புக்கிட் பாஞ்சாங் பொங்கல் கொண்டாட்டங்கள், சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் புதிய சாதனையுடன் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) தித்திப்பாக நடந்தேறின.
சிறப்பு விருந்தினர்களான வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், ஹாலந்து - புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எட்வர்ட் சியா, புக்கிட் பாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா உட்பட 2,700 பேர் முன்னிலையில் சாதனை படைக்கப்பட்டது.
“540க்கும் மேற்பட்டோர் சேர்ந்து மாவிலையில் வரைந்ததற்காகச் சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளோம். சீன, மலாய் மொழிகளிலும் சிலர் பொங்கல் வாழ்த்துகளை எழுதினர். நம் வீட்டில் எப்படி மாவிலைத் தோரணம் கட்டித் தொங்க விடுகிறோமோ அதுபோல் இங்கும் தோரணங்களைக் கட்டித் தொங்கவிட்டுள்ளோம்,” என்றார் புக்கிட் பாஞ்சாங் பழைய, புதிய குடியிருப்பாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு (ஐஎன்சி) செயற்குழு உறுப்பினர் திவ்யா.
இதைச் சேர்த்து இதுவே பொங்கல் கொண்டாட்டத்தில் தமது குழு படைத்த 16வது சிங்கப்பூர் புத்தகச் சாதனை என்றார் புக்கிட் பாஞ்சாங் ஐஎன்சி தலைவர் பெருமாள் மூர்த்தி PBM.
புக்கிட் பாஞ்சாங் குடிமக்கள் ஆலோசனைக் குழுவுடன் புக்கிட் பாஞ்சாங் ஐஎன்சி இக்கொண்டாட்டங்களை ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வருகிறது. அதனுடன் இணைந்து ரத்த தானமும் நடைபெற்று வருகிறது.
“சிங்கப்பூரில் தீபாவளி நிகழ்ச்சிகளே பிரபலமாகக் கொண்டாடப்பட்டுவந்த வேளையில் 2008ல் ஏன் நாம் தமிழர் திருநாளான பொங்கலைக் கொண்டாடக் கூடாது என்ற எண்ணம் எங்களுக்குத் தோன்றியது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு புதிய சாதனையைப் படைக்க விரும்புகிறோம்,” என்றார் திரு மூர்த்தி.
இதற்கு முன்பு, பொங்கல் பானைகளால் செய்யப்பட்ட ஆக நீண்ட சீன நடனக் கடல்நாகம், ஆகப் பெரிய பொங்கல் பானை, ஆகப் பெரிய முளைப்பாரித் தொட்டி ஊர்வலம், ஆகப் பெரிய அளவில் உரல், உலக்கையில் நெல் குத்துதல், ஆக அதிகமானோர் ஒன்றாகப் பொங்கல் வைத்தல் போன்ற சாதனைகளை அவரது குழு படைத்துள்ளது.
எஸ்ஜி60 என்ற சொல்லுடன் மக்களைக் கவரும் சிக்குகோலத்தை வரைந்திருந்தனர் ஐஎன்சி செயற்குழுவினர்.
தொடர்புடைய செய்திகள்
ஓவ்வோர் ஆண்டும் ரங்கோலி கோலம் போடும் வழக்கத்துக்கு மாறாக இம்முறைச் சிக்குகோலம் போட முடிவெடுத்தனர் இந்திரா பன்னீர்செல்வம் குழுவினர்.
“சிக்குகோலம் மிகவும் கடினம்; வண்ணத்துடன் இடுவது இன்னும் கடினம். ஏழு மணி நேரம் சேர்ந்து வரைந்துள்ளோம். 60 ஆண்டுகளுக்காக, எங்கிருந்து பார்த்தாலும் 60 புள்ளிகள் வரும் வகையில் வரைந்துள்ளோம்,” என்றார் ஐஎன்சி செயற்குழு உறுப்பினர் கங்கா பாஸ்கரன்.
மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடிய ‘மணிமாறன் கிரியேஷன்ஸ்’, முளைப்பாரிகள் ஏந்திய சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆகியோர் விருந்தினர்களுக்கு ஆரவார வரவேற்பளித்தனர்.
“இக்கொண்டாட்டம் ஆண்டுக்கு ஆண்டு விரிவடைந்துள்ளது. இந்தியர்கள் மட்டுமன்றி, பல்லினச் சமூகமும் ஒன்றுகூடும் நிகழ்ச்சியாக, புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தின் இன நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கிறது. நிலையற்ற சூழலின் மத்தியில் நமக்கு இருக்கும் நட்புகள், சமூகம், நாட்டுக்காக நாம் நன்றியுடன் இருப்போம்,” என்றார் டாக்டர் விவியன்.
“நம் குடியிருப்பாளர்கள் திருவிழா போன்ற உணர்வுடன் ஒன்றுகூடி தமிழர் பண்பாட்டைப் பாராட்டும் வாய்ப்பாக இக்கொண்டாட்டம் அமைகிறது,” என்றார் திரு லியாங். “நிலையற்ற சூழலிலும் எதிர்பாராவிதமாக சென்ற ஆண்டு நமக்கு நல்ல ஆண்டாக அமைந்தது. நமக்குப் பல வரப்பிரசாதங்கள் கிடைத்தன. அவற்றுக்கு நன்றிகூறுவோம். ஒற்றுமையுடன் இருப்போம்,” என்றார் திரு சியா.
“பரமபதம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளைக் காட்சிப்படுத்துகிறோம். சேர்ந்து பொங்கல் கொண்டாடுவதால் எங்களுக்குப் பிணைப்பு உருவாகிறது. தமிழும் வளர்கிறது. பாரம்பரியமும் தெரிகிறது,” என்றனர் சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஸ்ரீராம் கோபிதா, கண்ணன் ஹிந்துஜா.
நிகழ்ச்சிக்கு ஸ்ரீ நாராயண மிஷன் முதியோர் இல்லத்திலிருந்து கிட்டத்தட்ட 40 முதியோர் வந்து சிறப்பு சேர்த்தனர்.
இந்திய நடனங்கள் மட்டுமன்றி சீனர்கள் வழங்கிய சீன, நவீன நடனங்களும் இன நல்லிணக்கத்தைப் பறைசாற்றின.

