முரளி பிள்ளை: ஒற்றுமைக்கான காலம் ரமலான்

முரளி பிள்ளை: ஒற்றுமைக்கான காலம் ரமலான்

3 mins read
dc2bbad2-5899-4dd0-9528-2baca64dcc47
சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் இஃப்தார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகச் சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை (நடுவில்) கலந்துகொண்டார். - படம்: தமிழ் முரசு

புனித ரமலான் மாதத்தில் சமூக நன்மைக்காகச் சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை போன்ற அமைப்புகள் ஒன்றுசேர்ந்து தொண்டூழியர்களை ஈடுபடுத்துவது பாராட்டத்தக்கது எனச் சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை நடத்திய ‘நல்லிணக்க நோன்பு துறப்பு’ நிகழ்ச்சியின்போது திரு முரளி அவ்வாறு கூறினார். மறுவாழ்வை நாடும் சிறைக்கைதிகளுக்குப் பயனளிக்கும் திட்டத்தை அப்துல் கஃபூர் பள்ளிவாசல் ஏற்று நடத்துவதையும் அவர் குறிப்பிட்டார். “இத்தகைய நிகழ்ச்சிகள் சமூகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும் ஆழமான பிணைப்பையும் தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றன. இது நம் நாட்டின் சமூகக் கட்டமைப்பை மேலும் வலுவாக்குகிறது,” என்று திரு முரளி குறிப்பிட்டார். சென்ட்ரியம் ஸ்குவேரில் உள்ள ‘டி வில்லா’ மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) மாலை இந்நிகழ்ச்சி நடைபெற்றது. சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் சமூகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும் ஆழமான பிணைப்பையும் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாகத் திரு முரளி பாராட்டினார்.

“உலக அளவில் பல நாடுகளில் இன, சமயம் சார்ந்த சவால்கள் நிலவிவரும் வேளையில், சிங்கப்பூர் ஒரு முன்மாதிரி நாடாகத் திகழ்கிறது.இது நம் நாட்டின் சமூகக் கட்டமைப்பை மேலும் வலுவாக்குகிறது,”  என்றும் அவர் குறிப்பிட்டார்.

நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் கூட்டு முயற்சி

30 ஆண்டுகளுக்குமுன் ஆறு அமைப்புகளுடன் தொடங்கி, தற்போது 18 அமைப்புகள் கொண்ட பேரவையாகச் சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை உருவெடுத்துள்ளது.

சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை ஆண்டுதோறும் முன்னெடுத்துவரும் பல்வேறு சமய நல்லிணக்க முயற்சிகளில், இந்த நல்லிணக்க இஃப்தாரும் ஒன்று என்று பேரவையின் தலைவர் அ. முஹம்மது பிலால் தெரிவித்தார்.

“சிங்கப்பூரின் சட்டங்களும் கட்டமைப்பும் நல்லிணக்கத்தை வளர்க்கும் நோக்கிலேயே அமைந்துள்ளன. நல்லிணக்கத்தை நாம் என்றென்றும் பேணிக்காக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

“இதுபோன்ற இஃப்தார் நிகழ்வில் அனைத்து இனத்தவர்களும் கலந்துகொள்வது சிங்கப்பூரின் தனிச் சிறப்பு,” என்று சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் கூறினார்.

நல்லிணக்க மேம்பாட்டு அமைப்பான ‘ஹேஷ்.பீஸ்’ நிறுவனர் நஸ்ஹத் ஃபஹிமா, “இஃப்தார் நிகழ்வில் தமிழ் மொழியில் வழங்கப்பட்ட விளக்கங்கள், பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்களிடையே இஸ்லாமியப் பண்பாடு குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்தியது,” என்றார்.

இந்திய முஸ்லிம் சமூகத்தின் அரிய கலைப்பொருள்களைக் காட்சிப்படுத்துவதற்காகப் பல ஆண்டுகளாக இந்திய முஸ்லிம் பேரவை உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றியதை இந்திய மரபுடைமை நிலையத்தின் தலைவர் ஆர். ராஜாராம் குறிப்பிட்டார்.

சிறப்பு வாய்ந்த மரபுடைமைப் பொருள்களைப் பாதுகாப்பதில் சமூக அமைப்புகளுக்கு இன்றியமையாத பங்கிருப்பதை அவர் நிகழ்ச்சியில் சுட்டினார்.

“இவற்றில், மலபார் முஸ்லிம் ஜமாஅத் பள்ளிவாசல் பெருந்தன்மையுடன் கடனாக வழங்கிய, சிங்கப்பூரின் மலபாரி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த நான்கு கலைப்பொருள்களும் அடங்கும். இவை 2023, 2024ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மலையாளி முஸ்லிம் சமூகம் குறித்த எங்களின் சிறப்புச் சித்திரக் கண்காட்சியை அலங்கரித்தன,” என்று அவர் தெரிவித்தார்.

அத்துடன், சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் வழங்கிய நாகூர் தர்காவின் புனிதக் கொடி, இந்திய மரபுடைமை நிலையத்தின் நிரந்தரக் கலைக்கூடத்தின் ஒரு பகுதியான ‘ரூட்ஸ் அண்ட் ரூட்ஸ்’ (Routes and Roots) பிரிவில் அங்கம் வகிப்பதாகவும் திரு ராஜாராம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்