சிங்கப்பூர் போன்ற ஒரு பரபரப்பான நகரத்தில், இசை என்பது தலைமுறைகளை இணைக்கும் ஒரு பாலமாக உள்ளது.
‘சிங்அலாங் தமிழ் சிங்கப்பூர்’ அந்த இணைப்பிற்கு ஒரு புதிய பொருளைத் தருகிறது.
மேடையில் பாடுபவர்களைப் பார்வையாளர்கள் ரசிக்கும் வழக்கத்திற்கு மாறாக, அங்கிருக்கும் அனைவரையும் பாடகர்களாக மாற்றுகிறது இந்தச் சமூக முயற்சி.
இது ஒரு கச்சேரியோ கராவோக்கேயோ அல்லாமல் நமது பாரம்பரியத்தையும் இசையையும் ஒன்றிணைந்து கொண்டாடும் ஒரு நிகழ்வாகும்.
டிசம்பர் 27ஆம் தேதி இரவு, வயது வரம்பைக் கடந்து ஒரு நெகிழ்ச்சியான இசை அமர்வுக்காக ‘வீரா ஃபிளேவர்ஸ்’ உணவகத்தில் அனைவரும் ஒன்றுகூடினர்.
பழைய பாடல்களில் மூழ்கிய முதியவர்கள் முதல் தங்கள் வேர்களைத் தேடும் இளையர்கள் வரை அனைவரும் ஒருமித்த உணர்வுடன் இதில் பங்கேற்றனர்.
“இசையை ஒரு சிகிச்சையாக நாங்கள் கருதுகிறோம்,” என்கிறார் இந்த நிகழ்ச்சியை வழிநடத்திய ஒருங்கிணைப்பாளர் விஜய் பாலையா, 46.
இலங்கை மற்றும் மலேசியாவில் வெற்றிகரமாக நடந்தேறிய ‘சிங்அலாங் தமிழ் சிங்கப்பூர்’ முயற்சிகளால் ஈர்க்கப்பட்டு, விஜய்யும் அவரது நண்பர் பிரேம் குமார் தாசரதியும் தங்கள் குடும்பத்தாருடன் இணைந்து சிங்கப்பூரில் இந்த நிகழ்வை நிகழ்த்தினர்.
தொடர்புடைய செய்திகள்
“தொழில்முறை பாடகர்கள் மட்டுமே பாட வேண்டும்,” என்ற பொதுவான எண்ணத்தை உடைப்பதே இந்தத் துவக்கத்தின் நோக்கம்.
பாடல், நடனம் மற்றும் ஒருவருக்கொருவர் உரையாடும் பிரதான நிகழ்வுகள் மட்டுமல்லாது அண்மையில் இந்தக் குழுவினர், துடிப்புடன் மூப்படையும் மையத்திற்குச் சென்று அங்குள்ள பெரியவர்களுடன் தாங்களே சமைத்த உணவையும் இசையையும் பகிர்ந்துகொண்டனர்.
முதியோர் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
இவர்களின் சேவை இதோடு நின்றுவிடவில்லை. ‘ஹார்மனி அண்ட் ஹியுஸ்’, ‘கிராண்ட் மொபைல்ஸ்’ போன்ற நிறுவனங்களின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த நிகழ்வின் மூலம் கிடைத்த லாபம் இலங்கை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இசைக் கலைஞர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தார்கள்.
மேள தாளக் கலைஞர் ஜானதன் சந்தனம், 31, குறிப்பிடுவதுபோல உள்ளூர் திறன்களை ஆதரிப்பதும் தமிழ் இசைத் துறை செழிப்பதை உறுதிசெய்வதும் இந்த நிகழ்ச்சியின் இலக்கு.
“இந்தப் புத்தாக்க முயற்சி ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது,” என்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர், கித்தார் கலைஞர் வெங்கடேஷ் மயில் இராவணன், 31, கூறினார்.
தமிழர்கள் அனைவரும் ஒன்றிணையும் ஒரு சமூக நிகழ்ச்சியாக இந்த நிகழ்வு அமைந்தது என்றார் பாடகர் பிரசன்னா ரவி 31.
முன்பின் தெரியாதவர்களைக் கூட ஒரு பாடகர் குழுவாக மாற்றுவதன் மூலம், ஒருமித்த குரலில் பாடும் பாடலே சமூகத்தின் வலிமையான பிணைப்பு என்பதை ‘சிங்அலாங் தமிழ்’ நிரூபித்து வருகிறது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற சித்ரா, தான் மிகவும் விரும்பிய ஒரு நல்ல சமூக நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்ததாகக் கூறினார்.

