தமிழகத்திற்கு அப்பால் வெளிநாடுகளில் தமிழ் வளர்ச்சி பெற்ற வரலாறுகள், மொழிப்பற்று உள்ளவர்களின் செவிகளில் தேன் தெளிக்கும்.
அந்த வகையில், சிங்கப்பூரின் இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவரும் தொழிலதிபருமான திரு அ.முகமது பிலால், சிங்கப்பூர் கண்ட தமிழ் வளர்ச்சி பற்றி இலங்கையில் உள்ள தமிழ் ஆர்வலர்களுடன் பகிர்ந்தார்.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஜனவரி 2ஆம் தேதி நடைபெற்ற ‘இலக்கியக் களம்’ நிகழ்ச்சியிலும் மறுநாள் வலம்புரி கவிதா வட்டத்தின் 118ஆவது அரங்கிலும் அவர் உரையாற்றினார்.
சிங்கப்பூர், இலங்கை இரு நாடுகளுக்கு இடையிலான வரலாற்று ரீதியிலான தமிழ் உறவுகளையும் மொழி வளர்ச்சியையும் பறைசாற்றும் தகவல் செறிவுமிக்க நிகழ்ச்சிகளாக அமைந்தன.
நிகழ்ச்சியில் திரு பிலால், சிங்கப்பூரின் தொடக்கக் காலத்தில் தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட சவால்களையும் அது தமிழை வளர்த்த விதத்தையும் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் வீடுகள், வழிபாட்டுத் தலங்கள், சமூக மன்றங்களில் கல்வியாளர்கள், செய்தியாளர்களும் அன்று அமைத்த வலுவான அடித்தளத்தின் மீதுதான் சிங்கப்பூரில் தமிழ் இன்றும் உயர கோபுரமாக நிற்கிறது.
இன்று தமிழ் இளையர்கள் தொழில்நுட்பத்தின் வாயிலாக உலகெங்கும் தமிழைப் பரப்பி அதைத் தங்களின் அடையாளமாகக் கருதுகின்றனர் என்றார் அவர்.
சிங்கப்பூர் தமிழ்ப் பத்திரிகைத் துறையின் வரலாற்றை விளக்கிய அவர், 1887ல் மகுதூம் சாகிப் தொடங்கிய சிங்கை நேசன் முதல் 1935ல் தமிழவேள் கோ.சாரங்கபாணி தொடங்கிய தமிழ் முரசு வரை பல இதழ்களைத் திரு பிலால் பட்டியலிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் அன்று தமிழ் வளர்த்தோர் குறித்த தகவல்களை திரட்டியபோது, திருக்குறளை மலாய் மொழியில் மொழிபெயர்த்த கவிஞர் புகாரி, திருக்குறள் ஆசிரியர் பாவாடை சாமி , தமிழவேள் கோ.சா.வோடு தன்னலமற்று பயணித்த பக்ருத்தீன் சாஹிப், சமூகத் தலைவர் அ.ந.மைதீன் ஆகியோர் பற்றிய அரிய தகவல்களை முன்னாள் வானொலி, தொலைக்காட்சி மூத்த ஒலிபரப்புச் செய்தியாளர், படைப்பாளர் செ.ப.பன்னீர்செல்வம் பகிர்ந்து உதவியதாக அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் தமிழ் முரசு 90ஆவது ஆண்டைக் கொண்டாடும் வேளையில் இலங்கையின் வீரகேசரி இதழும் அதே பழம்பெருமை வாய்ந்தது.
உரையில் இலங்கையுடனான தம் குடும்பப் பின்னணியையும் பகிர்ந்துகொண்ட திரு பிலால், தம் கொள்ளுத்தாத்தா இலங்கையின் பதுளையில் ‘கே.எம்.எஸ்’ என்ற மளிகைக் கடையை நடத்தியவர் என்பதைக் குறிப்பிட்டார்.
மேலும், சிங்கப்பூர் அரசாங்கத்தின் இருமொழிக் கொள்கையினால் தமிழ் பெற்றுள்ள முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசிய அவர், சிங்கப்பூரில் தமிழ் செழித்து வளரவும் செறிவோடு நிலைத்திருக்கவும் இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தவும் வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி கற்றல், வளர்ச்சிக்குழு மற்றும் தேசிய கலைகள் மன்றத்தின் தங்கமுனை விருது மூலம் அரசாங்கம் மேற்கொண்டு வரும் சவாலான தமிழ்ப் பணிகளைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் தொடக்கக் காலத்திலிருந்து எம்.கே.ஏ.ஜப்பார் முதல் இன்றைய துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விக்ரம் நாயர், டாக்டர் ஹமீது ரசாக் ஆகியோர் தமிழில் பேசுவது குறித்தும் திரு பிலால் தமது உரையில் பகிர்ந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் கவிஞர் எம்.எஸ்.அப்துல் லத்தீஃபின் ‘சிங்கப்பூரின் சீர்மிகு சிங்கப்பூர் கவிதாசாரம்’ என்ற கவிதைப் படைப்பு வாசிக்கப்பட்டது. அத்துடன், பழம்பெரும் எழுத்தாளர் மானா மக்கீனின் அறிமுக உரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது
பிற நாகரிகங்கள் தங்களையே உயர்த்திப் பேசிய காலகட்டத்தில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என கனியன் பூங்குன்றனார் கூறியதையும் திரு பிலால் சுட்டினார்.
“இந்த ஒற்றுமையைப் போற்றுகிறது சிங்கப்பூர். பிற நாடுகளில் தமிழர்கள் இருக்கிறார்கள், ஆனால், சிங்கப்பூரில் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதைச் சிங்கப்பூருக்கு வந்திருந்த அமரர் அண்ணாதுரை கூறியுள்ளார்,” என்றும் அவர் கூறினார்.
சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் 18 அமைப்புகளும் தமிழ் சார்ந்த செயல்பாடுகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்த திரு பிலால், கொழும்புத் தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகள் வருங்காலச் சமுதாயத்திற்குத் தமிழைக் கொண்டு சேர்க்கும் பணியைத் தொடரவேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தார்.

