சிங்கப்பூர் இந்தியர் சங்கம் தனது ஐந்தாவது தேசிய தின விளையாட்டு விழாவை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) சிறப்பாக நடத்தி முடித்தது.
‘நம் நாட்டிற்காக, நம் சமூகத்திற்காக’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற இவ்விழாவில் காற்பந்து, ஹாக்கி, கிரிக்கெட், ‘கேப்டன்ஸ் பால்’ உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன.
அனைத்து வயதினரும் குடும்பத்துடன் இணைந்து மகிழும் வகையில் பாரம்பரிய, நவீன விளையாட்டுகள் இடம்பெற்ற இலவசக் கேளிக்கைச் சந்தையும் அமைக்கப்பட்டிருந்தது.
ஏற்பாட்டாளர்களின் அர்ப்பணிப்பும் குடும்பத் தொண்டூழியமும்
இந்த விழாவின் வெற்றிக்கு எண்ணற்ற தொண்டூழியர்களின் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் காரணமாக அமைந்தன.
மனநலச் சவால்களை எதிர்கொண்டு போராடுபவர்களைச் சென்றடைந்து, அவர்களுக்குப் பாதுகாப்பான ஓர் இடத்தை உருவாக்குவதே சங்கத்தின் முக்கிய நோக்கம் என்று இவ்விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் சங்கத்தின் விளையாட்டுப் பிரிவுத் தலைவருமான ஜீவன் கெவின் கூறினார்.
இந்தத் தொண்டூழியப் பயணத்தில் ஒரு குடும்பம் ஒன்றிணைந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. முதலில் சங்கத்தின் பணிகளில் இணைந்த 52 வயது பீட்டர்ஸ் இல்லமாறன் சுப்பராயனைத் தொடர்ந்து அவரது மனைவி சுஜாதா நந்திதா பீட்டரும், 51, பங்களிக்கத் தொடங்கினார். அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி மகள் டயானா எஸ்டெல்லா பீட்டரும், 26, இப்போது விழாவின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்று அர்ப்பணிப்புடன் தொண்டாற்றி வருகிறார்.
“ஏற்பாடுகளில் பல சவால்கள் இருந்தாலும், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவரின் முகத்திலும், குறிப்பாகக் குழந்தைகளின் முகங்களில் மலரும் புன்னகையைப் பார்ப்பதே எனக்குக் கிடைக்கும் மிகப்பெரிய பலன்,” என்று டயானா மனநிறைவுடன் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாகச் சங்கத்தின் மேலாண்மைக் குழு உறுப்பினராக இருந்து வரும் திரு பீட்டர்ஸ், “சமூகத்திற்குத் திருப்பிக் கொடுக்கும் எண்ணத்துடன்தான் இதில் இணைந்தேன். இங்குச் சீனர்கள், மலாய்க்காரர்கள் எனப் பல இனத்தவர்கள் ஒன்றிணைந்து விளையாடுவதைப் பார்ப்பது பெருமையாக உள்ளது,” என்று பகிர்ந்துகொண்டார்.
“இங்கு வந்த பிறகு புதிய நண்பர்கள் பலர் கிடைத்தனர். பல்வேறு வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து விளையாடி உற்சாகமாக நேரத்தைச் செலவிடுவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று சங்க உறுப்பினரான திருவாட்டி சுஜாதா தெரிவித்தார்.
காற்பந்தின்வழி புதுவாழ்வு
காற்பந்து விளையாடும்போது காயமடைந்த 28 வயதுச் சங்க உறுப்பினர் கார்திகேசன், களத்தில் விளையாட முடியாவிட்டாலும் விழாவுக்கான விளம்பரப் பணிகளில் ஈடுபட்டுத் தனது பங்களிப்பை வழங்கினார்.
சண்டையிட்ட குற்றத்திற்காக எட்டு மாதங்கள் சிறைத்தண்டனையை நிறைவேற்றிய அவர், விடுதலையான பிறகு சமூகத்திற்குப் பயனுள்ள வகையில் வாழ வேண்டும் என்ற உறுதியுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்.
அவரது வாழ்க்கையில் அந்தத் திருப்புமுனையாகச் சிங்கப்பூர் இந்தியர் சங்கம் அமைந்தது. இவ்வாண்டு பிப்ரவரியில் சங்கத்தில் இணைந்து உறுப்பினர்களுடன் காற்பந்து விளையாடத் தொடங்கியதோடு, தொண்டூழியப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
“வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் நம்பிக்கையை இழக்கக்கூடாது. ஒழுக்கமும் கவனமும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும்,” என்று இளையர்களுக்குக் கூற விரும்புகிறார் கார்திகேசன்.
சங்க உறுப்பினர்கள் தமக்கு அளித்த ஆதரவை நினைவுகூர்ந்த அவர், “இந்தச் சங்கம் அனைவரையும் ஒன்றிணைக்கும் அழகிய தளம்,” என்றார்.
வயது வேறுபாடின்றி அனைவரையும் ஈர்த்த விளையாட்டுகள்
அன்றைய தினம் பிற்பகலில் மழை பெய்தபோதும் அதைப் பொருட்படுத்தாமல் பங்கேற்பாளர்கள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்.
பங்கேற்பாளர்களில் இருவரான ச. ஜூலியானா, 60, த. மகேஸ்வரி, 56, ஆகியோர் பெண்களுக்கான ‘கேப்டன்ஸ் பால்’ போட்டியில் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பங்கேற்பது தங்களுக்கு இரண்டாவது முறை என்று தெரிவித்த அவர்கள், இந்த ஆண்டு புதிய நட்புகளை உருவாக்கிய அனுபவம் மேலும் மகிழ்ச்சி அளித்ததாகக் கூறினர்.
“மூத்தவர்களும் இளையவர்களும் ஒன்றாக விளையாட இது சிறந்த வாய்ப்பாக அமைந்தது. அனைவருடனும் இணைந்து விளையாடியது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது,” என்று அவர்கள் தெரிவித்தனர்.
போட்டிகளில் பங்கேற்காவிட்டாலும், நண்பர்களை உற்சாகப்படுத்துவதற்காக வந்திருந்த ஆண்டர்சன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 16 வயது மாணவர் யுவன் பிரகாஷ், பல்லினச் சமூகத்தினர் ஒன்றுகூடி தேசிய தினத்தைக் கொண்டாடவும் புதிய நண்பர்களைச் சந்திக்கவும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் முக்கியப் பங்காற்றுவதாகக் குறிப்பிட்டார்.
முன்னாள் காற்பந்து வீரர்களின் பங்கேற்பு
இவ்விழாவின் முக்கிய அம்சமாகச் சங்கத்தின் மேலாண்மைக் குழுவும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்த அணி, 1993ஆம் ஆண்டின் சிங்கப்பூர் ‘டிரீம் டீம்’ அணியை எதிர்த்து விளையாடியது.
அதில் கலந்துகொண்ட முன்னாள் தேசியக் காற்பந்து வீரர் ஃபாண்டி அகமது, “நிறப் பாகுபாடுகளைக் கடந்து, நாம் அனைவரும் சிங்கப்பூரர்கள் என்ற ஒற்றை உணர்வுடன் மக்களை ஒன்றிணைக்கும் சக்தி விளையாட்டிற்கு உள்ளது. பல மொழிகள் பேசும் நமது சமூகத்தில் காற்பந்து போன்ற விளையாட்டுகள் மக்களிடையே வலுவான பிணைப்பை உருவாக்குகின்றன,” என்று கூறினார்.
இளையர்களின் ஈடுபாடு குறித்துப் பேசிய அவர், “இளையர்கள் விளையாட்டுகளில் அதிகம் பங்கேற்க வேண்டும். அதன்மூலம் ஒழுக்கம், அர்ப்பணிப்பு, தியாக மனப்பான்மை போன்ற பண்புகளை வளர்த்துக்கொள்ள முடியும்,” என்று வலியுறுத்தினார்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு பழைய நண்பர்களுடன் மீண்டும் களத்தில் இறங்கி விளையாடியது பெருமகிழ்ச்சி அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு வயதினரையும் பல இனத்தவரையும் ஒரே இடத்தில் ஒன்றிணைத்து, சமூக ஒற்றுமையை வலுப்படுத்திய நிகழ்ச்சியாக இந்த தேசிய தின விளையாட்டு விழா அமைந்தது.


