‘செமாங்காட் 2.0’: இளையர்கள் வெளிப்படையாகக் கருத்துகளை முன்வைக்க ஒரு தளம்

‘செமாங்காட் 2.0’: இளையர்கள் வெளிப்படையாகக் கருத்துகளை முன்வைக்க ஒரு தளம்

2 mins read
08fe44a1-70fd-4039-a640-ed9ee4548264
தேசிய அடையாளம் குறித்து இளையர்கள் மனம் விட்டுப் பேசுவதற்கு வாய்ப்பளிப்பது ‘செமாங்காட் 2.0’ கலந்துரையாடலின் நோக்கம். - படம்: தமிழர் பேரவை

சிங்கப்பூரில் வாழும் தமிழ் இளையர்களின் மனநிலையை ஆழமாகப் புரிந்துகொள்ளவும் தேசிய அடையாளம், நாட்டுப் பற்று முதலியவை பற்றிய அவர்களின் கருத்துகளை வெளிப்படுத்தவும் தளம் ஒன்று அமைக்கப்படுகிறது.

தமிழர் பேரவையும் மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவும் இணைந்து அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன.

தமிழ் பேசும் இளையர்களுக்காக, ‘செமாங்காட் 2.0’ அதாவது ‘எழுச்சி 2.0 - இளையர் குரல்’ என்னும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அவை ஏற்பாடு செய்கின்றன.

கலந்துரையாடல் இம்மாதம் (மே) 16ஆம் தேதி, கேலாங் ஈஸ்ட் நூலகத்தில் நடைபெறவிருக்கிறது. நிகழ்ச்சியில், 18 வயதிலிருந்து 35 வயதிற்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். கலந்துரையாடலில் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கிறார்.

இளையர்களிடத்தில் எழுச்சி உணர்வை மீட்டெடுப்பது குறித்து உரையாடல்கள் நடத்தப்படும். அத்துடன், நிலையற்ற உலகில் இக்கால இளையர்கள் எதிர்நோக்கும் சவால்கள், அதனை எதிர்கொள்ளக் கையாளும் உத்திகள், அரசாங்கம் வழங்கும் உதவிகள் போன்றவற்றைப் பற்றியும் பேசப்படும். பல்லினச் சமுதாயத்தில் வளரும் இளையர்கள் அச்சூழலைத் தங்களுக்குச் சாதகமாக அமைத்துக்கொள்வதைப் பற்றிய உரையாடல்களும் இடம்பெறும்.

கலந்துரையாடலில், இளைஞர்கள் எந்தவித அச்சமும் இன்றி, கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளப் பாதுகாப்பான தளம் உருவாக்கப்படுகிறது. இங்கு முன்வைக்கப்படும் கருத்துகள் முறையாகத் தொகுக்கப்பட்டு, சமூக அமைப்புகளின் தலைவர்களுடன் பகிர்ந்துகொள்ளப்படும். யார் கூறினார்கள் என்பது வெளியிடப்படமாட்டாது.

“இளைய தலைமுறையினருக்கு இடையே ‘எழுச்சி’ என்ற புத்துணர்வை மீண்டும் விதைக்கும் நோக்கத்துடன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழர் என்ற அடையாளத்தில் வேறூன்றி, அதிகரித்துவரும் உலகமயமாக்கலுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்ள உதவும் நோக்கத்துடன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம்,” என்றார் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் விக்னேஷ்வரன் மணியம்.

குறிப்புச் சொற்கள்