‘ஷி காட் பீட்ஸ்’: பெண்களுக்கு அதிகாரமளிக்கும் புதிய அலை

‘ஷி காட் பீட்ஸ்’: பெண்களுக்கு அதிகாரமளிக்கும் புதிய அலை

5 mins read
39baf770-a588-4b33-9e43-ab4aec412302
டிஜே தீபிகா. - படம்: டிஜே தீபிகா

பாரம்பரியமாகத் தமிழ் இசை மேடைகளில் பெண்களின் பங்களிப்பு என்பது பெரும்பாலும் மெல்லிசைப் பாடல்களுடனேயே சுருங்கிவிடுகிறது.

இந்த அடையாளம் பெரிதும் மதிக்கப்பட்டாலும் இது பெண்களது கலை வெளிப்பாட்டின் ஒரு பரிமாணம் மட்டுமே. ஆனால், இன்று காலம் மாறிவிட்டது.

மெல்லிசையையும் தாண்டி, அதிரடித் தாளத்திலும், ராப் இசையிலும் பெண்கள் தங்கள் ஆளுமையை நிரூபிக்கும் ஒரு புதிய அலை உருவாகி வருகிறது.

அதற்குச் சான்றாக அமையவுள்ளது கூடிய விரைவில் நடைபெறவிருக்கும் ‘ஷி காட் பீட்ஸ்’ இசை நிகழ்ச்சி.

‘272 என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சி, ஏற்பாட்டுக் குழுவிலிருந்து கலைஞர்கள்வரை முழுக்க முழுக்க பெண்களால் வழிநடத்தப்படுகிறது.

சிங்கப்பூரில் முதன்முறையாக டிஜே, ராப், நேரடித் தாள வாத்தியம் என முழுக்க முழுக்க பெண்களே களமிறங்கும் இந்தத் தமிழ் இசை நிகழ்ச்சி உள்ளூர் மேடைகளில் இதுவரை கண்டிராத ஒரு புதுமையான வடிவத்தை முன்னிறுத்தவுள்ளது.

தாளத்தை வழிநடத்தி, ஒலியைத் தன்வசப்படுத்தி, மேடையை மிகுந்த ஆற்றலுடனும் தொழில்நுட்பத் திறனுடனும் ஆளும் பெண்களை முன்னிறுத்துவதன் மூலம் இந்த நிகழ்ச்சி பெண்களைப் பற்றிய வழக்கமான கண்ணோட்டத்தை விரிவுபடுத்தவுள்ளது.

சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண் கலைஞர்களை மேடையற்றவிருக்கிறது ‘ஷி காட் பீட்ஸ்’.

‘ஆரம்பம்’ தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஸ்டைலிஷ் தமிழச்சி’ பாடலின் ராப் அங்கத்தைப் பாடி புகழின் உச்சத்தை எட்டினார் கலைஞர் யுனோஹு.

அவர் தமது கூரிய வரிகளாலும் வலுவான பண்பாட்டுக் குரலை வெளிப்படுத்துவதன் மூலமும், தனி இசை வெளியீடுகள் மட்டுமின்றி தமிழ்ப்படப் பாடல்களிலும் முத்திரை பதித்து பரவலாக அறியப்படுகிறார்.

சென்னையைச் சேர்ந்த விருது பெற்ற கலைஞருக்கு அப்பாற்பட்டு பல்வேறு இசை வகைகளை ஒன்றிணைத்து வழங்கும் திறனுக்காகவும், மேடையை தன்வசப்படுத்தும் ஆளுமைக்காகவும் சென்னையின் முன்னணி பெண் ‘டிஜே’க்களில் ஒருவராகப் பரவலாக அங்கீகரிக்கப்படுகிறார் டிஜே தீபிகா.

வரும் கலைஞர்களுக்கு அப்பாற்பட்டு பார்வையாளர்கள் இந்த இரு அதிரடி கலைஞர்களிடமிருந்து அனல் பறக்கும் நிகழ்ச்சியை எதிர்பார்க்கலாம்.

‘ஷி காட் பீட்ஸ்’ இருவரும் இணைந்து இடம்பெறவிருக்கும் மூன்றாவது நிகழ்ச்சியாகும்.

இருவரும் தங்களது கலைப் பயணம், அனுபவங்களை தமிழ் முரசுக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்துகொண்டனர்.

பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் கவனம்

ஒரு காலத்தில் ‘ரப்பா பேன்ட்’ என்று பிரபலமாக அறியப்பட்ட ஷாம்கரி பிள்ளை, 36, தற்போது யுனோஹு என்று அழைக்கப்படுகிறார்.

யுனோஹு.
யுனோஹு. - படம்: யுனோஹு

13 ஆண்டுகளுக்கு முன்னர் பிரபலமாக வலம்வந்த ‘ஹே புள்ள மரியா’ பாடலின் ராப் அங்கத்தில் இடம்பெற்ற குரலுக்குச் சொந்தமானவர் யுனோஹு.

மலேசியாவைச் சேர்ந்த அவர் தமது ராப் இசை பயணத்தை மலேசியாவின் முன்னணி ஹிப்ஹாப், ராப் இசைக் குழுவான ‘சைக்கோ யூனிட்டுடன்’ தொடங்கினார்.

இளவயதிலிருந்து பெண்கள் மிகுந்த சூழலில் வளர்ந்து வந்தாலும் இசைத்துறையில் கால் பதிக்கும்போது இவரைச் சுற்றி இருந்தவர்கள் ஆண்களே.

இதனால், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதற்குத் தாம் உடனே ஒப்புதல் தெரிவித்து விடுவதாகக் கூறினார் யுனோஹு.

தற்போது தன்விருப்பக் கலைஞராக இருக்கும் யுனோஹு, ‘சைக்கோ யூனிட்’ இசைக் குழுவில் ஆண்கள் பலர் இருந்தாலும் ஒரு பெண்ணாக தனக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பு நன்றாகவே கிடைத்தது என்றார்.

குறிப்பாக, ராப் போன்ற வழக்கத்திற்கு மாறான பாதையில் பயணித்துவரும் அவர் இசைத்துறையில் பாலினம் பார்க்காமல் ஒரு கலைஞரை அவரது திறனுக்காக மதிப்பிட வேண்டும் என்றார்.

பெண்களுக்குக் கலைஞராகும் எல்லாத் திறன்களும் தகுதிகளும் உண்டு. ஆனால், இவ்வளவு காலமாக அதை அடக்கி வைத்து வந்தோம். இனி பெண்கள் அந்த வலையில் சிக்காமல் வெளியே வரவேண்டும்,” என்றார் யுனோஹு.

‘ஷி காட் பீட்ஸ்’ நிகழ்ச்சிக்கு வரும் பெண்கள் தம்மை போன்ற கலைஞரைவிட அவர்களால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்ற கருத்தை எடுத்துச் செல்ல வேண்டுமென்று யுனோஹு கூறினார்.

திருமணத்திற்குப் பிறகு தம் மகன் ஆறு மாத குழந்தையாக இருந்தபோது யுனோஹுவுக்கு ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றுக்கு குரல் தர அழைப்பு வந்தது.

“இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடமிருந்து அந்த அழைப்பு வந்தபோது நான் திடுக்கிட்டுப் போனேன். தாய்மையின் முக்கியப் பருவத்தில் இருப்பதால் அவ்வாய்ப்பை ஏற்க முடியுமா என்று பல கேள்விகள் என்னுள் எழுந்தன. ஆனால், வாய்ப்பின் மகத்துவத்தை அறிந்து நான் அதற்கு ஒப்புக்கொண்டேன்,” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் யுனோஹு.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் ‘காலம்’ பாடலை பாடிய யுனோஹு, தாய்மை ஒரு புதிய தொடக்கமே தவிர கனவுகளின் முற்றுப்புள்ளியன்று என்பதை உணர்ந்தார்.

திருமணத்திற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் இசைத்துறையில் வெளிச்சத்திற்கு வராமல் இருந்த யுனோஹு, பின்னர் தன்விருப்பக் கலைஞராக முடிவுசெய்து, தமது அடையாளத்தை யுனோஹு என மாற்றிக்கொண்டார்.

‘பிரியாணி’ தமிழ் திரைப்படத்திற்கும் பாடல் பாடிய அவர், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றிய தருணங்களையும் நினைவுகூர்ந்தார்.

சாதிக்க பாலினம் தடையன்று

பெண்களால் வழிநடத்தப்படும் நிகழ்ச்சி என்றாலே அதில் சில இடையூறுகள் வரத்தான் செய்யும் என்ற தவறான கருத்தை முறியடிக்க விரும்புகிறார் டிஜே தீபிகா, 32.

பத்து ஆண்டுகளாக டிஜேவாக இருக்கும் இவர் முதன்முறையாக பெண்களால் வழிநடத்தப்படும் நிகழ்ச்சியில் இடம்பெறுகிறார்.

டிஜே பயணத்தைத் தொடங்கியபோது தமிழ் இசைத்துறையில் பெண்கள் தொடர்பான சமூகக் களங்கங்களை எதிர்நோக்கியுள்ள தீபிகா, தம் மீது குறைகூறல்கள் பல வந்ததாக சொன்னார்.

“என் தாய்மொழி மராத்தி. இதனால் பலர் என்னிடம் நான் ஏன் தமிழ் இசைத்துறையில் பயணிக்கிறேன் எனக் கேட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த எனக்கு தமிழ்மொழிதான் என் அடையாளமாகப் பட்டது,” என்று தீபிகா கூறினார்.

மக்கள் தம்மை ஒரு தமிழ் டிஜேவாகத்தான் பார்க்க வேண்டும் என்று தீபிகா பின்னர் முடிவு செய்தார். சென்னையில் இருக்கும் பல மதுக்கூடங்களில் தமிழ் பாடல்கள் சிறந்த இடத்தை பிடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இசைத்துறையில் பெண்களின் பங்கு குறித்த கண்ணோட்டம் இப்போது மாறி வருவதாக தெரிவித்த தீபிகா, இது மக்களின் மாற்றத்தை நன்கு வெளிப்படுத்துகிறது என்றும் காலப்போக்கில் பெண்களின் அதிகாரம் இதில் அதிகரிக்க வேண்டும் என்றும் சொன்னார்.

“’ஷி காட் பீட்ஸ்’ நிகழ்ச்சிக்கு வரும் பெண்கள் ஆணாதிக்கம் நிறைந்த துறையில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை உணர வேண்டும். டிஜே பெரும்பாலும் மதுக்கூடங்களில் வேலை செய்பவர்கள் போன்ற தவறான கருத்துகள் எழுந்துள்ளன. அந்த எண்ணமும் மாற வேண்டும்,” என்றார் தீபிகா.

1980, 1990 காலகட்டத்தில் பிறந்தோருக்கு ‘ஷி காட் பீட்ஸ்’ நிகழ்ச்சி இசை விருந்தை படைக்கவிருப்பதாகச் சொன்ன தீபிகா பழைய பாடல்களை அதிகம் எதிர்பார்க்கலாம் என்றார்.

கடந்த 16 ஆண்டுகளாக தம் கணவர் டிஜேவாக இருந்துவருவதாகக் குறிப்பிட்ட தீபிகா, தாமும் அப்பாதையைத் தேர்ந்தெடுக்க அவரே முக்கியக் காரணம் என்றார்.

“ஓர் ஆண்தான் என்னை டிஜேவாக ஊக்குவித்தார். என் கணவர் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது நான் கூடவே செல்வேன். கணவர் மூலம் உந்துதல் பெற்று இருவரும் இணைந்து டிஜே வேலை பார்த்தோம். அண்மைக்காலமாக நான் தனியாக வேலை செய்யத் தொடங்கியுள்ளேன்,” என்று அவர் விளக்கமாகக் கூறினார்.

வரும் 16ஆம் தேதி ஹார்ட் ராக் கஃபேயில் இடம்பெறவிருக்கும் நிகழ்ச்சியில் தீபிகாவையும், யுனோஹுவையும் நேரில் காணலாம். உள்ளூர்க் கலைஞர் உதயா நெறியாளராக இருந்து நிகழ்ச்சியைப் படைக்கவிருக்கிறார்.

நுழைவுச்சீட்டுகள் வாங்க https://indianevents.sg/events/she-got-beats இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்