ஸ்ரீ சிவ-கிருஷ்ண ஆலய குடமுழுக்கு வரும் பிப்ரவரி 9ஆம் தேதி காலை 8 மணியளவில் நடைபெற உள்ளது. அதிகாலை 3.30 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கி 8.45 மணியளவில் ராஜ கோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு சிறப்பாக நடைபெற உள்ளதாக விழாக் குழுவினர் தெரிவித்தனர்.
விழாவில் பிரதமர் லாரன்ஸ் வோங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ளார் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவ்வழிபாடுகளைக் கோவிலின் தலைமை அர்ச்சகருடன் உள்ளூரின் பல்வேறு கோவில்களைச் சேர்ந்தோர், தமிழ் நாட்டிலிருந்து வரவுள்ள 25 அர்ச்சகர்கள் என மொத்தம் 40 பேர் இணைந்து நடத்தவுள்ளனர்.
கடந்த 1996, 2008ஆம் ஆண்டுகளில் நடந்த குடமுழுக்கைத் தொடர்ந்து இவ்வாண்டு மூன்றாவது குடமுழுக்கு நடைபெற உள்ளது. பெருந்தொற்றுத் தாக்கத்தினால் தாமதமான இந்த விழா, தற்போது சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கோவில் நிர்வாகம் கூறியது.
குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு உட்புற வெளிப்புறப் புதுப்பிப்பு வேலைப்பாடுகள் நடந்து வருகின்றன. கோபுரம் தொடங்கி, உட்புற அலங்காரச் சிலைகள் வரை அனைத்தும் தங்க நிறத்தில் மின்னுவதைக் காண முடிந்தது.
கோவிலின் மையப்பகுதியின் மேல்பகுதியில் நான்கு புறமும் உள்ள சிலைகள் முன்னர் ஒரே வண்ணத்தில் இருந்ததாகவும், தற்போது பல வண்ணங்களில் கண்களைப் பறிக்கும் விதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னார் இக்கோவிலின் தலைவர் த சுரேஷ் குமார், 52.
மேலும், பக்தர்கள் வழிபட அதிக இடத்தை ஒதுக்கும் நோக்கில் கொடிமரம், சன்னதியை நோக்கிச் சற்று நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது. சிறு சன்னதியாக இருந்த வெங்கடாசலபதி சன்னதி, 27 அடி உயர பிரம்மாண்ட சன்னதியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதில் ஒன்பது அடி உயர வெங்கடாசலபதி சிலையும் நிறுவப்பட்டுள்ளது. மேலும், கோவிலும் வெளிப்புற பிரகாரத்தில் சிறு தோட்ட அமைப்பும், அதில் வில்வம், ருத்திராட்சம், வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகளும் பூச்செடிகளும் நடப்பட்டுள்ளன.
அதே இடத்தில், பக்தர்கள் தங்கள் கைகளால் நாகர் சிலைக்கு அபிஷேகம், வழிபாடுகள் மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அஷ்டலட்சுமி, ஐயப்பன், பார்வதி-பரமேஸ்வரன், விஷ்ணு உள்ளிட்ட தெய்வங்களின் உருவம் அச்சிடப்பட்ட ‘டைல்ஸ்’ எனும் கற்பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.
தவிர, “மழை நேரங்களில் சிரமமின்றி உற்சவர் புறப்பாடு செய்யவும், மக்கள் சுற்றி வரவும் வசதியாக கோவில் சுற்றுப்புறத்தில் ‘டெம்ப்பர்ட் கிளாஸ்’ வகை கண்ணாடியாலான மேற்கூரை பொறுத்தப்பட்டுள்ளது,” என்றார் திரு சுரேஷ். மேலும், நான்கு புறங்களிலும் சுற்றி 20க்கும் மேற்பட்ட மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் சொன்னார்.
கோவில் புதுப்பிப்புப் பணிகளை, ஸ்தபதியார் லோகநாதன் தலைமையில் 11 பேர் கொண்ட குழு கடந்த ஜனவரி 2024 முதல் மேற்கொண்டு வருவதாகக் கூறினார் சுரேஷ்.
குடமுழுக்குப் பணிகள், விழா ஏற்பாடுகள் உள்ளிட்டவை ஏறத்தாழ இரண்டு மில்லியன் வெள்ளி செலவில் நடைபெறுவதாகவும், விழாவில் குறைந்தது 10 ஆயிரம் பக்தர்கள் திரளாகப் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் சொன்னார் அவர்.
அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். அருகிலுள்ள திடலில் அனைவருக்கும் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். குடமுழுக்கைத் தொடர்ந்து, மூத்தோர், சிறப்புத் தேவையுடையோர், சக்கர நாற்காலியில் உள்ளோர் உள்ளிட்ட அனைவரும் முதலில் தரிசனம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் சுரேஷ்.
விழாவன்று கோவில் வளாகத்தில் 150 தொண்டூழியர்களும், உணவுக்கூடத்தில் 500 தொண்டூழியர்களும் பணியாற்றுவார்கள் என்றும் சொன்னார் சுரேஷ்.
“நான் தலைமை ஏற்று நடத்தும் முதல் குடமுழுக்கு என்பதால் அழுத்தம் இருப்பது மறுக்க முடியாதது,” என்று சொன்ன சுரேஷ், “நிர்வாகத்தின் மூத்தோர், முன்னாள் தலைவர்கள், பிற கோவில் குடமுழுக்கு செய்து அனுபவமுள்ள தலைவர்கள் என அனைவரிடமும் பேசினேன். அவர்களது ஆலோசனைகளும், வழிகாட்டுதலும் எனக்குத் துணை நிற்கின்றன,” என்றார்.
“இவ்விழா சிறப்பாக நடந்தேறும் எனும் நம்பிக்கை இருக்கிறது. பக்தர்களுக்குச் சிறந்த தெய்வீக அனுபவம் கொடுக்கும் எண்ணத்தில் பணியாற்றுகிறோம். அந்த நல்ல எண்ணம் எங்களை நல்ல முறையில் வழிநடத்தும் என்றும் நம்புகிறோம்,” என்று சிரிப்புடன் சொன்னார்.
இந்த விழாவை ‘யூடியூப்’ தளத்தில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகச் சொன்னார் சுரேஷ்.