ஓய்வு நேரத்தைப் பல்வேறு வழிகளில் போக்கும் இளையர்களுக்கு மத்தியில், இயற்கையைப் பேணும் உணர்வுடன் ராகவ் நாராயணஸ்வாமி, மூவின் ஞானசென்கரன் இருவரும் செயல்படுகின்றனர்.
பறவைகளைப் பார்த்து அவற்றைப் பற்றிய அறிவை வளர்த்துக்கொண்டுள்ள இந்த இளையர்களிடம் அரிய, சுவையான தகவல்கள் பொதிந்துள்ளன.
சிங்கப்பூரின் அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு மத்தியில் இயற்கையின் அங்கமான பறவைகளைப் பாதுகாப்பது, அவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவற்றை இவர்கள் அங்கம் வகிக்கும் ‘சிங்கப்பூர்ப் பறவைகள் சங்கம்’ (Bird Society of Singapore) செய்து வருகிறது.
பத்து வயதில் தாயாருடன் மலேசியாவுக்குச் சென்றபோது ராகவ் பார்த்த காட்சிகள், தம் மனத்தில் பறவைகள்மீதான ஆர்வத்தை விதைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
“நாங்கள் முதலில் பறவைகளை வேடிக்கை மட்டுமே பார்த்தோம். ஆனால், காலப்போக்கில் ஆய்வு மனப்போக்குடன் சிங்கப்பூரில் பறவைகளை உற்று நோக்கத் தொடங்கினோம்,” என்று 24 வயது ராகவ் கூறினார்.
2016ல் இணையத்தளமாகத் தொடங்கப்பட்ட ‘சிங்கப்பூர்ப் பறவைகள் திட்டம்’ (Singapore Birds Project), 2023ல் ஒரு சங்கமாக உருவெடுத்தது.
2010ல் நடைபெற்ற பள்ளிச் சுற்றுப்பயணத்தில் ‘ரூஃபஸ் டெய்ல்ட் டெய்லர்பேர்ட்’ என்ற பறவையைத் (Rufous-tailed Tailorbird) தாம் கண்டதாகவும் அதன் பிறகு இந்தப் பொழுதுபோக்கில் ஈர்க்கப்பட்டதாக 34 வயது மூவின் தெரிவித்தார்.
“பறவையின் இனத்தைக் கண்டறிவதற்கான தேடல் என்னைப் பறவை ஆர்வலராக மாற்றியது,” என்று சுற்றுச்சூழல் விரிவுரையாளராகப் பணிபுரியும் திரு மூவின் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பறவைகளைக் காண மேற்கொண்ட பயணங்கள் கரடுமுரடானவை என இருவரும் குறிப்பிட்டனர். எக்குவடோர் நாட்டின் காடுகளில் ‘இம்பீரியல் ஸ்னைப்’ (Imperial Snipe) எனும் பறவையைப் பார்க்க அதிகாலையில் தாங்கள் மேற்கொண்ட பயணத்தை இருவரும் விவரித்தனர்.
“எக்குவடோரில் அந்தப் பறவையைப் பார்க்க நாங்கள் அதிகாலையில் 700 மீட்டர் உயரமான மலையில் ஏற வேண்டியிருந்தது. அங்கு உயிர்வாயு அளவு மிகவும் குறைவாக இருந்ததால் சுவாசிக்கக் கடினமாக இருந்தது,” என்று மூவின் கூறினார்.
நார்வே சென்றிருந்தபோது, கோழி அளவில் பெரிதான எட்டுக் குட்டிகளுடன் இருந்த ராக் டார்மிகன் (Rock Ptarmigan) பறவை திடீரென்று தன்னைத் துரத்த ஆரம்பித்ததைச் சிரித்தவாறு நினைவுகூர்ந்தார் ராகவ்.
இன்றைய காலகட்டத்தில் பறவைகளை அடையாளம் காண்பது மிகவும் எளிதாகிவிட்டதாக இருவரும் தெரிவித்தனர். ‘மெர்லின்’ (Merlin) போன்ற செயலிகள் பறவைகளின் ஒலியை வைத்து அவை எந்த வகையைச் சேர்ந்தவை என்பதைத் துல்லியமாகக் கண்டறிய உதவுகின்றன.
சிங்கப்பூரில் கட்டடங்களில் மோதிப் பறவைகள் உயிரிழப்பது முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்றும் அதைத் தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
பறவையைப் பார்த்தல் என்பது பொழுதுபோக்கு மட்டுமன்றி, அது இயற்கையுடன் ஆழமான பிணைப்பை உருவாக்கும் செயல் என்றும் சிங்கப்பூரின் பசுமையை அழகாக்கும் இதுபோன்ற பறவைகளைப் பாதுகாக்க வேண்டியது அனைவரின் பொறுப்பு என்றும் இருவரும் கூறுகின்றனர்.

