பிஞ்சு மனங்களில் வாசிப்பு விதை

எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்கும் சிறுவர் நூல் எழுத்தாளர்கள் 

பிஞ்சு மனங்களில் வாசிப்பு விதை

4 mins read
bcf33d46-80d2-48c8-b0e6-5cd7b8caad7f
கவிஞர் பிரம்மகுமாரின் (நடுவில்) பயிலரங்கில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள். - படம்: ஸ்ரீதர்

வாசிப்புப் பழக்கத்தைச் சிறுவயதிலேயே விதைக்க உதவும் சிறுவர் கதைகளை முன்னிலைப்படுத்தியது, ஜூன் 19 முதல் 21 வரை சிங்கப்பூர்ப் புத்தகப் பதிப்பாளர் சங்கமும் நன்யாங் நுண்கலைக் கழகமும் (நாஃபா) இணைந்து ஏற்பாடுசெய்த சிங்கப்பூர்ச் சிறுவர் நூல் விழா.

மூன்றாம் ஆண்டாக நடைபெற்ற இவ்விழாவில் பயிலரங்குகளை நடத்திய எழுத்தாளர்களில் இரு தமிழ் எழுத்தாளர்களும் அடங்கினர்.

‘கதைகளில் உங்கள் இதயத்தை அர்ப்பணியுங்கள்’ எனும் தலைப்பில் கவிஞர் பிரம்மகுமார் பாலகிருஷ்ணனும், ‘தமிழில் கதைகள் சொல்வோம்’ எனும் தலைப்பில் எழுத்தாளர் ஜான்சிராணி தனபாலும் பயிலரங்குகளை நடத்தினர். 

விழாவின் இரு நாள்களிலும் பெற்றோர், சிறார், எழுத்தாளர்கள், பதிப்பாசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

சிறார் கதைகளும் சிறுகதைகளும்

“கட்டுரையைக் கதையாக மாற்றுவதற்குத் தேவையான முக்கிய அம்சங்கள் உணர்வுகளும் உரையாடல்களும்,” என்றார் திரு பிரம்மகுமார்.

சிறுவர்களுக்கான கதைகளில் பொருத்தமான திருக்குறள்களை இயல்பாக இணைக்கலாம் என்றும் அவர் கூறினார். அழகான நூல் அட்டையை வடிவமைக்கும்படியும் அவர் எடுத்துரைத்தார்.

பெரியவர்களுக்கான சிறுகதைகள் பற்றியும் அவர் குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டார். தொடக்க வரிகள், திருப்புமுனை, வாசகர் இடைவேளை, முடிக்கும் விதம் போன்றவை சிறுகதையின் முக்கியக் கூறுகள் என்று அவர் கூறினார்.

“நாரதர் கலகம் நன்மையில் முடியும் எனச் சொல்வார்கள் அல்லவா? கதையில் திருப்பம் இருக்கவேண்டும். வாசகர் சிந்திக்க இடைவேளை கொடுக்கவேண்டும். ஒரு தாக்கம் ஏற்படுத்தும் வகையில் கதையை நிறைவுசெய்ய வேண்டும்,” என்றார் திரு பிரம்மகுமார்.

பெற்றோருடன் பயிலரங்கில் கலந்துகொண்ட சகோதரர்கள் சாயாந்தினி, சாத்விக். தாயார் ரதியா, ‘அடுத்த அத்தியாயம்’ எனும் கவிஞர் பிரம்மகுமாரின் சிறுகதையின் சுருக்கத்தைப் படைக்கவும் செய்தார்.
பெற்றோருடன் பயிலரங்கில் கலந்துகொண்ட சகோதரர்கள் சாயாந்தினி, சாத்விக். தாயார் ரதியா, ‘அடுத்த அத்தியாயம்’ எனும் கவிஞர் பிரம்மகுமாரின் சிறுகதையின் சுருக்கத்தைப் படைக்கவும் செய்தார். - படம்: ரவி சிங்காரம்

கதையெழுத்தின் நுட்பங்களைப் பற்றித் திரு பிரம்மகுமார் பகிர்ந்துகொண்ட நிலையில், சிறாருக்கான வாசிப்பு மற்றும் கதைசொல்லலின் முக்கியத்துவத்தைத் திருவாட்டி ஜான்சிராணி எடுத்துரைத்தார். 

தமிழில் நடத்தப்பட்ட பயிலரங்கில் கென்யாவைச் சேர்ந்த எழுத்தாளர் தெரேசியா மாசி கலந்துகொள்வார் எனத் திருவாட்டி ஜான்சிராணி எதிர்பார்க்கவில்லை. ஆகையால், தெரேசியாவுக்காகத் தமது பயிலரங்கை ஆங்கிலத்தில் அவர் நடத்தினார். 

“குழந்தைப் பருவத்தில் தங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் பலருக்கு நினைவில்லாவிட்டாலும், கதைகளில் இடம்பெற்ற அழகான படங்கள் தங்களை ஈர்த்ததாகப் பயிலரங்கில் கலந்துகொண்டவர்கள் கூறினர்,” என்றார் திருவாட்டி ஜான்சிராணி.

“சிங்கப்பூரில், 12 மாதங்கள் வரையிலான வயதுடைய குழந்தைகளுக்கான தொட்டுணரும் நூல்கள் தமிழில் அவ்வளவாக இல்லை,” எனக் கூறிய திருவாட்டி ஜான்சிராணி, ஐந்து வயது வரையிலான சிறுவர்களுக்கு அட்டை நூல்களும் ஒன்பது வயது வரையிலானோருக்கு  விலங்குக் கதைகள், சாகசக் கதைகள், தேவதைக் கதைகளும் பொருத்தமானவை என்றார்.

‘நாளுக்கு ஒரு சிறுகதைப் படியுங்கள்’

“பிள்ளைகளைப் பெற்றோர் உற்சாகப்படுத்தவேண்டும். என் மகன் எழுத்தில் கொண்டுள்ள ஆர்வத்தை நான் கிள்ளி எறியக்கூடாது. “நீ என்ன தலைப்பில் எழுதப் போகிறாய்?” போன்ற கேள்விகளை எழுப்பி நாம் அந்த விதையை விதைக்கவேண்டும். அவர்களிடம் அதிகக் கதைகளையும் சொல்லவேண்டும்,” எனக் கூறிய திரு பிரம்மகுமார், ஏழு நாள்கள் அன்றாடம் ஒரு சிறுகதையைப் படித்து, எட்டாவது நாள் சுயமாகச் சிறுகதை எழுதும் சவாலை விடுத்தார்.

“எப்போதும் பேனாவும் கையேடும் உங்களிடம் இருக்கவேண்டும்; அல்லது கைப்பேசிக் குறிப்பேட்டில் சிந்தனைகளை எழுதுங்கள். நீங்கள் எழுத்தாளராக முடிவெடுத்தால், அதில் உடும்புப் பிடியாக இருக்கவேண்டும். பலரிடமிருந்து பல கருத்துகள் வரும். அவற்றால் கவனம் சிதறாதீர்கள்; தொடர்ந்து எழுதுங்கள்,” என அவர் அறிவுறுத்தினார்.

“வாசிப்புப் பழக்கத்தைச் சிறுவயதிலேயே ஆரம்பிக்கவேண்டும். பள்ளி விடுமுறைகளில் நான் என் பேரப்பிள்ளைகளை நூலகத்துக்கு அழைத்துச் செல்வேன். பாட்டி ஏதேனும் பரிசு தந்தால் அது நூலாகத்தான் இருக்கும் என்று அவர்களுக்கும் தெரியும். அதுமட்டுமல்லாமல், காணொளி விளையாட்டு நேரத்தையும் கண்காணிக்கவேண்டும்,” என்றார் திருவாட்டி ஜான்சிராணி. 

திருவாட்டி ஜான்சிராணியின் பயிலரங்கில் கென்யாவைச் சேர்ந்த எழுத்தாளர் தெரேசியா மாசி (இடது) கலந்துகொண்டார்.
திருவாட்டி ஜான்சிராணியின் பயிலரங்கில் கென்யாவைச் சேர்ந்த எழுத்தாளர் தெரேசியா மாசி (இடது) கலந்துகொண்டார். - படம்: ஜான்சிராணி
பயிலரங்கை நடத்தும் திருவாட்டி ஜான்சிராணி.
பயிலரங்கை நடத்தும் திருவாட்டி ஜான்சிராணி. - படம்: சிங்கப்பூர்ப் புத்தகப் பதிப்பாளர் சங்கம்

சிறுவர்களிடம் வாசிப்பையும் படைப்பாற்றலையும் வளர்க்க வேண்டும் எனும் நோக்கத்தில் இரு எழுத்தாளர்களும் வலியுறுத்திய கருத்து, பயிலரங்குகளில் கலந்துகொண்டவர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

பயிலரங்கில் கலந்துகொண்ட உடன்பிறப்புகள் சாயாந்தினி, 12, சாத்விக், 9, இனி தமிழில் அதிகம் எழுத முயற்சி செய்யப்போவதாகக் கூறினர். 

பல கதைகளை இன்னும் நூல்களாக வெளியிடாமல் வைத்துள்ள திருவாட்டி ஜான்சிராணி, சிறுவர் நூல் எழுத்தாளர்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்றார்.

எழுத்தாளர்களைப் பற்றி

கல்வித்துறையில் 35 ஆண்டுகால அனுபவம் கொண்ட திருவாட்டி ஜான்சிராணி, முன்பு வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றியவர். ஓய்வுபெற்றதும் சிறுவர் நூல் எழுத்தாளரானார். 

அவர் ஆங்கிலத்தில் ஒரு நூலையும் தமிழில் நான்கு நூல்களையும் எழுதியுள்ளார். அவற்றில் ஒன்றான ‘டிராகனைத் தேடி’ சிறார் நாவல், தேசியக் கலை மன்றமும் சிங்கப்பூர் புத்தக மன்றமும் இணைந்து வழங்கிய ‘பியோண்ட் வொர்ட்ஸ்’ திட்டம்வழி பிறந்தது. அந்த நூல், தமது உறவினர் மகனின் பள்ளி நூல் பட்டியலில் இடம்பெற்றதை அவர் மலரும் நினைவாகக் கருதுகிறார்.

கவிஞர் பிரம்மகுமார், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பேச்சுக்கலையில் 25 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். அவர் அனைத்துலக டோஸ்ட்மாஸ்டர்ஸ் இயக்கத்தின் மேன்மைமிகு சொல்வேந்தர் பட்டத்தையும் மும்முறை பெற்றுள்ளார்.

காலத்திற்கேற்ப தம்மை நவீனப்படுத்திவருகிறார் கவிஞர் பிரம்மகுமார். கவிதைகள் எழுதுவதோடு நின்றுவிடாமல், தம் கவிதைகளைச் செயற்கை நுண்ணறிவு மூலம் பாடல்களாக்கி @brahmalogam ‘யூடியூப்’ தளத்திலும் பதிவுசெய்துவருகிறார். இன்றும் அன்றாடம் காலை 4 மணிக்கு எழுந்து கவிதைகள் அல்லது கதைகளை அவர் எழுதுகிறார்.

குறிப்புச் சொற்கள்