உயரிய இலக்கும் சமூகத்தில் மாற்றம் உண்டாக்கும் உன்னத நோக்கமும் கொண்ட இளையர்களைச் சிறகுவிரித்துப் பறக்கச் செய்கிறது சிண்டா இளம் தலைவர்கள் திட்டம் (SYLP) 2025.
இவ்வாண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரை இளையர் 30 பேருக்கு நினைவில் நிற்கும் அனுபவத்தைத் தந்தது அத்திட்டம்.
சிண்டா இளையர் மன்றம், ‘பாத்ஃபைண்டர்ஸ்’ எனும் இளையர் வழிகாட்டி முயற்சியுடன் இணைந்து அதற்கு ஏற்பாடுசெய்தது. இளம் தலைவர்கள் கிலோடியா செல்வகுமார், ரோஷன் கணேஷ் ஆகியோர் வழிநடத்தும் முயற்சி ‘பாத்ஃபைண்டர்ஸ்’.
சிங்கப்பூரின் மாறிவரும் சமூகத்தில், புத்தாக்க மாற்றங்களை ஏற்படுத்த இளையர்க்குக் கைகொடுக்கிறது சிண்டா இளம் தலைவர்கள் திட்டம்.
சமூக சேவையில் நெடுங்காலம் ஈடுபட்டுள்ளோரிடமிருந்து கற்பது, நிஜ வாழ்வுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது போன்ற வாய்ப்புகளை இத்திட்டம் வழங்குகிறது.
அனைவரையும் உள்ளடக்கும் சமூகத்தை உருவாக்கும் நோக்கத்தில் இவ்வாண்டு பங்கேற்ற இளையர்கள், நான்கு சமூகக் கருக்களை ஆராய்ந்தனர்.
‘இந்து அறக்கட்டளை வாரிய ஆஷ்ரம்’ (HEB Ashram) மூலம், முன்னாள் குற்றவாளிகளுடன் இணைந்து ஓவியக்கலை, விளையாட்டுகளில் ஈடுபட்டனர். சமூகத்தில் முன்னாள் குற்றவாளிகளின் மறுசேர்க்கைப் பயணத்தை இளையர்கள் இன்னும் ஆழமாகப் புரிந்து கொண்டனர்.
உடற்குறையுள்ள விளையாட்டாளர்களுக்கான கடல்நாகப் படகோட்டுதல் அணியான ‘டீம் அலிட்டா’ உடன் இணைந்து, இளையர்கள் படகோட்டுதல் விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
பெற்றோர் சிறையிலிருப்பதால் வளர்ப்புப் பிள்ளைகளாய் இருக்க நேரிட்டோர்க்காக, ‘எஸ்ஜி கேர்ஸ்’ வழி காற்பந்து விளையாடி, அவர்களுக்கு நம்பிக்கையளித்தனர்.
தேக்கா வட்டாரத்திலுள்ள வெளிநாட்டு ஊழியர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சாய் & சேட்’ அமர்வு மூலம், ஊழியர்களின் வாழ்க்கை அனுபவங்களுக்குச் செவிசாய்த்தனர்.
திட்டத்தின் பட்டமளிப்பு நிகழ்ச்சி, சனிக்கிழமை (நவம்பர் 1) நடைபெற்றது. அதில் சிங்கப்பூர் இளையர் தொண்டூழியர் அணி நிர்வாக இயக்குநர் ஏஞ்சலா வோங், சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் உள்ளிட்டோர் வருகையளித்தனர். பிறரைப் புரிந்துகொள்வதிலிருந்தே தலைமைத்துவம் தொடங்குவதாகக் கூறினார் திருவாட்டி வோங்.
ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் யுக்தீஷ்வர் முருகபூபதி, 19, “பக்கவாதத்திலிருந்து மீண்டுவந்தோர் கடல்நாகப் படகோட்டத்தில் ஈடுபட முயன்றது உண்மையான பலம் என்ன என்பதை எனக்கு உணர்த்தியது,” என்றார்.
“அனைத்துப் பின்னணிகளைச் சார்ந்தவர்களும் சந்திக்கும் சவால்கள் குறித்த புதிய கண்ணோட்டத்தைத் தந்தது இத்திட்டம்,” என்றார் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர் சுரேஷ்குமார் ரேஷ்மா, 23.
‘அலிட்டா’ முயற்சியின் பயிற்றுநரும் விளம்பரப் பிரிவுத் தலைவருமான ஷிவானி பிரகாஷ், “நமக்குப் பழக்கப்பட்ட சூழலுக்கு வெளியே காலடி எடுத்துவைக்கும்போதுதான் அர்த்தமுள்ள வளர்ச்சி இடம்பெறுகிறது என்பதைக் கற்றுக்கொண்டேன்,” என்று கூறினார்.

