100 மாணவர்களுக்குக் கல்வி உதவி நிதி வழங்கிய சிங்கப்பூர்த் தமிழர் இயக்கம்

100 மாணவர்களுக்குக் கல்வி உதவி நிதி வழங்கிய சிங்கப்பூர்த் தமிழர் இயக்கம்

படம்: சிங்கப்பூர்த் தமிழர் இயக்கம்

28 Nov 2026 - 5:45 am

3 mins read

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகக் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சிங்கப்பூர்த் தமிழர் இயக்கம், தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பயிலும் பல இனங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு இவ்வாண்டு நிதியுதவி வழங்கியது.

கடந்த ஆண்டு 60 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கிய இயக்கம், இம்முறை பயனாளர்களின் எண்ணிக்கையை 100ஆக உயர்த்தியுள்ளது.

தமிழ் முரசு ஆசிரியர் த.ராஜசேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உதவித்தொகையை வழங்கினார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பதிவாளரும் இந்திய மரபுடைமை நிலையத்தின் தலைவருமான ஆர்.ராஜாராம், தமிழர் பேரவைத் தலைவர் வெ.பாண்டியன் உள்ளிட்ட சமூகத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி, பல்கலைக்கழகம் எனப் பல்வேறு கல்வி நிலைகளில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்விச் செலவுச் சுமையைக் குறைத்து, அவர்கள் தொடர்ந்து படிப்பதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்துவதே இம்முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

வரவேற்புரையாற்றிய இயக்கத்தின் தலைவர் ரெ.செல்வராசு, 1954ல் தொடங்கப்பட்ட இயக்கத்தின் 72 ஆண்டுகாலப் பயணத்தை நினைவுகூர்ந்தார்.

மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் கல்வி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய அவர், கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் விரும்பிய இலக்குகளை அடைய முடியும் என்றார்.

வரும் ஆண்டுகளில் மேலும் அதிகமான மாணவர்களுக்கு உதவ இயக்கம் முயற்சி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

சாதி, சமய, கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையை முன்னிறுத்தும் இயக்கத்தின் முயற்சியைச் சிறப்புரையாற்றிய திரு ராஜசேகர் பாராட்டினார்.

ஒரு சமூகம் அதன் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் உதவும்போதுதான் வலிமை பெறும் என்று குறிப்பிட்ட அவர், தேவைப்படும்போது சமூக அமைப்புகளிடம் உதவி கேட்க மாணவர்கள் தயங்கக்கூடாது என்றார்.

“உதவி பெறுவது ஒருபோதும் பலவீனமன்று. மாறாக, அது உங்கள் எதிர்காலத்தைச் செதுக்குவதற்கான ஒரு பலமான படிக்கட்டு,” என்று அவர் கூறினார்.

கல்வி அழியாத செல்வம் எனக் குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் நல்ல நிலையை அடையும் மாணவர்கள் தங்களுக்குக் கிடைத்த உதவியைப் பிறருக்கும் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மாணவர்களின் முயற்சிகளையும் சாதனைகளையும் வெளிக்கொணர ஊடகங்கள் துணைநிற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இயக்கம் தனது கூடுதல் வருவாயை மாணவர்களின் கல்விக்காக ஒதுக்குவது பாராட்டுக்குரியது என்ற திரு ராஜாராம், கல்வி உதவித்தொகை என்பது இளையர்கள் மீதான முதலீடு என்றும் பணப் பற்றாக்குறையால் எந்த மாணவரும் கல்வியில் பின்தங்கிவிடக்கூடாது என்றும் வலியுறுத்தினார். சமூக அமைப்புகளும் ஆலயங்களும் கல்விக்காக முன்வந்து நிதி வழங்குவது ஆரோக்கியமான மாற்றம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குடும்பத்தின் தனிநபர் மாத வருமானம் $1,600க்குக் குறைவாக உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து உதவித்தொகை வழங்கப்படுவதாக இயக்கத்தின் பொதுச் செயலாளர் ந.நாராயணசாமி தெரிவித்தார்.

இனம் பாராமல் கல்வி வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இயக்கத்தின் நோக்கம் என்ற அவர், அடுத்த ஆண்டு கூடுதல் மாணவர்களுக்கு உதவுவதுடன் கல்வியில் சிறந்து விளங்குவோருக்குச் சிறப்பு ஊக்கத்தொகையும் வழங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

உதவித்தொகை பெற்ற ஜூரோங் உயர்நிலைப்பள்ளி மாணவர் கோபிநாத் லிங்கேஷ், 16, புத்தகங்கள் வாங்கவும் கல்விச் செலவுகளைச் சமாளிக்கவும் நிதி உதவும் என்றார்.

கல்வி உதவித்தொகை பெற்ற ஜூரோங் உயர்நிலைப் பள்ளி மாணவர் கோபிநாத் லிங்கேஷ், 16.
கல்வி உதவித்தொகை பெற்ற ஜூரோங் உயர்நிலைப் பள்ளி மாணவர் கோபிநாத் லிங்கேஷ், 16. - படம்: யோகிதா அன்புச்செழியன்

எதிர்காலத்தில் ஆசிரியராகவோ செய்தியாளராகவோ பணியாற்ற விரும்பும் அவர், பின்னர் தாமும் பிறருக்கு உதவ வேண்டும் என்ற உந்துதலை இந்த உதவி அளிப்பதாகக் கூறினார்.

ஆங்கிலோ சீனத் தன்னாட்சிப்பள்ளியில் பயிலும் உதயகுமார் குகன், 14, எதிர்காலத்தில் மருத்துவராக விரும்புவதாகத் தெரிவித்தார்.

கல்வி உதவித்தொகை பெற்ற ஆங்கிலோ சீனத் தன்னாட்சிப்பள்ளியில் பயிலும் உதயகுமார் குகன், 14.
கல்வி உதவித்தொகை பெற்ற ஆங்கிலோ சீனத் தன்னாட்சிப்பள்ளியில் பயிலும் உதயகுமார் குகன், 14. - படம்: யோகிதா அன்புச்செழியன்

உதவித்தொகை, பள்ளிச் செலவுகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்ற அவர், சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கும் இதுபோன்ற உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார்.

குறிப்புச் சொற்கள்