தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் பிரபல நடிகருமான மறைந்த எம்ஜிஆரின் நினைவு நாளில், ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்லத்தில் உணவு, பரிசுகள் அளித்து அவருக்கு நினைவஞ்சலி செலுத்தினர் சிங்கப்பூர் எம்ஜிஆர் ரசிகர் குழுவினர்.
1988ல் தொடங்கப்பட்டு தற்போது கேலாங் ஈஸ்ட்டில் செயல்பட்டு வரும் இக்குழுவைச் சேர்ந்த 60 பேர் ஒன்றிணைந்து பங்களித்து ஒவ்வோர் ஆண்டும் எம்ஜிஆரின் நினைவு நாளில் நற்செயல்கள் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இவ்வாண்டு அக்குழுவினர், ஏறத்தாழ $1,500 செலவில் சிறுவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, அரிசி, மைலோ பானம் உள்ளிட்ட இதர பொருள்களையும் வழங்கியுள்ளனர்.
இக்குழுவை தம் குடும்பத்தினருடன் இணைந்து தொடங்கிய திரு எம்.ஜி. செல்வம், எம்ஜிஆரின் ஆத்ம சாந்திக்காக ஒவ்வோர் ஆண்டும் தங்கள் குழு வழிபாடு நடத்தி வருவதாகவும் சொன்ன அவர், “இவ்வாண்டு அவரது நினைவு நாளில், கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோவிலில் வழிபாடு நடைபெற்றது”, என்றார்.
2016ல் முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அவரையும் நினைவஞ்சலியில் சேர்க்கத் தொடங்கியதாகச் சொன்னார் திரு செல்வம்.
“வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தலைவர்களின் நினைவு நாளில், அவர்களது அடிகளைப் பின்பற்றி நற்செயல்களில் ஈடுபடுவதே, அந்த நாளை அர்த்தமுள்ளதாக்கும். எங்களால் இயன்றவரை தொடர்ந்து அடுத்தவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் குழுவின் நோக்கம்,” என்றார் திரு செல்வம்.
தவறான பாதையில் சென்றோரும் மீண்டு வந்து எங்களுடன் இணைந்து நற்செயல்களில் ஈடுபட வேண்டும் என்பது தமது விருப்பம் என்றும் அவர் சொன்னார்.