வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புப் பேட்டைகளுக்கு மத்தியில் மக்களோடு பின்னிப் பிணைந்துள்ள தரும முனீஸ்வரன் ஆலயம், தன்னார்வக் கொடைகளை வழங்கிய பொதுமக்களுக்கு பல நன்மைகளைத் திருப்பிச்செய்யும் ஒரு சமூகத் தளமாக உருவெடுத்துள்ளது.
கல்விப் பணியில் முன்னோடி
2003ஆம் ஆண்டு முதல், இன, சமய வேறுபாடின்றி, ஏறத்தாழ 1,400 மாணவர்களுக்கு 1 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான கல்வி நிதியுதவிகளை ஆலயம் வழங்கியுள்ளது.
நிதியுதவியுடன் மட்டும் நின்றுவிடாமல் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கும்போது அவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்விச் சிறப்பாளர் விருதுகளையும் கூடுதல் தொகையையும் வழங்கி வருகிறது.
அதோடு, சிண்டாவுடன் இணைந்து மாணவர்களுக்குத் தரமான பயிற்சி வகுப்புகளையும் இவ்வாலயம் நடத்தி வருகிறது.
நிரந்தரத் தீர்வை நோக்கிய சமூக உதவி
வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவும் நோக்கில், ‘நியூலைஃப்’ என்ற சமூகச் சேவை அமைப்போடு இணைந்து தரும முனீஸ்வரன் ஆலயம் பணியாற்றுகிறது.
நிதியுதவி கோரி வருபவர்களின் நிலையைத் தகுந்த வல்லுநர்களைக் கொண்டு ஆராய்ந்து அவர்களுக்குத் தேவையான நீண்டகாலத் தீர்வுகளை ஆலயம் வழங்குகிறது.
“உதவி கோரி எங்களை நாடும் குடும்பங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே எங்களின் இறுதி இலக்கு. குறுகியகாலப் பலன்களைவிட, சமூகச் சேவை அமைப்புகளுடன் இணைந்து முறையான வழிகாட்டுதல்களை வழங்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை நிரந்தரமாக உயர்த்துவதே எங்களின் நோக்கம்,” என்றார் ஆலய நிர்வாகக் குழுவைச் சேர்ந்த திரு யோகநாதன் அம்மையப்பன், 56.
மாதந்தோறும் 6 முதல் 10 குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசிய மளிகைப் பொருள்களை நேரடியாக வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆலயம் துணை நிற்கிறது.
கலை, கலாசாரத்தைப் பேணும் சமூக மையம்
கலையையும் கலாசாரத்தையும் பேணும் சமூகத் தளமாகவும் இவ்வாலயம் திகழ வேண்டும் என்பதில் கோவில் நிர்வாகம் உறுதியாக உள்ளது.
இந்நோக்கை ஒட்டியே ‘தர்மா இசை, நடனக் கழகம்’ இயங்கி வருகிறது. குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்குப் பல்வேறு கலைகளை இது பயிற்றுவிக்கிறது.
ஒவ்வொரு வாரமும் 200க்கும் மேற்பட்டோர் ஆலயத்தில் நடைபெறும் சமூக நிகழ்ச்சிகளிலும் வகுப்புகளிலும் கலந்து கொள்கின்றனர். அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றுகூடும் சமூக மையமாகவும் தரும முனீஸ்வரன் ஆலயம் மிளிர்கிறது.

