சிறுகதைகள், கவிதைகள் ஆகியவற்றை ஆராயும் இலக்கிய ஆர்வலர் குழுவான ‘மற்றும்’ குழுவினர் கடந்த ஜூன் 28ல் கலந்துரையாடலை நடத்தியது.
விக்டோரியா சாலையிலுள்ள தேசிய நூலகக் கட்டடத்தில் இந்தக் குழு, தனது மாதாந்தரச் சந்திப்பை நடத்தியது.
கலந்துரையாடலில், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் ‘வெறும் பிரார்த்தனை’ சிறுகதையின் வாசிப்பனுபவத்தையும் அந்தக் கதை காட்டும் உறவுச்சிக்கல், மனித மனம், பெண்களின் நிலை என்று வாசகர்கள் பல்வேறு கோணங்களில் அலசினர்.
தொடர்ந்து ரேஷ்மா பீடி இயக்கிய “எங்க ஏரி” குறும்படம் திரையிடப்பட்டது.
நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த தந்தை மகன் பாசத்தையும், நகரமயமாக்கலினால் அழிந்து வரும் சுற்றுச்சூழல் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
கவிதை அங்கத்தில் கவிஞர் பெரு.விஷ்ணுகுமாரின் ‘வந்தடையும் பொழுதுகள்’ கவிதை, கவிஞர் ஜான்சுந்தரின் ‘காவல் மாதுளை – தோழிக் கூற்று’ கவிதை, கவிஞர் மேரி ஆலிவரின் ‘விசில் அடிப்பவள்’ கவிதையைப் பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. படைப்பைக் கொண்டாடுவதும் அதை விமர்சிப்பதும் மக்களின் ரசனையையும் படைப்பாற்றலையும் மேம்படுத்துவதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

