்து, கோபுர வடிவமைப்பு, பரிவார தெய்வச் சிற்பங்கள், ஓவியங்கள் என அனைத்தும் மாறுபடும். இத்தொழிலை நோக்கி என்னை ஈர்த்ததும், தக்க வைத்திருப்பதும் இந்திய மரபின் அழகியலையும் நயங்களையும் பறைசாற்றும் இந்த நுணுக்கங்கள்தான்”, என்றார் சம்வர்தினி.

ஆகம விதிகளையும் பாரம்பரியக் கூறுகளையும் கட்டிக்காக்கும் நோக்கில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் கோவில்கள் தம்மை ஈர்ப்பதாகக் கூறும் இவர், இந்தியா மட்டுமின்றி இந்திய சமூகத்தினர் வாழும் எல்லாப் பகுதிகளிலும் இந்த பாரம்பரியத்தைக் கொண்டு செல்லும் நோக்கில், தாம் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

 ஸ்தபதி டாக்டர் தட்சிணாமூர்த்தியுடன் ஸ்ரீ சம்வர்தினி.  
 ஸ்தபதி டாக்டர் தட்சிணாமூர்த்தியுடன் ஸ்ரீ சம்வர்தினி.   - படம்: ஸ்ரீ சம்வர்தினி

பெரும்பாலான துறைகள், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இத்துறையிலும் மாற்றங்கள் இருக்க வேண்டும் என்பதால் கணினி, இயந்திரங்கள் வழி வடிவமைப்புகளை மேம்படுத்துவது எனப் புதிய தொழில்நுட்பங்களைக் கையாள்கிறார் சம்வர்தினி.

“பிற துறைகளில் ஆராய்ச்சிகளும் மேம்பாட்டுப் பணிகளும் நடக்கின்றன. ஆனால், இந்தத் துறையில் இளம் நிபுணர்கள் அதிகம் இல்லாததால் உரிய மேம்பாடுகளுக்கான பணிகளை மேற்கொள்ள இளையர்கள் பலர் முன்வர வேண்டும்,” எனக் கேட்டுக்கொண்டார் சம்வர்தினி.

இக்கலையை உலகெங்கிலும் எடுத்துச் செல்ல ஆர்வத்துடன் இருக்கும் இவர், “இது ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த தொழில் எனும் கண்ணோட்டம் இருப்பது தவறானது. ஆர்வம் இருந்தால் வழிகாட்ட இத்துறை நிபுணர்கள் தயாராக உள்ளனர். பெண்கள் இயல்பாகவே கலைக் கண்ணோட்டம் கொண்டவர்கள். அவர்கள் இந்தத் துறையில் சாதிக்கலாம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை,” என நம்பிக்கையுடன் சொன்னார் சம்வர்தினி.

பிற துறைகளில் ஆராய்ச்சிகளும் மேம்பாட்டுப் பணிகளும் நடக்கின்றன. ஆனால், இந்தத் துறையில் இளம் நிபுணர்கள் அதிகம் இல்லாததால் உரிய மேம்பாடுகளுக்கான பணிகளை மேற்கொள்ள இளையர்கள் பலர் முன்வர வேண்டும்.
ஸ்ரீ சம்வர்தினி, 35
குறிப்புச் சொற்கள்