வி.கே. சந்தோஷ் குமார்
இலங்கையைச் சுழற்றியடித்த ‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட 2.3 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்குக் கைகொடுக்கும் வகையில், சிங்கப்பூரின் இந்திய, மலாய், சீனக் கலைச் சமூகங்கள் ஒன்றிணைந்து ஒரு சிறப்பு நன்கொடை திரட்டு இசைக்கச்சேரியை நடத்துகின்றன.
‘ஒற்றுமைக்கான நடனங்கள்: இலங்கையை மீளமைப்போம்’ (Dances of Unity: Rebuilding Sri Lanka) என்ற தலைப்பிலான அந்த நிதி திரட்டு நிகழ்ச்சி, 2026 மார்ச் 5ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் மண்டபத்தில் நடைபெறும்.
துயர்துடைப்பு பணிகளுக்காகச் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள அந்த நிகழ்ச்சிக்கு இலங்கைத் தூதரகம், மகா கருணா பௌத்த சங்கம், சிங்கப்பூர் சிங்கள பௌத்த சங்கம் ஆகியவை ஆதரவு வழங்குகின்றன.
இந்து அறக்கட்டளை வாரியம் அந்நிகழ்ச்சிக்கான இடத்தை வழங்கியுள்ளது.
2025ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட இலங்கையைப் புரட்டிப் போட்ட ‘டிட்வா’ புயலால் 6,025 வீடுகள் முழுமையாகவும், நூறாயிரத்திற்கும் அதிகமான வீடுகள் பகுதியளவும் சேதமடைந்தன.
உலக வங்கி மதிப்பீட்டின்படி, அதனால் ஏற்பட்ட பொருளியல் இழப்பு 4.1 பில்லியன் அமெரிக்க டாலர் (S5.2 பில்லியன்).
முன்னாள் தூதரும் சமய நல்லிணக்க அமைப்பின் முன்னாள் தலைவருமான கே. கேசவபாணியின் முயற்சியால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வில், அப்சராஸ் டான்ஸ் நிறுவனம், பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமி, டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், ஈரா டான்ஸ் தியேட்டர் உள்ளிட்ட பல முன்னணி கலைக்குழுக்கள் தங்களின் கலைப்படைப்புகளை வழங்க முன்வந்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
அனைத்துக் கலைஞர்களும் இதற்காகக் கட்டணமின்றி இலவசமாகப் பணியாற்றுகின்றனர்.
இந்த இசைக்கச்சேரிக்கான நன்கொடைச் சீட்டுகள் $25, $40 , $100 ஆகிய விலைகளில் கிடைக்கின்றன.
நூறு வெள்ளிக்குமேல் அதிக பங்களிப்பு வழங்குவோருக்கு விஐபி (VIP) சீட்டுகள் வழங்கப்படும்.
இதன்மூலம் திரட்டப்படும் முழுத் தொகையும் இலங்கையின் மனிதநேய உதவி மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காகச் செலவிடப்படும்.

