உயிர்காக்க மட்டுமன்று, உயிர்களைக் காப்பாற்றுபவர்களை உருவாக்கவும் செய்கிறார் தாதிமை வல்லுநரான திருவாட்டி ஜெயச்சந்திரன் அமுதா, 48.
தன்னலமற்ற சேவையாலும் அர்ப்பணிப்பாலும் சிங்கப்பூரின் சுகாதாரத் துறையில் முத்திரை பதித்துவரும் திருவாட்டி அமுதா, ‘சிங்ஹெல்த் சமூக மருத்துவமனைகள் நீண்டகாலச் சேவை விருதுகள் 2026’ விழாவில் சிறப்பிக்கப்பட்டார்.
இருபது ஆண்டுகால நெடிய சேவைக்காக பாராட்டப்பட்டாலும்கூட அவரிடம் ‘உங்களின் மிகப் பெரிய சாதனை எது?’ என்று கேட்டால், விருதினை ஏந்தியாவாறே தம் மாணவர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார் திருவாட்டி அமுதா.
சிங்ஹெல்த் சமூக மருத்துவமனைகளில் பணியாற்றிவரும் திருவாட்டி அமுதா, பல ஆண்டுகளாக அடுத்த தலைமுறைத் தாதியர்களை உருவாக்கி வருகிறார்.
தாத்தாவிற்கான பணிவிடையில் தொடங்கிய பயணம்
“தொடக்கத்தில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஏனென்றால், கணினித் திறன்கள் எல்லாமே புதிதாக தோன்றியது. ஆனாலும், பணிக்களம் உற்சாகமாக இருந்தது,’’ என்றார் திருவாட்டி அமுதா.
மருத்துவமனையில் பெரும்பாலும் மூத்தோரைப் பராமரிக்க வேண்டிய சூழலில் அவர்களைப் பார்ப்பது தம் தாத்தா, பாட்டியைப் பார்த்ததுபோல இருந்ததாக இவர் நினைவுகூர்ந்தார்.
தம் தாத்தாவுக்கு செவி, பார்வைக் குறைபாடு இருந்ததால் அவரைக் கனிவுடன் பார்த்துக்கொள்ள தந்தை ஊக்குவித்ததால் சிறுவயதிலேயே பராமரிப்பு என்பது தமக்குப் பிடித்த ஒன்றாக மாறிவிட்டதாக இவர் குறிப்பிட்டார்.
“நோயாளிகளுக்கு வழங்கும் பராமரிப்புமூலம் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் நேர்மறையான மாற்றமே இந்தத் துறையை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்பதை எனக்கு ஒவ்வொரு நாளும் நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது,” என்கிறார் திருவாட்டி அமுதா.
இவரின் ஒருநாள் பொழுது வீட்டில் தொடங்கி, மருத்துவமனையில் மாணவர்களோடு முடிகிறது.
“என் நாள் என் குடும்பத்தோடுதான் தொடங்கும். காலையில் எழுந்த உடனே சமைப்பது, அவர்களுக்கு நண்பகல் உணவு கட்டுவது, பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது என்று இருக்கும். பிறகு மருத்துவமனைக்குப் போய்விட்டு, புதிய ஊழியர்களுக்கான அறிமுகப் பயிற்சி அல்லது மாணவர்களுக்கான அறிமுகப் பயிற்சி இருக்கும்,” என்று இவர் விளக்கினார்.
கற்றுக்கொடுப்பது மனிதம்
இத்துறைக்கு வரும் புதியவர்கள், அயல்நாட்டினர்க்கு அவர்கள் துறைசார்ந்த சவால்களை சமாளிக்க திறன்களோடு விழுமியங்களையும் கற்றுக்கொடுப்பதாகத் திருவாட்டி அமுதா கூறினார்.
“அறிமுகப் பயிற்சி வகுப்பிற்கு வருவோர்க்கு முதல் நாளே இங்குள்ள பண்பாட்டைச் சொல்லிக் கொடுப்பேன். வெறும் தாதிமைத் திறன்களை மட்டும் சொல்லிக் கொடுக்காமல், எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், சமூகத்தோடு எப்படி இணைந்து பழக வேண்டும் என்று எல்லாமே சொல்லிக் கொடுப்பேன். அதுதான் இன்றியமையாதது,” என்று இவர் விளக்கினார்.
‘தாதியர் பணி என்பது திறமையும் அறிவும் மட்டுமன்று. அதே அளவிற்குக் கருணையும் முக்கியம் என்பது இவரது உறுதியான நம்பிக்கை.
“இளந்தாதியர்க்குப் பாடம் நடத்துவது மட்டுமே என் பணி என்று எண்ணுவது இல்லை என்ற அவர், அவர்களைத் தன்னம்பிக்கையும், திறமையும் கனிவும் கொண்ட தாதியர்களாகத் தயார்ப்படுத்துவதே தம் முக்கிய இலக்கு,” என்றும் சொன்னார்.
அது சார்ந்த தருணத்தை நினைவுகூர்ந்த திருவாட்டி அமுதா, “அவசரகாலச் சிகிச்சை பற்றி ஒருநாள் காலையில் பயிற்சி கொடுத்தேன். மறுநாள் மருத்துவமனை அறையில் நோயாளி ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்தபோது, அந்த மாணவிதான் முதலில் ஓடிப்போய்ச் செயற்கை சுவாச சிகிச்சைக்கான முதலுதவி கொடுத்து, பிறகு மருத்துவக்குழுவை அழைத்து அந்த நோயாளியின் உயிரைக் காப்பாற்றினார்,” என்றும் தெரிவித்தார்.
“அதைக் கேள்விப்பட்டபோது என் கற்பித்தலுக்கு உண்மையான பலன் கிடைத்ததாக உணர்ந்தேன். பயிற்றுவிக்கும் நாம் அவர்களுடன் எப்போதும் இருக்கப்போவதில்லை. ஆனால், நாம் கற்றுக் கொடுத்ததை வைத்து அவர்கள் ஓர் உயிரைக் காப்பாற்றும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை,” என்கிறார் இவர்.
நீண்டகாலச் சேவைக்கான விருது நவம்பர் 13ஆம் தேதி மாலை திருவாட்டி அமுதாவின் கைகளில் தவழ்ந்தது.
“அது மிகவும் உணர்ச்சிபூர்வமான தருணம். கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்கையில் சிங்கப்பூருக்கு வரும்போது எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று அச்சமுற்றது நினைவுக்கு வந்து செல்கிறது. ஆனால், இங்கு கிடைத்த நட்பு, வழிகாட்டிகள், மேற்பார்வையாளர்கள் எல்லாருமே எனக்கு நிறைய வாய்ப்பு கொடுத்தனர்.
“அவ்வகையில், நோயாளிகளை மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்த வேண்டும் என்பதே என் பணியின் அடிப்படைப் பண்பு. சிறந்த தாதியாகத் திகழ வேண்டும் என்றால், முதலில் ஒரு சிறந்த மனிதராக இருக்க வேண்டும். நாம் என்ன சொல்கிறோம் என்பதை நோயாளிகள் மறந்துவிடலாம். ஆனால், நாம் அவர்களை எப்படி உணர வைத்தோம் என்பதை அவர்கள் கண்டிப்பாக நினைவில் வைத்திருப்பர்,” என்கிறார் திருவாட்டி அமுதா.
