சிஃபாஸ் வெளிப்புற அரங்கம்: சிலிகி ரோட்டில் கமழ்ந்த செவ்விசை மணம்

சிஃபாஸ் வெளிப்புற அரங்கம்: சிலிகி ரோட்டில் கமழ்ந்த செவ்விசை மணம்

2 mins read
df1b51eb-424e-412e-9d2d-50d2820d1307
சிஃபாஸ் வெளிப்புற அரங்க மேடையில் கதக் நடனமணிகள். - படம்: சிஃபாஸ்

அனைவரையும் அரவணைக்கும் கலை என்ற கடப்பாட்டுடன் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் (சிஃபாஸ்) கலை விழா, அதன் வெளிப்புற அரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகளைப் படைத்தது.

முடிவில்லாச் சுவை (இன்ஃபினிட் ரசா) என்ற கருப்பொருளைக் கொண்ட அந்த விழா, ஏப்ரல் 17 முதல் மே 3 வரை நடைபெற்றது.

மிடில் ரோட்டிலுள்ள புதிய வளாகத்தில் 2025ல் செயல்படத் தொடங்கிய அந்தக் கலைப்பள்ளியின் வெளிப்புற அரங்கு, புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வழியாகச் செல்வோர் யாராக இருந்தாலும் கட்டணமின்றி அரங்கத்தில் பார்வையாளராக அமரலாம்.  

இந்த நிகழ்ச்சியை ஏறத்தாழ 200 பேர் கண்டுகளித்ததாக சிஃபாஸ் கூறியது.

கண்கவர் பரத நாட்டியம்.
கண்கவர் பரத நாட்டியம். - படம்: சிஃபாஸ்

நிகழ்ச்சியின்போது தொடக்க உரையாற்றிய சிஃபாஸ் செயலாளர் பி.எஸ். சோமசேகரன், ‘இசை என்பது உயிரின் மொழி’ என்று குறிப்பிட்டார். 

அதன் பின்னர் உரையாற்றிய கலாசார, சமூக, இளையர் துறை, மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ், ஒற்றுமையை வளர்க்கும் திறன் நுண்கலைகளுக்கு இருப்பதாகக் கூறினார்.

பரதநாட்டியமும் கதக் நடனமும் இணைந்து படைக்கப்பட்ட நிகழ்ச்சியில், பழங்காலக் கேரளத்தின் திருவிதாங்கூர் மாமன்னர் ‘சுவாதித் திருநாள்’ புனைந்த சங்கர ஸ்ரீகிரி என்ற கௌரி ராகக் கீர்த்தனைக்கான நடனம் முதலில் இடம்பெற்றது. 

பரதமும் கதக்கும் இணைந்த ஜுகல்பந்தி அங்கம்.
பரதமும் கதக்கும் இணைந்த ஜுகல்பந்தி அங்கம். - படம்: சிஃபாஸ்

இந்துத் தெய்வம் பார்வதியைப் பற்றிய அந்தப் பாடலுக்குப் பிறகு, சிவபெருமானைக் கருப்பொருளாகக் கொண்ட கதக் நடனம் நடைபெற்றது. 

பின்னர், காளிங்க நர்த்தனம் இடம்பெற்றது. ஆனால் இது பிரபலமான ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் காளிங்க நர்த்தனமன்று. பழம்பெரும் கர்நாடக இசை முன்னோடி புரந்தரதாசரின் ஆரபி ராகப் பாடலான காளிங்க நர்த்தனத்திற்குப் பிரபல இந்தியக் கலைஞர் லீலா சாம்சனின் வடிவமைப்பில் நடனம் படைக்கப்பட்டிருந்தது. 

மறுபடியும் கதக்கிற்குத் திரும்பிய நடன நிகழ்ச்சி, பழங்கவிஞர் சூர்தாஸின் பத கீதம் ஒன்றையும் அரங்கேற்றியது. கண்ணபிரானின் எழிலையும் நயத்தையும் எடுத்துரைக்க முற்படும் அந்தப் பாடலுக்குப் பொருத்தமான முறையில் கதக் நடனமணிகளின் அங்க அசைவுகள் இருந்தன. பின்னர், இரண்டு பாணிகளை ஒன்றிணைத்த ஜுகல்பந்தி அங்கமும் இடம்பெற்றது.

வெளிப்புற அரங்கில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதும் பார்ப்பதும் ஒரு புதுமையான அனுபவம் என்று பாராட்டினார் முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் முஹம்மது இர்‌‌ஷாத்.

குறிப்புச் சொற்கள்