புதிய பரிமாணத்தில் சிங்கப்பூர் மரபுக் கதைகள்

தமிழ் நாடகத் தொகுப்பாகப் படைத்த ‘அகம்’ நாடகக் குழுவின் ‘டேப்பெஸ்டிரி’

புதிய பரிமாணத்தில் சிங்கப்பூர் மரபுக் கதைகள்

2 mins read
9c9ace9c-1e38-41a1-aa38-a6aa5eef2401
‘ரெட்ஹில்’ கதையின் கதாபாத்திரம் பணியிடத்தில் இருக்கும் போட்டியைப் பற்றிப் பேசிய காட்சி. - படம்: தாஷாயனி சுகேந்திரன்
multi-img1 of 4
Google News Preferred Icon

சிங்கப்பூரின் மரபுக் கதையான பூமலைக் கதையை நவீன உலகின் நிதர்சனத்தோடு பிணைத்தும், ‘சங் நிலா உத்தமா’ கதையை கற்பனையான ‘கட்டுக்கதை’ வடிவிலும் மேடையேற்றியது ‘அகம்’ நாடகக் குழு.

தமிழ்மொழி விழாவையொட்டி ஏப்ரல் 17ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதிவரை அரங்கேறிய ‘அகம்’ நாடகக் குழுவின் ‘டேப்பஸ்ட்ரி’, சிங்கப்பூரின் நான்கு மரபுக் கதைகளில் இடம்பெறும் கருத்துகளை நவீன உலகிற்குப் பொருந்தும் கதைகளாய் உருமாற்றி நாடக வடிவில் படைத்தது.

‘கூசு ஐலண்ட்’ என்ற கதையைக் ‘காத்து வாங்கப் போனேன்’ என்ற தலைப்பில் பணத்தையும் பொருளையும் மட்டுமே மையமாகக்கொண்ட வாழ்க்கை முறையைச் சுட்டிக்காட்டும் விதமாக அமைத்திருந்தார் ஹரி சங்கர்.

‘சங் நிலா உத்தமா’ மரபுக் கதையைக் கட்டுக்கதை வடிவில் உருமாற்றி நகைச்சுவையாக ‘கட்டுக்கதைச் சொல்லவா’ என்ற நாடகத்தை இயற்றியிருந்தார் பிரியதர்ஷினி.

“சிங்கப்பூரில் பணியிடக் கலாசாரத்தில் சிங்கப்பூரர்களுக்கும் வெளிநாட்டினர்க்கும் இடையே எழும் ஏற்றத்தாழ்வுகளை வெளிக்கொணர்வதற்காக ‘ரெட்ஹில்’ கதையை இன்றைய சூழலுக்கு ஏற்ப அமைத்துள்ளோம்,” என்று ‘செந்நிலக் குருதி’ கதையை இயற்றிய லோகேஷ் கூறினார்.

கயல்விழியின் ‘இரு கரைகள்’ என்ற கதை, சகோதரிகளின் உறவை மையமாகக் கொண்டு ‘சிஸ்டர்ஸ் ஐலண்ட்’ என்ற பழைய கதையின் பரிமாணமாகத் திகழ்ந்தது.

சினைப்பை நீர்க்கட்டி (PCOS) போன்ற நோய்கள் குறித்துச் சமுதாயத்தில் குறுகிய கண்ணோட்டம் உள்ளது. ‘அகம்’ நாடகக் குழு அதை மையமாகக் கொண்ட ஒரு படைப்பை அரங்கேற்றிச் சமுதாயக் கோட்பாடுகளை முறியடித்தது வியக்கத்தக்கது.

‘தியேட்டர் டேப்’ என்ற அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் புது இயக்குநர்களுக்கும் நடிகர்களுக்கும் ஒரு தளத்தை உருவாக்க ‘அகம்’ நாடகக் குழு ஒரு நாடகப் படைப்பை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதையொட்டி இவ்வாண்டு நடந்த ‘டேப்பெஸ்டிரி’ ஆறாவது முறையாக உருவாக்கப்பட்ட தயாரிப்பாகும்.

அனுபவம் மிக்க இயக்குநர்களின் வழிகாட்டல்களைக் கொண்டு புதிய இளம் இயக்குநர்கள் தங்கள் படைப்புகளைச் சிறப்பாக மேடையேற்றினர்.

“வருங்காலத்தில் இளையர்களைக் கலைகளில் ஈடுபடுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு இந்நாடகத் தொகுப்பைப் படைத்தோம்,” என்றார் நிகழ்ச்சியின் தயாரிப்பு மேலாளரும் மதியுரைத் துணை இயக்குநருமான சு. கார்த்திகேயன்.

“‘அகம்’ நாடகக் குழு, அனைவரும் நாடகக் கலையைக் கற்றுக்கொள்வதற்கான ஒரு தளமாக அமைகிறது. இங்குக் கலையை கற்றுக்கொடுக்க முறையான ஆசான்கள் இருக்கின்றனர்,” என்று கூறினார், ‘கட்டுக்கதைச் சொல்லவா’ நாடகத்தில் ‘விக்கிரமன்’ என்ற திருடன் கதாபாத்திரமாக நடித்த செந்தில்குமார் ஹரீஸ்வரன்.

இவருடைய வேடிக்கையான நடிப்பு பார்ப்போரைப் புன்னகைக்க வைத்துக் கைத்தட்டல்களையும் பெற்றது.

குறிப்புச் சொற்கள்
நாடகம்சிங்கப்பூர்கலை

தொடர்புடைய செய்திகள்