தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாட்டுப்புறக் கலைகளை வளர்க்க தளம் அமைத்துத் தந்த சிங்கப்பூர்

4 mins read
“ஒரு குயிலு கூவுது.. ஒரு மயிலிங்காடுது.. வாம்மா கன்னியம்மா… என்னோடு வந்திடம்மா…”
d522bd78-7b80-414c-93ad-b34d49d02637
நாட்டுப்புற இசை, நடனக் கலைஞர்கள். - படம்: த. கவி

இப்படி அன்றாடம் காணும் அழகிய காட்சி முதல், காதல், கொண்டாட்டம், இறப்பு என அனைத்து உணர்வுகளையும் பாடலின் மூலம் கடத்துவது தமிழர் மரபு.

இவை காலம் கடந்து வாழ்வியலைக் கடத்தும் வரலாற்றுப் பதிவு என்றும் சொல்லலாம். அவற்றை உலகெங்கிலும் வாழும் தமிழ் மரபினர்க்கு கொண்டு சேர்க்கும் கனவுடன் பல நாட்டுப்புறக் கலைஞர்கள் முயன்று வருகின்றனர்.

அதற்கு ஆதரவளிக்கும் நோக்கில், அவர்களுக்கு சிங்கப்பூர் அமைப்புகள் தளம் அமைத்து கொடுத்துள்ளது பெருமைக்குரியது என்றனர் அக்கலைஞர்கள்.

சிங்கப்பூரில் நாட்டுப்புறக் கலைகள் திருவிழா நடத்துவது, அதன்மூலம் தமிழகத்திலேயே நலிவடையும் கலைகளுக்கு உயிரூட்டுவதுடன், சிங்கப்பூர் இளையர்களுக்கு அதன்மீது ஆர்வம் ஏற்பட வழிவகை செய்யும் என்று சிங்கப்பூர் கலை, சமூக அமைப்புகள் கருதுகின்றன.

‘நாட்டுப்புற நடனம் எவ்வகையிலும் குறைந்ததன்று’

மேனாட்டு நடனக் கலைஞராகத் தன் பயணத்தைத் தொடங்கிய நாராயணி, நாட்டுப்புறக் கலைகள் மீது ஏற்பட்ட தீராக் காதலால் ஒயிலாட்டம், பறையாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், துடும்பாட்டம் ஆகியவற்றைக் கற்று மேடை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

பிற இந்தியப் பாரம்பரியக் கலை வடிவங்கள்போல நாட்டுப்புறக் கலைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார் அவர்.

“மேல் நாட்டு நடனத்துக்கும் பிற பாணி நடனங்களுக்கும் நாங்கள் ஆடுபவை எந்த வகையிலும் குறைந்ததில்லை. பிற கலைஞர்கள் நாட்டுப்புறக் கலைஞர்களைப் பார்க்கும் பார்வையும் பொதுமக்களுக்கு இந்தக் கலைகள் மீதுள்ள கண்ணோட்டமும் நிச்சயம் மேம்பட வேண்டும். அதற்காகவே இந்த நடனங்களை உலகெங்கிலும் சென்று அரங்கேற்ற தயாராகியுள்ளேன்,” என்று சொன்ன நாராயணியின் வார்த்தைகளில் அறச்சீற்றம் தெறித்தது.

இவ்வகை நாட்டுப்புறக் கலைகளை சிங்கப்பூர் இளையர்கள் கற்க முயல்வது சிறப்பானது என்று சொன்ன அவர், இதனைப் பலர் கற்று, இதற்கான அங்கீகாரத்தையும் ரசிப்புத் தன்மையையும் மேம்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

‘குடும்பம் எதிர்த்தாலும் கரகம் கைவிடாது’

கல்லூரிக் காலத்தில் விளையாட்டாகக் கற்ற கரகம் தனது வாழ்க்கையுடன் ஒன்றிப்போகும் என வினோதா எதிர்பார்க்கவில்லை. பக்தியுடன் தொடங்கிய இந்தக் கலை வடிவம் காலப்போக்கில் மருவி அதற்கான மரியாதை குறைந்து போனது வருத்தமளிப்பதாகக் கூறிய அவர், அதனை மாற்ற இளையர்களால் முடியும் என்றார்.

இவரது குடும்பத்தினரின் வலுவான எதிர்ப்பையும் மீறி முழுநேர கரகாட்டக் கலைஞராகப் பயணித்துவரும் இவருக்கு தொடர்ந்து தன்னால் இயன்றவரை பரந்த மக்களிடம் இதனைக் கொண்டு சேர்க்க வேண்டும் எனும் கனவு இருக்கிறது.

“பல்வேறு இசைக் கருவிகளுடன் சேர்த்து தாளம் தப்பாமல் இந்த நுணுக்கமான நடனத்தை ஆடுவது கடினம். இது கண்டு ரசிக்க வேண்டிய, போற்றப்பட வேண்டிய கலை வடிவம். இதனை இங்குள்ள இளையர்கள் ரசிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

‘பாட்டியின் பாடல்கள் மேடையேற வேண்டும்’

கிராமத்தில் வாழ்ந்த தம் தாயாரும், அம்மாச்சியும் வயல் வேலை பார்த்தபோது களைப்பு நீங்க பாடிய பாடல்கள் அனைத்தும் மேடையேற வேண்டும் எனும் கனவுடன் செயல்பட்டு வருகிறார் பாடகி சுகந்தி.

கடந்த 17 ஆண்டுகளாக நாட்டுப்புறப் பாடல்கள் பாடும் அவர், “ஒவ்வொரு பகுதிக்கும் உரிய சொற்கள், நடை அவர்களது பாடலில் தெரியும். உணர்வுகளைப் பிறருக்கு அப்படியே கொண்டு சேர்க்கும். இவ்வாறான பாடல்கள் அழியாது நிலைத்திருக்க, இவற்றை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது அவசியம்,” என்றார்.

“கர்நாடக இசை, திரையிசைப் பாடல்கள்போல சிக்கலான சுருதி, ராகம் இல்லாமல் அனைவரும் பாடக்கூடிய எளிய தாளத்தில் அமைந்தவை நாட்டுப்புறப் பாடல்கள். பெரும்பாலும் ஒருவர் பாட மற்றொருவர் கேட்டுப் பாடி, செவி வழி பயணித்து வந்து சேர்ந்தவை இப்பாடல்கள். இவற்றை ஆவணப்படுத்தி நிலைத்திருக்க வழிசெய்ய வேண்டும்,” என்றார் சுகந்தி.

‘மகிழ்ச்சியைப் பரப்புவதே இலக்கு’

நாட்டுப்புறக் கலைஞர்கள் பலர் தலைமுறை தலைமுறையாக பயணிப்பது ஒருபுறமிருக்க, சாதாரண குடும்பத்திலிருந்து வந்து கலைக்காக தன்னை அர்ப்பணித்துள்ளார் கோபி கண்ணன்.

பெரிதாக வெளியில் தெரியாத தனித்துவமான இசைக்கருவி வாசிக்க வேண்டும் எனும் விருப்பத்தினால் ‘உருட்டு’ எனும் மரபுசார் கருவி கற்று வாசித்து வருகிறார்.

தன்னை எல்லாவித மனக் குழப்பங்களிலிருந்தும் மீட்பது இசைதான் எனச் சொன்ன அவர், “வெற்றியை, மகிழ்ச்சியைப் பரப்பும் தாளக் கருவிகள் மூலம் உற்சாகத்தைப் பரப்புவதும், அதில் கிடைக்கும் மன நிறைவும் வேறெதிலும் கிடைக்காது,” என்று சிரிப்புடன் பகிர்ந்தார்.

தன்னைப்போல ஆர்வமுள்ள யாவரும் அழிந்துவரும் கலைகளைத் தேடி, கற்று, அவற்றை நிலைக்கச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இவர்கள் தவிர, நான்காம் தலைமுறையாக தவில் வாசிக்கும் சேகர், 50 ஆண்டுகளாக நாதஸ்வரம் வாசிக்கும் மாரிமுத்து, பல தலைமுறைகளாகத் தங்கள் குடும்பம் வாசித்து வரும் துடும்பு எனும் இசைக்கருவியை வெளிநாடுகளுக்குக் கொண்டு சேர்க்க முயலும் ‘கலைவளர்மணி’ ச.சாமிநாதன் சண்முகம், ஆண்களுக்கு இணையாக பெண்கள் பலரும் பறையாட்டம் ஆட முன்வர வேண்டும் என விரும்பும் சுகுணா பூமிநாதன் ஆகியோரும் தங்கள் கனவை நனவாக்க முதல் தளத்தை சிங்கப்பூர் அமைத்துக் கொடுத்திருப்பது பெரும் ஊக்கமளிப்பதாகக் கூறினர்.

குறிப்புச் சொற்கள்