சிங்கப்பூரின் வளமான கடல்சார் வரலாற்றையும் நாட்டை உலகளாவிய கடல்சார் மையமாக மாற்றிய சமூகங்களையும் கொண்டாடும் வகையில் சிங்கப்பூர் மரபுடைமை விழா 2026 நடைபெறவுள்ளது.
‘நம்மைக் கட்டமைத்த நீரோட்டங்களில் பயணிப்போம்’ (Sail the Currents that Shape Us) எனும் கருப்பொருளில் தீவெங்கிலும் நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுடன் களைகட்டவுள்ளது இந்த ஆண்டின் மரபுடைமை விழா.
மே மாதம் 1 ஆம் தேதி தொடங்கிய இவ்விழா மே 24ஆம் தேதிவரை நீடிக்கும். 23வது முறையாக நடைபெறும் இவ்விழாவை இவ்வாண்டு, தேசிய மரபுடைமைக் கழகத்தின்கீழ் இயங்கும் ‘ஹெரிட்டேஜ் எஸ்ஜி’ ஏற்பாடு செய்துள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க நீர்வழிகளை வடிவமைத்ததுடன் சிங்கப்பூரின் அடையாளத்தையும் வரையறுத்த கதைகளுக்கு உயிர் கொடுக்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் அமையும்.
கனவுகளின் துறைமுகம் (Port of Dreams)
‘தி ஃபுல்லர்ட்டன் பே’ சிங்கப்பூர், வரலாற்றுச் சிறப்புமிக்க ‘கிளிஃபர்ட் பியர்’ ஆகியவற்றைப் பின்னணியாககொண்ட இந்த நாடக அனுபவம், பார்வையாளர்களை 1930கள் தொடங்கி தற்காலம்வரை பயணிக்கச் செய்யும்.
இந்நிகழ்ச்சி மே 9-10, 16-17, 23-24 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
லிட்டில் இந்தியா சுற்றுலா
தொடக்கக் காலத்தில் குடியேறியவர்கள், புதிய, அறிமுகமற்ற நிலத்தில் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு அமைந்தது என்பனவற்றை விளக்கும் அரைநாள் லிட்டில் இந்தியா சுற்றுலாவும் இந்நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக இடம்பெறுகிறது.
மே 1, 2, 9, 12, 16, 20, 23 ஆகிய தேதிகளில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்புடைய செய்திகள்
‘எ பம்ப் த்ரூ டைம்’ (A Bump Through Time)
பிரபல சுற்றுலாப் பாதையை, நகரும் படகில் அமைந்த இருவழித் தொடர்பு நாடக அனுபவமாக இந்நிகழ்ச்சி படைக்கவுள்ளது.
பார்வையாளர்களைப் பங்கேற்பாளர்களாக மாற்றும் இந்நிகழ்ச்சி, ஆற்றின் கதைகள், மக்கள், தொழில்கள் ஆகியவற்றைச் சிறு தருணங்களின் வழியே உணரச் செய்யும்.
மே 9, 16, 23 ஆகிய தேதிகளில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.
‘டைட்ஸ் ஆஃப் டைம்ஸ்’
கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் தற்போது வரையிலான கடல்சார் வரலாற்றையும், கடல்சார் வணிக மையமாக சிங்கப்பூர் எவ்வாறு நிலைத்திருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ள ஏதுவான நிகழ்ச்சி இது.
கடந்த 1603ஆம் ஆண்டில் சிங்கப்பூர் கடற்கரையில் நடந்த சான்டா கட்டாரினா சம்பவம், நவீன அனைத்துலகக் கடல்சார் சட்டத்தில் தாக்கம் ஏற்படுத்தி முக்கியத் தருணமாக மாறியது உட்பட, உலகை மாற்றிய நிகழ்வுகளைப் பற்றியும், காலனித்துவக் காலத்திற்கு முன்பே சிங்கப்பூர் வணிகத்தில் வகித்த முக்கியப் பங்கை வெளிப்படுத்தும், கப்பல் சிதைவுகளிலிருந்து கிடைத்த அரிய கலைப்பொருள்கள் கொண்ட கண்காட்சியையும் பார்க்கலாம்.
மே 3, 10, 17, 16, 24 ஆகிய தேதிகளில் சிங்கப்பூர்க் கடல்துறைக் காட்சிக்கூடத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.
இவற்றுடன், ‘ஷிப்ட்’: நமது கடல்சார் நினைவுகள், பாஸ்கர் கலைக்கூடம் சார்பில் சங் நீல உத்தமா தொடங்கி சிங்கப்பூரின் கதைகளைப் பேசும் கதகளி நடன நிகழ்ச்சி, கடல்சார் வணிக மரபுடைமைப் படகுச் சுற்றுலா, புலாவ் உபின் வரலாறு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஏறத்தாழ மாதம் முழுவதும் நடைபெறவுள்ளன.

