குறுகிய காலத்தில் புதிய ஒன்றை உருவாக்கும் உத்வேகமே, டெல்லி மகாராஜா அக்ரசென் தொழில்நுட்ப நிறுவனத்தின் மூன்றாம் ஆண்டு மாணவரான அன்ஷ் பஜாஜ், 20, போன்ற இளையர்களை ஹேக்கத்தான் போட்டிகளில் பங்கேற்கத் தூண்டுகிறது.
2025 டிசம்பரில் நடைபெற்ற ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்’ போட்டியில் வென்ற அவர், இம்முறை ‘சிங்கப்பூர்-இந்தியா ஹேக்கத்தான்’ போட்டியில் ஆர்வத்துடன் இணைந்தார்.
நவம்பர் 15 முதல் 17 வரை சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மூன்று நாள் நிகழ்வில் சிங்கப்பூரையும் இந்தியாவையும்ச் சேர்ந்த 120 உயர்கல்வி மாணவர்கள் 20 கலப்புக் குழுக்களாகப் பிரிந்து பங்கேற்றனர்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், நிதித் தொழில்நுட்பம், நிலைத்தன்மை, சமூகப் புத்தாக்கம் ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ், 36 மணி நேரத்தில் நடைமுறைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அவர்கள் வகுத்தனர்.
நடைமுறைத் தீர்வுகளுக்கான உந்துசக்தி
சமூக நிறுவனங்களுக்கான சிங்கப்பூர் மையத்தின் ஆதரவுடன் கூடிய ‘சமூகப் புத்தாக்கம்’ பிரிவை அன்ஷ் குழுவினர் தேர்ந்தெடுத்தனர். சிங்கப்பூரிலும், இந்தியாவிலும் உள்ள குறைந்த வருமானம் கொண்ட மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில், மலாய் மொழியில் ‘நண்பன்’ எனப் பொருள்படும் ‘கவான்’ என்ற பெயரில் அவர்கள் ஒரு மின்னிலக்கத் தளத்தை உருவாக்கினர்.
இது, மூத்த குடிமக்களுக்கு நீக்குப்போக்கான வேலைவாய்ப்புகளை வழங்கி, அவர்கள் பொருளியல், சமூக ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
நவம்பர் 17ஆம் தேதி TiE சிங்கப்பூரின் 25வது ஆண்டு விழாவுடன் இணைந்து நடைபெற்ற விருது விழாவில் ‘கவான்’ குழு இப்பிரிவின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது. இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற எட்டு அணிகளுக்கு மொத்தம் $88,000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த அணிக்கு $13,750யும் இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு $8,350யும் கிடைத்தது.
இப்பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த ‘கம்போங்-லா’ அணியில் இடம்பெற்றிருந்த நேதன் யோங் 20), சக அணியினரின் தொழில்நுட்பத் திறமையை உணர்ந்து, தான் வணிகமும் விளக்கக்காட்சி பணிகளிலும் கவனம் செலுத்தியதாகக் கூறினார்.
இதேபோல், எஸ்எம்யு இரண்டாம் ஆண்டு மாணவரான முதித் குப்தா, 21, ஆங்கிலம், இந்தி மொழிகளில் சரளமாகப் பேசும் தனது திறனைப் பயன்படுத்தி இந்திய, சிங்கப்பூர் மாணவர்களிடையே ஒரு கலாசாரப் பாலமாகச் செயல்பட்டார்.
தனது பேச்சுத் திறமையால் ஒரு சிறு நாடகத்துடன் தங்கள் படைப்பை அறிமுகப்படுத்தி பார்வையாளர்களை அவர் ஈர்த்தார்.
“எனக்குத் தொழில்நுட்பம் புரியாது என்றில்லை, ஆனால், நான் சிறப்பாகச் செய்யக்கூடிய மற்றொரு பணிக்காக ஒரு படி பின்வாங்கி அணிக்காக உழைத்ததே கூட்டு முயற்சியின் அழகு,” என்று முதித் குறிப்பிட்டார்.
