தொழிற்சபைத் தலைவராக ராஜகுமார் சந்திரா தேர்வு

சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழிற்சபைத் தேர்தலில் ‘டீம் ராஜ்’ அணி அமோக வெற்றி

தொழிற்சபைத் தலைவராக ராஜகுமார் சந்திரா தேர்வு

2 mins read
8cf6ac66-90a1-4b98-8155-71246effcb7a
சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழிற்சபைத் தேர்தலில் ‘டீம் ராஜ்’ அணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தொழிற்சபைத் தலைவர் ராஜகுமார் சந்திராவுடன் ‘டீம் ராஜ்’ அணியினர். - படம்: ராஜகுமார் சந்திரா

சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழிற்சபையின் வரலாற்றிலேயே மிக அணுக்கமாகக் கவனிக்கப்பட்டதும் கடுமையான போட்டி நிறைந்ததுமான தேர்தலில், தொழிலதிபர் ராஜகுமார் சந்திரா தலைமையிலான ‘டீம் ராஜ்’ அணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, சபையின் புதிய தலைவராகத் திரு ராஜகுமார் பொறுப்பேற்கிறார்.

வெள்ளிக்கிழமை (ஜூன் 19) நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ‘டீம் ராஜ்’ அணி பேராதரவைப் பெற்றுள்ளது. சபையின் முக்கிய நான்கு பொறுப்புகளையும் 13 வாரிய இடங்களில் 10 இடங்களையும் அணி கைப்பற்றியது.

2026-2028 காலகட்டத்திற்கான சபையின் தலைவராகத் திரு ராஜகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் திரு பார்த்திபன் முருகையன், திரு ஜெகதீஷ் பிரசாத் ஜெய்ஸ்வால் இருவரும் துணைத் தலைவர்களாகவும் திரு எஸ்.வெங்கிட பத்மநாபன் கௌரவப் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

‘டீம் ராஜ்’ அணியிலிருந்து வாரிய உறுப்பினர்களாகத் திரு தினேஷ் வர்மா, திரு ஜெயக்குமார் ஜனகராஜ், திருவாட்டி ஜாய்ஸ் கிங்ஸ்லி, திருவாட்டி பூர்ணிமா காமத், திரு ஹரி ஆனந்த் பாபு, திரு சுனில் ராய், திரு எஸ்.மகேந்திரன், திரு சஞ்சய் சந்திரன் சந்துரு, திரு ஷமீன் அலி, திருவாட்டி உமா மகேஸ்வரி முத்தையன் ஆகியோர் தேர்வுபெற்றுள்ளனர்.

தொழிலதிபர் டி.மோகன் தலைமையிலான ‘ஃபார்வர்ட் லீடர்ஷிப் அலையன்ஸ்’ என்ற எதிர்த்தரப்பு அணி, எஞ்சிய மூன்று வாரிய இடங்களைக் கைப்பற்றியது. அந்த அணியிலிருந்து திரு ரஜித் மோகன், திரு ரமேஷ் குமார் ராமசாமி, திருவாட்டி வீணா சுப்பிரமணியம் ஆகியோர் வாரிய உறுப்பினர்களாகத் தேர்வாகியுள்ளனர்.

தொழிற்சபையின் 100 ஆண்டுகால வரலாற்றிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாக இது நினைவுகூரப்படும்.

தமது வெற்றிக்குப் பிறகு பேசிய திரு ராஜகுமார், “இந்தப் பேராதரவு எனக்குப் பணிவையும் அதேவேளையில் ஊக்கத்தையும் அளிக்கிறது. தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்ற ஒவ்வோர் உறுப்பினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

“புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரியத்துடன் இணைந்து, எங்கள் உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, அவர்களுக்குச் சேவையாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். கடந்த நூற்றாண்டில் தொழிற்சபையைக் கட்டியெழுப்பியவர்களின் சிறந்த பணிகளை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம்,” என்றார்.

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கும் குறுந்தொழில்களுக்கும் மேம்பட்ட ஆதரவை வழங்குதல், உறுப்பினர்களுடன் வலுவான தொடர்பை ஏற்படுத்தித் தருதல், இளையர்களின் பங்களிப்பை அதிகரித்தல், சிங்கப்பூரில் உள்ள இந்திய வர்த்தகச் சமூகத்தின் முன்னணிக் குரலாகச் சபையின் இடத்தைத் தக்கவைத்தல் உள்ளிட்டவை ‘டீம் ராஜ்’ அணியின் முன்னுரிமைகளாக உள்ளன.

குறிப்புச் சொற்கள்
இந்தியர்தேர்தல்வர்த்தகம்