ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் திட்டம்: மாணவர்கள், பெற்றோர் கருத்துரைப்பு

ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் திட்டம்: மாணவர்கள், பெற்றோர் கருத்துரைப்பு

5 mins read
1afbd793-b5d0-450b-a2a7-6456049ffbf3
(இடமிருந்து) தாயார் திருமதி திலகலட்சுமி கிருஷ்ணமூர்த்தி, மகள் அனன்யா புகுனேஸ்வரன், பள்ளி முதல்வர் யூஜீன் லீ, மாணவர் ஆர்னிக் மஹாஜன், தாயார் திருமதி பலாக் குப்தா. - படம்: ஷர்வேஸ்வரி சரவணன்
multi-img1 of 2

பாரம்பரியப் பள்ளி உணவகங்கள், பலரின் பள்ளிப் பருவ நினைவுகளில் நீங்கா இடத்தைப் பெற்றவை.

உணவுக் கடைக்காரர்களுடன் நடக்கும் சின்னச் சின்ன உரையாடல்கள், நீண்ட வரிசையில் காத்திருந்தபடியே நண்பர்களுடன் சிரித்துப் பேசும் தருணங்கள், உணவு முடிந்துவிடுமே என்ற அவசரத்தில் அரக்கபரக்க வாங்கி உண்ட நிமிடங்கள் என இத்தனை நினைவுகளும் ‘பள்ளி உணவகம்’ எனச் சொல்லக் கேட்டால் அலைகளாக மனத்தில் ஓடும்.

ஆனால் இத்தகைய அனுபவங்கள், வரும் தலைமுறையினருக்குச் சொல்லும் ஒரு வரலாறாகவும் எட்டாக்கனியாகவும் மாறிக் கொண்டிருக்கின்றன என்பது கவலைக்குரிய ஒன்று.

இதனால் பள்ளி உணவக அனுபவம் சற்று ‘இயந்திரத்தனமாகி’ விட்டதாகக் கூறுகிறார் தாயார் திலகலட்சுமி கிருஷ்ணமூர்த்தி.

பள்ளிகளின் உணவகங்களை நடத்துவதற்கு ஏற்பட்டுள்ள ஆள்பற்றாக்குறையைச் சமாளிக்க மத்திய சமையல் நிலையங்கள் சிங்கப்பூரில் உள்ள 13 பள்ளிகளுக்கான உணவை இவ்வாண்டு முதல் வழங்கி வருகின்றன.

பள்ளிக்கூட உணவகங்களில் கடைக்காரர்களை அமர்த்துவதில் சிரமங்கள் எழுந்துள்ள நிலையில் இந்தப் புதிய முறையை சில பள்ளிகளில் பின்பற்றுகின்றன.

அவற்றில் ஒன்று மேற்கு வட்டாரத்தில் உள்ள வெஸ்ட் வியூ தொடக்கப் பள்ளி. சாங் செங் மீ வா என்னும் நிறுவனம் இப்பள்ளிக்கு உணவை ‘பென்டோ’ (Bento) உணவுப் பொட்டலங்களில் விநியோகிக்கிறது.

இதுகுறித்து மாணவர்கள், பெற்றோர் என இருதரப்பினரின் கருத்துகளையும் அனுபவங்களையும் கண்டறிய வெஸ்ட் வியூ தொடக்கப் பள்ளிக்குச் சென்றது தமிழ் முரசு.

பெற்றோர் ‘ஏமிஏப்’ (Amiapp School) என்ற செயலி வழியாகத் தங்கள் பிள்ளைகளுக்கு விருப்பமான உணவை ஒரு வாரத்திற்கு முன்பாகவே தெரிவு செய்யலாம்.

ஒவ்வொரு ‘பென்டோ’ உணவுப் பொட்டலத்திற்கும் இரண்டு வெள்ளி முதல் நான்கு வெள்ளி வரை செலவாகும்.

கட்டுப்படியான விலையில் உணவு விற்கப்படுவதாகக் குறிப்பிட்ட பெற்றோர் வரும் வாரங்களில் மேலும் பல உணவு வகைகளை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தனர்.

பெற்றோர் ‘ஏமிஏப்’ (Amiapp School) என்ற செயலி வாயிலாகத் தங்கள் பிள்ளைகளுக்கு உணவைத் தெரிவு செய்யலாம்.
பெற்றோர் ‘ஏமிஏப்’ (Amiapp School) என்ற செயலி வாயிலாகத் தங்கள் பிள்ளைகளுக்கு உணவைத் தெரிவு செய்யலாம். - படம்: ஷர்வேஸ்வரி சரவணன்

இடைவேளை நேரத்தில் மாணவர்கள் பள்ளி உணவகத்தில் உள்ள ‘பென்டோ’ பொட்டலங்களைப் பெற்றுக்கொள்ள, அதற்கான பெட்டகத்திற்குச் சென்று, கொடுக்கப்பட்ட அட்டையைப் பயன்படுத்தித் தங்கள் உணவைப் பெற்றுக்கொள்ளலாம்.

கொடுக்கப்பட்ட அட்டையை ‘டேப்’ செய்து மாணவர்கள் தங்களது உணவைப் பெற்றுக்கொள்ளலாம்.
கொடுக்கப்பட்ட அட்டையை ‘டேப்’ செய்து மாணவர்கள் தங்களது உணவைப் பெற்றுக்கொள்ளலாம். - படம்: ஷர்வேஸ்வரி சரவணன்
மாணவர் ஆர்னிக் மஹாஜன் தனது உணவை ‘பென்டோ’ பொட்டலப் பெட்டகத்திலிருந்து பெற்றுக்கொள்கிறார்.
மாணவர் ஆர்னிக் மஹாஜன் தனது உணவை ‘பென்டோ’ பொட்டலப் பெட்டகத்திலிருந்து பெற்றுக்கொள்கிறார். - படம்: ஷர்வேஸ்வரி சரவணன்

ஒருவேளை மாணவர்கள் தங்களது பெட்டக எண்ணை மறந்துவிட்டால், உணவகத்திலேயே பொருத்தப்பட்டிருக்கும் ‘ஐபேட்’ல் அந்த விவரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

பெட்டக எண்ணை மாணவர்கள் இந்த ‘ஐபேட்’ வழியாகத் தெரிந்துகொள்ளலாம்.
பெட்டக எண்ணை மாணவர்கள் இந்த ‘ஐபேட்’ வழியாகத் தெரிந்துகொள்ளலாம். - படம்: ஷர்வேஸ்வரி சரவணன்

“இப்புதிய திட்டத்திற்கு மாறுவதாகத் தெரிந்தபோது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. கடைசி நாளில் கடைக்காரர்களிடம் விடைபெற்றுக்கொண்டபோது மிகவும் கவலையாகவும் இருந்தது,” என்றார் தொடக்கநிலை நான்காம் வகுப்பு மாணவி அனன்யா புகுனேஸ்வரன், 10.

பாப்கார்ன் கோழி போன்ற ‘Finger foods’ எனப்படும் கைகளால் எளிதாக எடுத்து உண்ணக்கூடிய சிற்றுண்டிகளை அதிகம் விரும்பிச் சாப்பிடுவதாகக் குறிப்பிட்ட அனன்யா, வரும் வாரங்களில் ஆரோக்கியமான உணவுமுறைக்கு மாற முயற்சி செய்யவிருப்பதாகக் கூறினார்.

வெஸ்ட் வியூ தொடக்கப்பள்ளி மாணவர்கள் அனன்யா புகுனேஸ்வரன் (இடது), ஆர்னிக் மஹாஜன். 
வெஸ்ட் வியூ தொடக்கப்பள்ளி மாணவர்கள் அனன்யா புகுனேஸ்வரன் (இடது), ஆர்னிக் மஹாஜன்.  - படம்: ஷர்வேஸ்வரி சரவணன்

“முன்புபோல் உணவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை. தாமதமாகச் சென்றால் உணவு தீர்ந்துவிடும் என்ற கவலையும் இல்லை. இத்திட்டத்தால் நான் பள்ளிக்கு அப்பாலும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை நாளடைவில் பின்பற்றுவேன் என நினைக்கிறேன்,” என்றார் தொடக்கப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர் ஆர்னிக் மஹாஜன், 12.

வெஸ்ட் வியூ தொடக்கப்பள்ளி மாணவர்கள் அனன்யா புகுனேஸ்வரன் (இடது), ஆர்னிக் மஹாஜன். 
வெஸ்ட் வியூ தொடக்கப்பள்ளி மாணவர்கள் அனன்யா புகுனேஸ்வரன் (இடது), ஆர்னிக் மஹாஜன்.  - படம்: ஷர்வேஸ்வரி சரவணன்

உணவுண்ட பிறகு மாணவர்கள் தங்களது பொட்டலங்களை உரிய இடத்தில் திரும்பக்கொடுக்க வேண்டும்.

உணவுண்ட பிறகு பொட்டலங்களைத் திரும்பக்கொடுக்கும் நிலையம்.
உணவுண்ட பிறகு பொட்டலங்களைத் திரும்பக்கொடுக்கும் நிலையம். - படம்: ஷர்வேஸ்வரி சரவணன்

இந்தப் புதிய மத்திய சமையல் நிலைய உணவு முறை மாணவர்களுக்கு மட்டுமன்றி பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒரு புதிய அனுபவம்தான்.

மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் என இரு பிரிவினருக்கும் இருவேறு அளவுகளில் உணவு வழங்கப்படுகிறது. அதற்கேற்ப ஆசிரியர்கள் தங்கள் உணவைப் பெற்றுக்கொள்ளலாம்.

மாணவர்களின் இடைவேளை நேரத்தில் தாமும் உணவகத்திற்கு வந்து உண்ண விரும்புவதாகக் கூறிய வெஸ்ட் வியூ தொடக்கப்பள்ளி முதல்வர் யூஜீன் லீ இதன் மூலம் தாமும் உணவுத் தரத்தை நன்கு மதிப்பீடு செய்து மத்திய சமையல் நிலையத்துடன் கலந்தாலோசித்து புதிய மேம்பாடுகளைக் காண முடிவதாகத் தெரிவித்தார்.

வெஸ்ட் வியூ தொடக்கப்பள்ளி முதல்வர் யூஜீன் லீ.
வெஸ்ட் வியூ தொடக்கப்பள்ளி முதல்வர் யூஜீன் லீ. - படம்: ஷர்வேஸ்வரி சரவணன்

இதற்கு முன்பு உணவைத் தெரிவு செய்யும் சுதந்திரம் மாணவர்களின் கைகளில் இருந்ததைச் சுட்டிய பெற்றோர் இந்தப் புதிய திட்டத்தால் அவர்களை ஆரோக்கியமான உணவுமுறைக்கு மாற்ற முடிவதாகக் தெரிவித்தனர்.

“பள்ளி உணவகங்களில் ஆரோக்கியமற்ற உணவுத் தெரிவுகள் அதிகம் வழங்கப்பட்டு வந்தன. என் மகள் அனன்யாவும் அங்குப் பழங்களையோ காய்கறிகளையோ உட்கொண்டதில்லை. ஆனால் இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உணவு ஆரோக்கியத் தரநிலைகளை எட்டுவதால் கவலைப்படத் தேவையில்லை,” என்றார் தாயார் திலகலட்சுமி கிருஷ்ணமூர்த்தி.

மேலும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை உறுதிசெய்ய வீட்டில் தயாரித்த உணவைக் கொடுத்து அனுப்புவதாகக் குறிப்பிட்ட திருமதி திலகலட்சுமி, வேலைக்குச் செல்லும் தமக்கு இதனால் நேரத்தை மிச்சப்படுத்த முடிவதாகக் குறிப்பிட்டார்.

சுகாதார மேம்பாட்டு வாரியம் வகுத்திருக்கும் பள்ளிக்கூட ஆரோக்கிய உணவுத் திட்டத்தின் வழிமுறைகளை நிறுவனங்கள் பின்பற்றுவதோடு, தரமான உணவுத் தெரிவுகளை அவை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், அண்மையில் உணவுப் பாதுகாப்பு குறித்து சர்ச்சைகளும் கேள்விகளும் எழுந்துள்ளன. இது பெற்றோரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘உணவுப் பாதுகாப்பு என்பது சமரசத்திற்கு அப்பாற்பட்டது. உணவை விநியோகிக்கும் நிலையம் அதனை உறுதிசெய்யும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்,” என்றார் மற்றொரு மாணவனின் தாயார் பலாக் குப்தா.

தமது மகனுக்கு (ஆர்னிக்) ‘பின்ஜ் ஈட்டிங்’, (Binge eating) அதாவது தொடர்ந்து கணக்கின்றி உண்ணும் பழக்கம் இருப்பதாகக் கூறிய அவர், இத்திட்டத்தின் மூலம் தமது மகன் மாவுச்சத்து, புரதம், காய்கறிகள் கொண்ட ஒரு சமநிலையான, ஆரோக்கியமான உணவை உண்பது மனநிறைவு தருகிறது என்றார்.

மேலும், மாணவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தினால் என்றாவது பள்ளிக்குப் போக முடியாத நிலை ஏற்பட்டால், தெரிவு செய்த உணவைப் பெட்டகத்திலிருந்து நீக்கவோ காசைத் திரும்பப் பெறவோ வாய்ப்பு இல்லை என்று கருத்துரைத்தார் திருமதி குப்தா.

திட்டம் நடைமுறைக்கு வருமுன், உணவு வகைகள் ஒவ்வொரு வாரமும் வேறுபடும் எனத் தப்புக்கணக்குப் போட்டதாகக் கூறிய அவர் மாணவர்களுக்கு ஒரே உணவைச் சாப்பிட்டு சலிப்புத் தட்டிவிடுகிறது எனச் சுட்டினார்.

மத்திய சமையற் நிலைய உணவு முறை 2022ஆம் ஆண்டு யூசோப் இஷாக் உயர்நிலைப் பள்ளியில் ஒரு முன்னோடித் திட்டமாகக் கொண்டுவரப்பட்டது. தற்போது அது மேலும் சில பள்ளிகளுக்கு விரிவுசெய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்