முன்னாள் பிரதமரும் மூத்த அமைச்சருமான லீ சியன் லூங் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கி வைத்த எஸ்ஜி பாதுகாப்புத் திட்டம் (SGSecure) இவ்வாண்டு அதன் பத்தாம் ஆண்டுநிறைவை எட்டியுள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தலைகளைச் சமாளிக்கவும் அவற்றிலிருந்து மீண்டு வரவும் மக்களைத் தயார்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட அத்திட்டம் அதன் குறிக்கோளை எட்டியுள்ளதாக உள்துறைக் குழு உளவியலாளர்கள் உணர்கின்றனர்.
கடந்த பத்தாண்டுகளில் சிங்கப்பூரர்களிடையே பயங்கரவாதம் குறித்த மனப்பாங்கு பெரிதும் மாறியுள்ளதென உள்துறைக் குழு உளவியல் பிரிவு இயக்குநர் டாக்டர் டியோங் சியூ மானும் துணை இயக்குநர் ஜாஸ்மின் டானும் கூறினர்.
“பயங்கரவாதம் என்பது எங்கோ தொலைவிலிருக்கும் ஓர் அச்சுறுத்தல் எனும் எண்ணம் நீங்கி அது சிங்கப்பூரிலும் நடக்க வாய்ப்புள்ளது என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளனர்,” என்று டாக்டர் டியோங் சுட்டினார்.
மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் செயல் ரீதியான நடவடிக்கைகள் சற்றுக் குறைவாகவே உள்ளதெனத் திருவாட்டி ஜாஸ்மின் குறிப்பிட்டார்.
“சில நேரங்களில், சந்தேகத்திற்குரிய ஆண்களையோ செயல்பாடுகளையோ மக்கள் பார்க்கும்போது அது குறித்துப் புகார் செய்யவேண்டுமென்ற எண்ணம் எழுந்தாலும், அவர்கள் அவ்வாறு செய்யாமல் போகவும் வாய்ப்புள்ளது.
“இதை உளவியல் துறையில் ‘எண்ணம்-செயல் இடைவெளி’ என்று கூறுவோம். நாம் இதைச் செய்ய வேண்டுமா, வேறு எவரேனும் செய்துவிடுவார்கள், தவறாகப் புகார் செய்துவிட்டால் என்னாவது போன்ற குழப்பங்களும் எண்ணங்களும் பலரைப் புகார் செய்வதிலிருந்து தடுக்கின்றன,” என்று அவர் சொன்னார்.
இந்நிலையை மாற்ற எளிதாகப் புகார் செய்யக்கூடிய வழிமுறைகள், தவறான புகாராக இருந்தாலும் அவ்வெண்ணத்தையும் செயலையும் அங்கீகரிக்கும் திட்டங்கள் ஆகியவை அறிமுகப்படுத்தப்படலாம் என அவர் பரிந்துரைத்தார்.
நெருக்கடி காலங்களில் சேவையாற்றும் காவல்துறையினர், தற்காப்புப் படையினர், ஆயுதப் படையினர் போன்றோருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உளவியல் முதலுதவி வழங்குவதன் முக்கியத்துவத்தை டாக்டர் டியோங் குறிப்பிட்டார்.
“உலகச் சுகாதார அமைப்பின் கோட்பாடுகளைச் சிங்கப்பூர்ச் சூழலுக்கு மாற்றியமைத்துத் ஆயத்தமாதல், கவனித்தல், கேட்டல், உதவி வழங்குதல் (Prepare, Look, Listen, Link) என்ற கட்டமைப்பைப் பின்பற்றி வருகிறோம்,” என்றார் அவர்.
மனித நெருக்கடி உதவி, மீட்புக் குழு (HEART) போன்ற முயற்சிகள் உள்துறைக் குழுவினரை ஆலோசகர்களிடமும் சமூக மனநல ஊழியர்களிடமும் உதவி நாட வழிவகுக்கின்றன என்றும் அவர் சொன்னார்.
வேகமாக மாறிவரும் உலகச் சூழலில் மின்னிலக்க அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருவதால் அத்தகைய சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ உளவியல் ஆதரவுக் கட்டமைப்புகள் விரிவாக்கம் காண்பது அவசியம் என்று இருவரும் கூறினர்.
மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்கு எதிரான தயார்நிலையில் இருக்க வேண்டுமென அவர்கள் ஊக்குவித்தனர்.

