இன நல்லிணக்கம் என்பது பெரிய அளவிலான திட்டங்களோடும் பிரம்மாண்டமான மேடைகளோடும் மட்டுமே தொடர்புடையது என்று நம்மில் பலர் நினைக்கக்கூடும்.
ஆனால், உண்மையில் அது நம் அன்றாட வாழ்வில் நாம் நம் மீதும் நம்மைச் சுற்றியுள்ளோர்மீதும் காட்டும் அன்பிலிருந்தே தொடங்குகிறது என்பதைச் சமூகத் தலைவர்கள் மூவர் தங்களின் அன்றாடச் செயல்பாடுகள் மூலம் விளக்குகின்றனர்.
இவர்கள் ஆடம்பரமான விளம்பரங்களைத் தேடாமல், தங்களின் அண்டை வட்டாரங்களை வளம் பெறச் செய்து, அங்கு வாழும் மக்களை நேரடியாகச் சந்தித்து, பிணைப்புகளை உருவாக்கி வருகின்றனர்.
சராசரி மனிதர்களின் இத்தகைய உன்னத முயற்சிகள், இன்று ஒட்டுமொத்தச் சமூகத்திலும் மாபெரும் ஆக்ககரமான மாற்றத்தை ஏற்படுத்தி, இன நல்லிணக்கத்திற்குப் புதியதோர் அர்த்தத்தைத் தந்துள்ளது.
டோவர் தோப்பில் பசுமைப் புரட்சி
டோவர் சாலைக் குடியிருப்பாளர்கள் கட்டமைப்பின் தலைவரான பிஜு ஜார்ஜ், 56, கப்பல் துறை வல்லுநர்.
அக்கட்டமைப்பின் செயலாளர் எட்மண்ட், 45, விண்வெளிப் பொறியாளர்.
முற்றிலும் மாறுபட்ட துறைகளைச் சேர்ந்த இருவருக்கும் செடி வளர்ப்பதில் துளியும் அனுபவம் கிடையாது.
இருப்பினும், டோவரில் உள்ள அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் ஒன்றின் கூரைப்பகுதியை 88 செழிப்பான தோட்டங்கள் நிறைந்த பசுமைச் சோலையாக மாற்றியுள்ளனர்.
தங்களின் வேலைப் பளுவுக்கு மத்தியிலும், இதற்கான ஆயத்தப் பணிகளில் தீவிரமாக இறங்கிய இவர்கள், வீடு வீடாகச் சென்று துண்டறிக்கைகளைக் கொடுத்தது, குடியிருப்பாளர்களை நேரில் சந்தித்துப் பேசியது எனத் தொடர்ச்சியாக உழைத்ததோடு, இரவு 10:30 மணி வரை இணையவழிக் காணொளிக் கலந்தாலோசனைகள் மூலமும் இந்தத் திட்டத்திற்கு மெருகூட்டினர்.
2026 ஏப்ரலில் இந்தத் தோட்டம் திறக்கப்பட்டபோது, அது வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் குடியிருப்பாளர்கள், அருகிலுள்ள கூட்டுரிமை வீடுகளின் குடியிருப்பாளர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்தது. எட்மண்ட் தனது சீன மொழித் திறமையால் அனைவரையும் வரவேற்க, பிஜுவின் ஒருங்கிணைப்பு மக்களை இணைத்தது.
அண்மையில் நடந்த சமூக விருந்தில், குடியிருப்பாளர்கள் தாங்களே பயிரிட்டு, அறுவடை செய்த காய்கறிகளைத் தங்களின் தனித்துவக் கலாசார முறைப்படி சமைத்துக் கொண்டுவந்து பகிர்ந்து கொண்டனர். இந்தியச் சைவ உணவுகள் முதல் அயர்லாந்து உணவுகள் வரை அங்கே பரிமாறப்பட்டன.
இந்தத் திட்டத்தின் சவால்களைப் பற்றிக் கூறிய பிஜு, “எந்தவொரு நல்ல செயலைத் தொடங்கும்போதும், ‘இது சாத்தியமில்லை’ என்று சொல்பவர்கள் இருக்கவே செய்வார்கள். ஆனாலும் நாங்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டோம்,” என்றார்.
28 ஆண்டுகளாக அறிமுகப்படுத்திக் கொள்ளாத அண்டை வீட்டாரை இத்தோட்டம் இப்போது நண்பர்களாக்கியுள்ளது என்றதை நினைவுகூர்ந்து, அதையே அச்சமூகத் தோட்டத்தின் வெற்றியாகக் குறிப்பிட்டார் அவர்.
மொழிகளைக் கடந்து மனங்களை வென்ற திருமதி பேரமைசூரி
இதேபோன்றதொரு பன்முகத்தன்மைப் பிணைப்பை, சுவா சூ காங் வட்டாரம் 1 குடியிருப்பாளர்கள் கட்டமைப்பின் பொருளாளர் பேரமைசூரி மச்சப்பனின், 66, வாழ்க்கையில் காண முடிகிறது.
பள்ளியில் ஆங்கிலத்திலும், வீட்டில் மலையாளத்திலும் பேசிப் பழகிய இவர், பல ஆண்டுகால சமூகச் சேவையின் மூலம் மலாய், சீனம் போன்ற மொழிகளிலும் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார்.
இந்த மொழியியல் ஆற்றல், இனப் பாகுபாடின்றி அனைத்துக் குடியிருப்பாளர்களுடனும் அர்த்தமுள்ள உரையாடல்களை மேற்கொண்டு உறவு கொண்டாட அவருக்கு உதவியது.
சுவா சூ காங்கில் தான் ஆற்றிய நீண்ட காலச் சேவை குறித்துப் பகிர்ந்துகொண்ட திருமதி பேரமைசூரி, தன் மனத்திற்கு நெருக்கமான ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
சமூக நிகழ்ச்சிகளில் ஒருபோதும் கலந்துகொள்ளாத ஒரு முதிய மலாய்க் குடியிருப்பாளரை அவர் வீட்டுக்குச் சென்று திருமதி பேரமைசூரி அன்போடு மலாய் மொழியில் நலம் விசாரித்திருந்தார்.
அந்தப் பாசம் அந்த முதியவரை நெகிழச் செய்தது. தன் நீண்ட நாள் அண்டை வீட்டுப் பிரச்சினையை மனந்திறந்து திருமதி பேரமைசூரியிடம் பகிர்ந்துகொண்டார். அதையடுத்து, அதற்கான தீர்வுகாண அவர் உதவினார்.
“ஒவ்வொரு சமூகமும் வெவ்வேறு பண்டிகைகளைக் கொண்டாடினாலும், குடும்பம், மரியாதை, ஒருவருக்கொருவர் அக்கறை காட்டுதல் போன்ற பொதுவான நற்பண்புகளையே நாம் பகிர்ந்து கொள்கிறோம்,” என்கிறார் திருமதி பேரமைசூரி. 1994 முதல் அவ்வட்டாரத்திலேயே வசித்து வரும் அவர், அங்கு ஏற்பட்டுள்ள பாராட்டத்தக்க வளர்ச்சியைப் பார்த்து, அதனை ‘ஆர்ச்சர்ட் ரோடு’க்கு இணையாக வர்ணிக்கிறார்.
“இன்றைய வீவக வீடுகள் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால் தரை வீட்டில் வசிப்பது போன்ற உணர்வைத் தருகின்றன. அதனால்தான் ஆர்ச்சர்ட் ரோட்டை எங்கள் அக்கம்பக்கத்தில் கொண்டுவந்துவிட்டது போலத் தோன்றுகிறது,” என்று பெருமிதத்துடன் அவர் கூறினார்.

