இயலாமைக்கு இறகாகும் சேவை

2 mins read
சமூக சேவை என்பது ஒருவரது தனிப்பட்ட நற்பண்பு மட்டுமன்று, அது சமுதாயத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கான தூணாகும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 18ஆம் தேதி உலகம் முழுவதும் சமூக சேவையாளர் தினம் கொண்டாடப்படுகிறது. சமூக சேவையாளர்களின் அர்ப்பணிப்பு, தியாகம், சமூக நீதிக்கான அவர்களது முயற்சிகளைப் பாராட்டுவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. துன்புறும் மக்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், சமுதாயத்தைக் கட்டியெழுப்பி, மனிதாபிமானம், சமத்துவம், சமூக மாற்றத்திற்கான வழியையும் சமூகச் சேவையாளர்கள் அமைக்கின்றனர். அனைத்துச் சமூக சேவையாளர்களின் பொறுப்பு, கடமை, விடாமுயற்சியைக் கொண்டாடும் இந்தச் சிறப்பு நாளில் ஸ்ரீனாவின் பயணத்தை இப்பதிவு கூறுகிறது.
8c72d903-40b0-433d-b8c1-c5a7ffc6c86b
சமூக சேவையாளராக இன்று பலரின் வாழ்வில் மாற்றம் கொண்டுவரும் எஸ்.எம்.ஸ்ரீனா, 31, தனது பணியை வேறொரு பாதையில் தொடங்கினார். - படம்: அனுஷா செல்வமணி

சமூக சேவையாளராக இன்று பலரின் வாழ்வில் மாற்றம் கொண்டுவரும் எஸ்.எம்.ஸ்ரீனா, 31, தனது பணியை வேறொரு பாதையில் தொடங்கினார்.

முன்பு இவர் இளம்பருவ, ஆரம்பக்கால தலையீட்டுத் துறையில் பணியாற்றியபோது, ‘க்ரிடுஷா’ எனப்படும் ஒரு அரியவகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளையைக் கவனித்து வந்தார்.

இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பூனையின் அழுகையைப்போல உயர்ந்த தொனியில் அழுகை வரும்.

மேலும், குறைந்த நோயெதிர்ப்பாற்றல், குறுகிய மூச்சுக்குழாய், பலவீனமான தசைகள் போன்றவற்றால் அக்குழந்தைகள் அவதிப்படுவார்கள்.

அப்பிள்ளையைக் கவனித்தபோது சவால்கள் அதிகம் இருந்தாலும், அதன்மூலம் பலவற்றைக் கற்றுக்கொண்டார் ஸ்ரீனா.

அத்தகைய குழந்தைகளை அதிகம் கவனிக்கத் தொடங்கிய இவர், அதிக அனுபவத்தையும் பெற்றார்.

இதற்கு அப்பாற்பட்டு மதியிறுக்கம், உடற்குறையுள்ள சிறுவர்கள், பெருமூளை வாதம் எனக் கூடுதல் கவனம் தேவைப்படும் சிறுவர்களைக் கையாண்டு வந்த ஸ்ரீனாவுக்கு இன்னும் அதிகம் செய்ய வேண்டுமென்று முனைப்பு இருந்தது.

சமூகப் பணியில் பட்டம் பெற்றவுடன் ஸ்ரீனா நரம்பியல் மாறுபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு எளிதில் செழிக்கக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்தித் தர, சமூக சேவையாளராகப் பணியைத் தொடங்கி அவர்களுக்குக் கைகொடுத்து வருகிறார்.

இத்துறையில் தனது ஐந்தாவது ஆண்டை தொடங்கியுள்ள ஸ்ரீனா, வளர்ச்சியில் தாமதம் காணும் கைக்குழந்தைகளிலிருந்து ஆறு வயது வரையிலான குழந்தைகள் வரை கவனித்து வருகிறார்.

குழந்தைகளின் குடும்ப உறுப்பினர்கள், ஆரம்பத் தலைதலையீட்டாளர்கள் (early interventionist), சுகாதாரப் பராமரிப்புத் துணை நிபுணர்கள் ஆகியோருடனும் ஸ்ரீனா பணியாற்றி வருகிறார்.

ஃபெர்ன்வேல் லிங்கில் அமைந்துள்ள ‘ஏவா’ ஆரம்பக்கால தலையீட்டு நிலையத்தில் பணிபுரியும் ஸ்ரீனா, அன்றாடம் பலதரப்பட்ட பிள்ளைகளைச் சந்திக்கிறார்.

“குடும்ப வன்முறை பின்னணியிலிருந்து வரும் பிள்ளைகள், மருத்துவப் பிரச்சினை உடையோர் என அன்றாடம் நான் பலதரப்பட்ட பிள்ளைகளின் பயணங்களில் கூடவே இருக்கிறேன். இதயத்திலிருந்து வரும் அன்பு என் வேலைக்கு அதிகம் தேவைப்படுகிறது,” என புன்முறுவலுடன் ஸ்ரீனா கூறினார்.

பிள்ளைகளைக் கவனிப்பதற்கு அப்பாற்பட்டு அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆதரவுக் கரமாக விளங்கி வருகிறார் ஸ்ரீனா.

“பெரும்பாலான குடும்பங்களில் பராமரிப்பாளர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும். அவர்களுக்கும் நான் ஆதரவளிப்பேன். குடும்பங்களுடன் பயணம் செய்வது எனது தலையாயப் பொறுப்பு,” என ஸ்ரீனா சொன்னார்.

சமூக சேவையாளர் தினம் கொண்டாடப்படுவதன் மூலம் தன்னைப் போன்றவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதாகச் சொன்ன ஸ்ரீனா, தனது பணியை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முனைகிறார்.

ஒருவர் சமூக சேவையாளராக விரும்பினால், அவர் முதலில் தொண்டூழியத்தில் தன் பயணத்தைத் தொடங்க வேண்டுமென பரிந்துரைத்த ஸ்ரீனா, தனது துறையில் அதிக தொழில்நுட்ப அம்சங்களும் கூடுதலான மனிதத் தொடர்பும் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றார்.

குறிப்புச் சொற்கள்