ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தின் ஏழாவது திருக்குடமுழுக்கு அடுத்த ஆண்டு (2027) பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதனை முன்னிட்டு, ஆலயத்தில் விரிவான திருப்பணிகளும் புதுப்பிப்புப் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
சிலோன் ரோட்டில் அமைந்துள்ள இந்தக் கோவிலில் எதிர்வரும் திருக்குடமுழுக்கை முன்னிட்டு பாலாலய, பாலஸ்தாபனச் சடங்குகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தின் வருடாந்தர மகோற்சவம் திங்கட்கிழமை (ஜூன் 1) நிறைவை எட்டியது.
அது மே 22ஆம் தேதி தொடங்கிப் பத்து நாள்களுக்கு நடைபெற்றது.
மே 26ஆம் தேதி மாலையில், திருமுறை இசையுடன் வழிபாடும் பின்னர் மே 28ஆம் தேதி மாலையில் கைலாய வாகனத் திருவிழாவும் நடந்தேறின.
சிங்கப்பூரில் அத்தகைய திருவிழா நடத்தப்படும் ஒரே கோயிலாக ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம் திகழ்கிறது.
மே 29 அன்று, வேட்டைத் திருவிழாவும் சப்பறத் திருவிழாவும் நடைபெற்றன. மே 30ஆம் தேதி தேர்த் திருவிழா இடம்பெற்றது.
தொடர்புடைய செய்திகள்
மகோற்சவத்தின் பத்தாவது நாளான மே 31ல் காலை 10 மணிக்குத் தீர்த்தத் திருவிழா நடைபெற்றது.
ஆகம விதிகளின்படி ஆலயத் திருப்பணிகள் தொடங்குவதற்கு முன்னர், பாலாலயப் பூசைகளும் பாலஸ்தாபனச் சடங்குகளும் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, பாலாலயப் பூசைகள் இம்மாதம் 5ஆம் தேதி ஆரம்பமாகின்றன. ஜூன் 7ஆம் தேதி காலை மணி 7.20 முதல் பாலஸ்தாபன நிகழ்வு நடைபெறவுள்ளது.
19ஆம் நூற்றாண்டில் செண்பக மரத்தடியில் விநாயகப் பெருமானின் திருவுருவத்திற்கு பக்தர்கள் செய்த வழிபாட்டிலிருந்து ஆலய வரலாறு தொடங்கியது.
கூரை வேயப்பட்ட ஆலயமாக இருந்த அது, சோமநாதர் முத்துக்குமார பிள்ளை என்பவரின் தலைமையில் கட்டடமாக மாற்றப்பட்டதாககக் கூறப்படுகிறது.
முதலாவது குடமுழுக்கு 1930 ஜனவரி 3ல் நடந்ததாக ஆலய நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.
ஆர்வமுள்ள பக்தர்கள் ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தின் சமூக ஊடகங்களை (https://linktr.ee/ssvt_sg) அணுகி, உடனுக்குடன் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

