கடல் கடந்த கவிமாலைச் சந்திப்பு

2 mins read
728c126d-9788-470a-a6b3-0e7a970522c6
பாத்தாம் தீவில் கவிமாலை குழுவினர். - படம்: ஜோசப் சேவியர்
multi-img1 of 4

சிங்கப்பூரில் வெள்ளி விழா கண்ட அமைப்பு கவிமாலை. கடந்த 25 ஆண்டுகளாகக் கவிதை வளர்ச்சியில் பங்காற்றி வரும் கவிமாலை, ஆண்டுதோறும் சீனப் புத்தாண்டு விடுமுறை நாளில் வெளிப்புற நிகழ்வாகக் கவிஞர்களின் கூடுகை நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு எல்லை கடந்து அண்டை நாடான இந்தோனீசியாவின் பாத்தாம் தீவில் சந்திப்பு நடைபெற்றது.

ஜனவரி 29, 30ஆம் தேதிகளில் படகுப் பயணமாக பாத்தாம் தீவுக்குச் சென்ற குழுவினர், முதல் நாள் பெர்லாங் பிரிட்ஜ், புத்தர் கோயில், கோ கார்ட், பிங்க் பீச் ஆகிய இடங்களுக்குச் சென்று சுற்றுப்பயணத்தை முடித்த பின்னர் அன்றிரவு கவிராத்திரி நிகழ்வு நடைபெற்றது.

கவிஞர்கள் தாங்கள் ரசித்த கவிதைகளைப் பகிர்ந்துகொள்ள, அவற்றைப் பற்றிய கலந்துரையாடலும் ஜனவரி மாதப் போட்டிக்கு வந்த கவிதைகளுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது.

திரு பிச்சினிக்காடு இளங்கோ, இதற்கு முன் கிழக்குக் கடற்கரையில் நடத்திய கவிராத்திரி நிகழ்வினைப் பற்றிய அனுபவங்களோடு கவிதைகளுக்கான கலந்துரையாடலை நடத்துவதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். தொடர்ந்து பங்கேற்ற அனைவரும் கவிதைகளை வாசித்தது நெகிழ்வாக இருந்தது.

இப்பயணத்தில் 51 பேர் கலந்துகொண்டனர். கவிஞர்கள் தங்களது அனுபவம் பற்றி பகிர்ந்துகொண்டனர்.

அலைகளோடு போட்டிப் போட்டுத் திரண்ட 50க்கும் மேற்பட்ட கவிஞர்கள், கடற்கரை காற்றாய் மனதைத் தழுவிய கவிதைகள் என பாத்தாம் பயணம் கவின்மிகு பயணமாக அமைந்தது என்றார் செவியின்பம் சங்கீதா.

கவிமாலை கவிஞர் சேவகன், கவிமாலை அமைப்பு எப்போதும் ஓர் இணக்கமான குடும்பம் சார்ந்த அமைப்பு என்பதற்கு இப்பயணம் நெகிழ்ச்சியான நினைவை பதிவுசெய்ததாகத் தெரிவித்தார்.

குழந்தைகளோடு குடும்பக் குதூகலம், நட்சத்திர விருந்துபோல கவியும் நடனமும், சிரிப்புமாய் தங்கும் சொகுசு விடுதியின் மேல்மாடியில் வழமை தாண்டிய நினைவுகளை மனதில் பதித்த கவிராத்திரி என‌ கவிமாலையின் ஏற்பாடு சிறப்புற்றது என்றார் கவிஞர் மாரிமுத்து.

இந்தப் பயணத்தை ஒரு கவிதையாகவே புனைந்து தமிழ் முரசுக்குத் தந்தது கவிமாலை.

“கடலோடியின் முன்னோடியென தமிழனுக்கோர் பெருமையுண்டு மடலோலைச் சுவடியெனத் தமிழ் நதிநீந்திய கதைகளுமுண்டு கவியாடிகள் கடந்த கப்பலில் பல எடைகூடிய காவியங்கள் உண்டு படைசூழப் பயணமெனப் பாத்தாம்வரை தமிழ் பாய்வதுண்டு அதில் கவிமாலையின் கால்தடமுண்டு பயணமே வரலாற்றைப் படைக்கிறதெனில் வரலாற்றில் பொறிக்கப்படட்டும் இப்பயணம்

கவிஞர் மு.செ.பிரகாஷ் இடையில் ஒருவர் தனது பெட்டியைத் தவறவிட்டு தேடிய சம்பவத்தை, முதல்நாள் பாத்தாம் - புத்த மதியத்தின் மொத்த வேண்டுதலும் “சாமு, பெட்டி எப்பக் கிடைக்கும்?” ஆளுக்கு அஞ்சு ஊதுபத்தி. அறம்பாடவும் வாய்ப்பிருக்கு. புதுமைத் தேனீ அண்ணா தரையில் படுத்து தர்ணா. ஆடிப்போய்விட்டார் புத்தர். என நகைச்சுவைக் கவிதையாகத் தெரிவித்தார்.

‘விதைகள்’ மாணவர்களும் இப்பயணத்தில் கலந்துகொண்டனர். சிங்கப்பூர் கவிஞர்கள் ஒன்றிணைந்து கடல் தாண்டிய சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த கவிமாலையின் முயற்சி பலருக்கும் நினைவில் நிற்கும் நிகழ்வாக அமைந்தது.  

செய்தி: செவியின்பம் சங்கீதா
குறிப்புச் சொற்கள்