சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் (சிஃபாஸ்), தனது 75ஆம் ஆண்டு நிறைவின் பின்னணியில் தனது வருடாந்திர கல்வி நிலைய தினத்தைப் பிரம்மாண்டமாகக் கொண்டாடியது.
செப்டம்பர் 7ஆம் தேதி ‘ஒன் வோர்ல்டு’ அனைத்துலகப் பள்ளியின் கலை அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியைக் காண 1,200க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராக இந்த மூன்று மணி நேர நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மேடையேறி பல்வேறு வகையான கலைகளைப் படைத்தனர்.
பரதநாட்டியம், கதக், கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி சங்கீதம் என கலைமணம் கமழ பல்வேறு வகையான படைப்புகள் இடம்பெற்றன. கலைப்பள்ளி ஆசிரியர்கள் வடிவமைத்த மேடைக்கலை அங்கத்துடன் ‘சம்பிரதாயம்: கால வரம்பற்ற மரபு’ என்ற ஓவியக் கண்காட்சியையும் வருகையாளர்கள் பார்வையிட்டனர்.
தப்லா கலைஞர் நிஷித் கங்காணி, பாடகர் சமியுல்லா கான், சாரங்கி வாசிப்பாளர் அமிர் கான் உள்ளிட்ட புகழ்பெற்ற இந்திய இசைக்கலைஞர்கள் நிகழ்ச்சியில் இடம்பெற்றனர்.
ஆறாம் நிலைக்கான சான்றிதழை மொத்தம் 66 மாணவர்களும் எட்டாம் நிலை எனப்படும் பட்டயச் சான்றிதழை 30 மாணவர்களும் பெற்றனர்.
பட்டயம் பெற்ற மாணவர்களில் ஒருவரான கதக் நடனக் கலைஞர் பல்விந்தர் கோர், சான்றிதழுடன் நாட்டிய விஷாரத் விருதைப் பெற்றார்.
“இந்தப் பெருமை என் ஆசிரியரை சேரும். என்னிடம் பொறுமை, அன்பு, வழிகாட்டுதல் ஆகியவற்றைக் காட்டிய அவருக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்,” என்றார் பல்விந்தர்.
தொடர்புடைய செய்திகள்
பல்விந்தரைப் போலவே பரதநாட்டிய மாணவர் ஹர்ஷிகாவும் நன்றியுணர்வுடன் விருதைப் பெற்றவண்ணம், கடந்து வந்த தமது கற்றல் பயணத்தை நினைவுகூர்ந்தார்.
“மேடு பள்ளங்கள் நிறைந்தது, என் ஒன்பது ஆண்டு கற்றல் அனுபவம். ஆனால் இந்த வித்தையைப் பழகிக்கொண்ட நான் காலப்போக்கில் அதனை தியானத்திற்கான சாதனமாகப் பயன்படுத்தினேன். வாழ்க்கையின் சிரமமான காலகட்டங்களின்போதும் எனக்கு மன அமைதி அளிப்பது நாட்டியமே,” என்று அவர் கூறினார்.
நீண்டகால சேவை ஆற்றிய கலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.