தேசிய தின அணிவகுப்பின் கருப்பொருளுக்கு ஏற்பவும் பார்ப்பவர் உணர்வுகளைத் தொடும் விதமாகவும் ‘ஹார்ட்பீட்’ குறுநாடகம் பகுதிகளாக வெளியிடப்படவுள்ளது.
‘தொடுவானம் நோக்கி, முன்னேறட்டும் சிங்கப்பூர்!’ என்ற கருப்பொருளைக் கொண்டுள்ளது இவ்வாண்டு அணிவகுப்பு. தேசிய தின அணிவகுப்புக்காக அத்தகைய குறுநாடகத் தொடர் வெளிவருவது இதுவே முதன்முறை.
உள்ளூர் இயக்குநர் கே.ராஜகோபாலின் இயக்கத்திலும் ஊடகவியலாளர் கெய்லின்னின் எழுத்திலும் வெளிவரும் தொடரில், உள்ளூர்ப் பாடகி இமான் ஃபாண்டி முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
உள்ளூர்ச் சொல்லிசைக் கலைஞரும் பாடலாசிரியருமான யங் ராஜாவும் மற்றொரு முன்னணிக் கதாபாத்திரத்தில் இடம்பெறுகிறார்.
ஆறு பாகங்களைக் கொண்ட தொடர், ஜுரிடா என்ற இளம்பெண்ணின் தன்னம்பிக்கைப் பயணத்தைப் பற்றியது என்றும் கதை, தேசிய தின அணிவகுப்பை ஒட்டிய குடியிருப்புக் கொண்டாட்டத்தைப் பின்புலமாகக் கொண்டது என்றும் அணிவகுப்பு ஏற்பாட்டாளர்கள் வியாழக்கிழமை (மே 21) தெரிவித்தனர்.
‘என்டிபீப்ஸ்’ (NDPeeps) யூடியூப் ஒளிவழியில், குறுநாடகத் தொடருக்கான முன்னோட்டமும் முதல் இரண்டு பாகங்களும் வெளியிடப்பட்டுள்ளன. மூன்றாவது பாகம் மே 23லும் இறுதி இரண்டு பாகங்கள் மே 26லும் வெளியீடு காணும்.
குறுநாடகத் தொடரை உருவாக்குவது தமக்கு இதுவே முதல் முறை எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்த ராஜகோபால், தாம் தயாரித்த முந்தைய படைப்புகளைப் போலவே இதுவும் சுய அடையாளத்தை அறிவது பற்றிய கதையைக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
“தொழில்நுட்ப ரீதியான சவால்கள் மட்டுமின்றிப் பல அடுக்குகளைக் கொண்ட நுட்பமான கதையைப் படைப்பு கொண்டுள்ளது. கதாபாத்திரங்கள் பாடும் அங்கமும் இடம்பெற்றுள்ளது. இதுவும் எனக்குப் புதிதுதான்,” என்று அவர் கூறினார்.
இதற்கு முன்னர், ராஜகோபால் பல்வேறு படைப்புகளைத் தயாரித்திருக்கிறார். அவரது முதல் முழுநீளத் திரைப்படமான ‘எ யெல்லோ பர்ட்’ (A Yellow Bird), 2016ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்டது. பின்னர் 2017ல், ஆசியான் திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை அது வென்றது.
வெவ்வேறு வயதுப் பிரிவைச் சேர்ந்தோரை உள்ளடக்கும் புதிய தொடர், சமுதாயத்தைப் பற்றிய கதையையும் கூறுவதாக ராஜகோபால் தெரிவித்தார்.
நாட்டையும் சமூகத்தையும் கொண்டாடும் அந்தத் தொடரில் பிரசாரம் ஏதும் இல்லை என்றார் அவர்.
“நாம் எப்படி இந்த நாட்டையும் மக்களையும் மதிக்கிறோம், ஒருவரையொருவர் எப்படி அரவணைக்கிறோம் என்பது கதையிலிருந்து தெரியவரும். இது ஒரு மாபெரும் கொண்டாட்டம்; ஒரு தாய், மகளுக்கிடையேயான பாசத்தைப் பற்றிய கதை. அனைவருக்கும் பிடித்த, அனைவரும் தங்கள் வாழ்வில் அனுபவித்த உணர்வுகள்தாம் இதில் நிறைந்துள்ளன,” என்று குறிப்பிட்டார் ராஜகோபால்.

