தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நெருங்கிய உறவுகளால் நிதி மோசடிக்கு ஆளாகும் மூத்தோர்

3 mins read
b18f5054-5a02-4a25-9d11-3bc1d81d4798
மூத்தோர் சிலருக்கு இணையம்வழி வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தத் தெரியாததும் தங்களுடைய கைப்பேசி போன்ற உடைமைகள் அவர்கள் வசம் இல்லாததும் சவாலாக அமைகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அரசாங்கத் துறையில் பல்லாண்டுகாலம் பணிபுரிந்த ஆடவர் ஒருவர் அண்மையில் ஓய்வுபெற்று சுயமாக ஒரு வர்த்தகத்தைத் தொடங்கினார். வேலை வாய்ப்புகள் அதிகம் கிடைக்காத தன் மகனை வர்த்தகத்தில் சேர்த்துக்கொண்டார்.

வர்த்தகம்வழி சேரவேண்டிய லாபம் சிறிது நாள் கழித்து தமக்கு வரவில்லை என்று உணர்ந்த ஆடவர், அதுகுறித்து விசாரிக்கத் தொடங்கினார்; வர்த்தகம்வழி ஈட்டிய லாபம் அனைத்தும் தன் மகனுடைய வங்கிக் கணக்குக்கு செல்கிறது என்று அவர் கண்டறிந்தார்.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடியில் முடிந்தது.

சிங்கப்பூரில் மூத்தோர் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அவர்களிடையே நிலவும் நிதி மோசடிச் சம்பவங்கள் கவலைக்குரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

பெரும்பாலும் முதியவர்களுக்கு எதிரான மோசடிச் சம்பவங்கள் ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது நம்பகமான ஒருவரால் ஏற்படுகின்றன.

பாதிக்கப்பட்ட முதியவர்கள் பெரும்பாலும் குற்றவாளிகளையே தங்கள் பராமரிப்பாளர்களாக நம்பியிருப்பதால் இதுபோன்ற வழக்குகளைக் கண்டறிவது கடினம் என்றார் 29 ஆண்டுகளாகச் சட்டப்பணியில் ஈடுபட்டு வரும் வழக்கறிஞர் சுசீலா கணேசன், 54.

“சில சமயம் மோசடி புரிந்தவர்கள் தங்கள் சொந்த பிள்ளை என்பதால் அவர்கள் நடவடிக்கை எடுக்க மறுப்பதுண்டு. குடும்ப உறவு என்பதால் இதுபோன்ற வழக்குகள் மிக சிக்கலானவை,” என்றார் திருவாட்டி சுசீலா.

அறக்கட்டளை, சொத்து முகவர்கள் சங்கம் 2023ல் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. மூத்தோருக்கு நிதி திட்டமிட உதவும் 800 முகவர்களில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினர், நிதி மோசடியால் பாதிக்கப்பட்ட மூத்தோரைச் சந்தித்துள்ளதை ஆய்வு கண்டறிந்தது. இதுபோன்ற மோசடிகள் கடந்த ஈராண்டுகளாக அதிகரித்துள்ளதாகவும் ஆய்வு கூறியது.

சில நேர்மையான உறவினர்கள், இதர நிதி நிறுவனங்கள் இந்தச் சம்பவங்களைப் பற்றி அறிந்து அதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பதால்தான் இதுபோன்ற சில சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன என்றார் திருவாட்டி சுசீலா.

“மூத்தோரைக் கவனித்துக்கொள்ள வேண்டியவர்களே அவர்களை மோசடிக்கு ஆளாக்குவது மிகவும் வருத்தமளிக்கும் ஒன்று,” என்று அவர் கருத்துரைத்தார்.

பல முதியவர்களுக்கு வங்கிச் சேவைகளை எவ்வாறு பயன்படுத்துவது எனத் தெரியாது. இதனால் பெரும்பாலான வங்கி ஊழியர்கள் வழக்கத்திற்கு மாறான செயல்களை விழிப்புடன் கவனிக்கப் பயிற்சி பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி, பொதுவாக பணப் பரிவர்த்தனைகள் குறித்து குறுஞ்செய்திவழி தகவல் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், மூத்தோர் சிலருக்கு இணையம்வழி வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தத் தெரியாததும் தங்களுடைய கைப்பேசி போன்ற உடைமைகள் அவர்கள் வசம் இல்லாததும் சவாலாக அமைகிறது.

முதியவர்களுக்கு நேரிடும் நிதி மோசடி குறித்த சட்டங்கள் இன்னும் கடுமையாக இருக்க வேண்டும் என்றார் திருவாட்டி சுசீலா.

முதியவர்களைக் குறிவைக்கும் நிதி மோசடிகளை தனிப்பட்ட முறையில் கையாளும் நிறுவனங்கள், அமைப்புகள் அதிகம் தேவை என்று அவர் பரிந்துரைத்தார்.

“நிதி மோசடி குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். ஆனால், அதற்கு முதியவர்கள் முன்வரவேண்டும்,” என்று திருவாட்டி சுசீலா வலியுறுத்தினார்.

அதுமட்டுமின்றி நிதி, சொத்துகளுக்கு முன்கூட்டியே திட்டமிடுவதால் மோசடிக்கு ஆளாகும் அபாயம் குறையும் என்றார் அவர்.

நிதி மோசடிகள் உட்பட தன் அன்புக்குரியவர்களால் துன்புறுத்தப்படுபவர்கள், குடும்பச் சேவை நிலையம் அல்லது தேசிய வன்முறை, பாலியல் தொல்லைக்கு எதிரான உதவி எண்ணைத் தொடர்புகொண்டு (1800-777-0000) உதவி நாடலாம்.

குறிப்புச் சொற்கள்
நிதி மோசடிமூத்தோர்சமூகம்