இளையர்கள் தங்கள் உடல்நலத்தைப் பேணி, நல்வாழ்வு குறித்த நடைமுறை, அறிவுபூர்வமான தகவல்களைப் பெற்றுப் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், சிண்டா தனது ‘லெட் ஹெர் ஷைன்’ திட்டத்தின்கீழ் ‘யூத் வெல்னஸ் 2026’ என்னும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சுகாதார வல்லுநர்கள், தன்னார்வலர்கள், சமூக அமைப்புகளை ஒன்றிணைக்கும் இந்த நிகழ்ச்சியில் 85 இளையர்கள் பங்கேற்றனர்.
“இளையர்கள் விழிப்புணர்வுடன் கூடிய முடிவுகளை எடுப்பதற்கு ஏதுவாக, அவர்களுக்கு நம்பகமான சுகாதாரத் தகவல்களை வழங்குவதன் மூலம், சிறுவயதிலிருந்தே அவர்கள் நல்ல பழக்கவழக்கங்களை வளர்த்துக்கொள்ள உதவும்,”என்று குமாரி இந்திராணி ராஜா குறிப்பிட்டார்.
மேலும், இளையர்கள் தங்களின் மனத்தைப் புரிந்துகொள்ளவும், உடலைப் பேணி, வருமுன் காக்கும் நல்வாழ்வு முறைகளை ஒரு வாழ்நாள் பயணமாக ஏற்றுக்கொள்வதும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
மருத்துவர்களின் ஆலோசனைகள்
இளையர்கள் தங்களது மனம், இதயம், உடல் ஆகியவற்றின் நலனைப் பேணிப் பாதுகாப்பதை ஊக்குவிக்கும் நோக்கில் நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக ‘60 நிமிடங்கள், 3 மருத்துவர்கள்’ என்ற கலந்துரையாடல் பகுதி இடம்பெற்றது.
இதில் பங்கேற்ற மனநலம், இதயநலம், உடல்நலம் சார்ந்த வல்லுநர்கள், இளையர்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான மன உறுதி, இதயநலம், விளையாட்டுகளின்போது ஏற்படும் காயங்களைத் தடுத்தல் போன்ற முக்கியத் தலைப்புகளில் பல தகவல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.
மனம்
மனநலப் பிரச்சினைகளுக்கான உளவியல் சிகிச்சை வழங்கும் திருவாட்டி ஸ்ரீமதி சுவாமிநாதன், இளையர்கள் மன அழுத்தத்தைக் கையாளவும் மீள்திறனை வளர்க்கவும் கடுமையான மனச்சோர்வைத் தடுக்கவும் நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ளவும் உதவும் நடைமுறை உத்திகளைப் பகிர்ந்துகொண்டார்.
உடல்
விளையாட்டு, உடற்பயிற்சி நிபுணத்துவ மருத்துவர் தினேஷ் சிறிசேனா, இளையர்கள் நிலையான உடற்பயிற்சிப் பழக்கங்களை வளர்த்துக்கொள்ள உதவும் வகையில், காயங்களைத் தடுத்தல், அதிலிருந்து மீளுதல், பாதுகாப்பான பயிற்சி நுட்பங்கள் குறித்த வழிகாட்டுதல்களை வழங்கினார்.
இதயம்
இதயநோய் நிபுணத்துவ ஆலோசகர் பினாகின் வி. பரேக், இதயநலம் சிறுவயதிலிருந்தே தொடங்குகிறது என்பதை எடுத்துரைத்தார். பங்கேற்பாளர்கள் விழிப்புணர்வுடன் கூடிய வாழ்க்கை முறைத் தெரிவுகளைக் கடைப்பிடிக்கவும் தூக்கம், ஊட்டச்சத்து, மற்ற அன்றாடப் பழக்கவழக்கங்கள் நீண்டகால இதயநலத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளவும் அவர் ஊக்குவித்தார்.
“மன அழுத்தத்தைக் கையாளுதல், சுறுசுறுப்பாக இருத்தல் அல்லது நமது உடலின் தேவைகளைப் புரிந்துகொள்ளுதல் என எதுவாக இருந்தாலும், அந்தப் பாதையில் நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு நேர்மறையான அடியும் முக்கியமானது. இன்றைய நிகழ்ச்சி நமது இளையர்கள் தங்கள் உடல்நலத்திற்குத் தாங்களே பொறுப்பேற்கவும் தற்போதும் எதிர்காலத்திலும் தங்களது நல்வாழ்வை மேம்படுத்தும் தெரிவுகளைத் தேர்ந்தெடுக்கவும் தேவையான நம்பிக்கையையும் அறிவையும் வழங்கியிருக்கும்,” என்று டாக்டர் பினாகின் கூறினார்.
நல்வாழ்வு அனுபவங்கள்
மேலும், இளையர்களைக் கவரும் வகையில் பல்வேறு நல்வாழ்வுச் சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. இச்சாவடிகளில் உடல்நலம் சார்ந்த தகவல்களும் அன்றாட நல்வாழ்விற்கான எளிய குறிப்புகளும் வழங்கப்பட்டன. சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு ஊக்குவிக்கும் நோக்கில் வழிகாட்டப்பட்ட உடற்பயிற்சி, நடன நடவடிக்கைகளில் இளையர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
“மருத்துவ வல்லுநர்களின் அறிவுரைகள் உடல்நலத்தைப் பற்றி விழிப்புணர்வுடன் கூடிய முடிவுகளை எடுக்க எனக்கு அதிக நம்பிக்கையை அளித்ததுடன், அன்றாட வாழ்க்கை முறை, விளையாட்டு ஆகிய இரண்டிற்கும் ஆதரவாக இருக்கும் நிலையான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும் மீண்டும் வலியுறுத்தின,” என்று நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரிப் பட்டதாரியும் தேசிய விளையாட்டாளருமான 20 வயது லாவண்யா ஐெய்காந்த் கூறினார்.
‘த ஃபவுண்ட்ரி’ (The Foundry) வளாகத்தில் ஜூலை 18ஆம் தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்குத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ‘16 இந்தியப் பங்காளி அமைப்புகளின் மகளிர், இளையர் பிரிவு’ ஏற்பாடு செய்திருந்தது.

