விளையாட்டுப் பொம்மைகளைச் சேகரிப்பதை ஒன்பது வயதிலிருந்து தொடங்கிய டோபி லிம் கியான் பூன், 45, இன்னும் அவற்றைச் சேகரித்து வருகிறார். புக்கிட் பர்மாயில் உள்ள தனது சிறிய வீட்டில் இயந்திர மனிதப் பொம்மைகள், ‘லெகோ’, ‘டிரான்ஸ்ஃபோர்மர்ஸ்’ பொம்மைகள் என திரு லிம்மை சூழ்ந்துள்ளன.
“எல்லா பொம்மைகளிலும் எனக்கு இயந்திர மனிதப் பொம்மைகளை மிகவும் பிடிக்கும். குறிப்பாக, ஜப்பானிய இயந்திர மனிதப் பொம்மைகள் என்னை ஈர்க்கின்றன,” என்றார் இவர்.
தொடக்கப்பள்ளியில் தொடங்கிய இந்தப் பொழுதுபோக்கு, தொடர்ந்து உயர்நிலைப் பள்ளியிலும் தொடர்ந்த நிலையில், படிப்பில் கவனம் செலுத்துமாறு திரு லிம்முக்கு இவரின் தந்தை அறிவுறுத்தினார்.
“இருப்பினும், நான் தேர்வுகளில் சிறப்பாகச் செய்தால் என் தந்தை எனக்கு மேலும் பல பொம்மைகள் வாங்கித் தருவார்,” என்று சிரித்தபடி கூறினார் திரு லிம்.
2000ல் அடிப்படை ராணுவப் பயிற்சி மேற்கொண்டபோது இவர் கடுமையான மூளை அழற்சி, மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இவரது வாழ்க்கை திசை திரும்பியது.
“ஏறக்குறைய இரு வாரங்கள் நான் உணர்விழந்த மயக்க நிலையில் இருந்தேன். எழுந்த பிறகு என் தசைகள், நரம்புகள் எல்லாம் பலவீனமானதால் நான் சக்கர நாற்காலி பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது,” என்றார் திரு லிம்.
உடல் ரீதியாக ஏற்பட்ட தாக்கம் இவரது பேரார்வத்தைப் பாதிக்கவில்லை. தொடர்ந்து இவர் பொம்மைகளைச் சேகரித்து வந்தார். ஆனால், சக்கர நாற்காலியில் இவரால் வெகுதூரம் செல்ல முடியவில்லை. இதனால் இவரது பொம்மை சேகரிப்பு சற்று குறைந்தது.
2013ல் திரு லிம்மின் தந்தை இயற்கை எய்தினார். தந்தையின் இழப்பு இவரை மிகவும் பாதித்தது.
தொடர்புடைய செய்திகள்
“என் தந்தை எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். அவரின் நினைவாக நான் மேலும் பல ‘விண்டேஜ்’ இயந்திர மனிதப் பொம்மைகள் சேகரிக்கத் தொடங்கினேன்,” என்று நினைவுகூர்ந்தார் திரு லிம்.
உடற்குறையால் சில சமயங்களில் தனது வட்டாரத்தில் உள்ள குப்பைத் தொட்டிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட விளையாட்டுப் பொம்மைகளை இவர் தேடி மீட்பார்.
“வாரத்தில் ஒருமுறை, நான் சேகரித்த பொம்மைகளுடன் விளையாடுவேன். எனக்கென ஒரு கனவு உலகை உருவாக்கி பொம்மைகளை அதில் ஈடுபடுத்துவது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு,” என்று கூறினார் திரு லிம்.
2006ல் சிம் பல்கலைக்கழகத்திலிருந்து வணிகத்துடன் ஆங்கிலத்தில் பட்டயக் கல்வியை முடித்தார் திரு லிம். ஆனால், வேலை வாய்ப்புகள் இவருக்கு குறைவாகவே இருந்தன.
“எனக்கு கல்வியில் அதிக ஆர்வம் உள்ளது. தற்போது நான் மாணவர்களுக்கு பகுதி நேர பயிற்சி வகுப்புகளை இணையம்வழி நடத்துகிறேன்,” என்றார் இவர்.
பொம்மைகளைச் சேகரிக்கும் ஆர்வலர்கள் உண்டு. கணக்கில்லாத பொம்மைகளைச் சேகரித்துள்ள திரு லிம், இன்னும் பொம்மைகளைச் சேகரிக்க விரும்புவதாகக் கூறினார்.
உடல்நலம் குன்றிவரும் தம் தாயாருக்காக நிதி திரட்ட சிரமப்படும் திரு லிம், சில பொம்மைகளை விற்று கரைசேர முற்படுகிறார்.
“பயன்படுத்தப்பட்ட பொம்மைகளுக்கு மறுவாழ்வு அளிப்பது என் நோக்கம். அதுமட்டுமின்றி, அவற்றைச் சேகரிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியை மற்ற பொம்மை ஆர்வலர்களுடன் பகிர நான் விரும்புகிறேன்,” என்றார் திரு லிம்.