சிங்கப்பூர்ப் பசுமைத் திட்டம் 2030: சுற்றுப்புற ஆர்வலர்களுக்கு அங்கீகாரம்

சிங்கப்பூர்ப் பசுமைத் திட்டம் 2030: சுற்றுப்புற ஆர்வலர்களுக்கு அங்கீகாரம்

3 mins read
c3a27e65-158a-4bef-9682-9bc5f2d1a210
2019ஆம் ஆண்டு ‘ஈகோ பிரெண்ட்’ விருது வென்ற திருவாட்டி லலிதா நாயர். - படம்: திருவாட்டி லலிதா நாயர்.

உயர்ந்து வரும் உலக வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும், மாறிவரும் பருவநிலையை எதிர்கொள்ளவும் உலக நாடுகள் தீவிர முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வரிசையில், இயற்கையோடு இயைந்த நிலைத்தன்மை கொண்டுள்ள எதிர்காலத்தை உருவாக்குவதற்காக, ‘சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030’ என்ற இலக்கை நோக்கிச் சிங்கப்பூர் பயணம் செய்கிறது.

இத்திட்டம், நமது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஐந்து தூண்களைக் கொண்டுள்ளது என்று பசுமைத்திட்டத்தை ஒட்டிய இணையத்தளம் குறிப்பிட்டது.

இயற்கைமயமான நகரம், ஆற்றல் மறு உருவாக்கம், நீடித்த நிலைத்தன்மை கொண்டுள்ள வாழ்க்கை முறை, பசுமைப் பொருளியல், மீள்திறன்மிக்க எதிர்காலம் ஆகியவை அந்தத் தூண்கள்.

சிங்கப்பூர்ப் பசுமைத் திட்டம் 2030 என்பது உலகளாவிய நீடித்த நிலைத்தன்மை இலக்குகளுக்குத் தகுந்தவாறு அமைக்கப்பட்டுள்ளது.

2050க்குள் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் கழிவு வெளியீடுகளை முற்றிலும் நீக்கும் இலக்கை நோக்கித் தீவிரமாகச் செயல்படும் சில நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என எரிசக்தித் தணிக்கையாளர் நாராயணஸ்வாமி வெங்கட்ராமன், 65, தெரிவித்தார்.

சிங்கப்பூர் தனது இலக்கை நோக்கி, அன்றாட உள்கட்டமைப்புகளில் செயற்கை நுண்ணறிவு, ‘ஸ்மார்ட்’ உணர்கருவிகளைப் புகுத்துவது நகர்ப்புற மின்சார விரயத்தைக் கணிசமாகக் குறைக்கிறது என்று 43 ஆண்டுகள் எரிசக்தித் துறையில் அனுபவம் வாய்ந்த முனைவர் நாராயணஸ்வாமி கூறினார்.

இந்தத் திட்டத்தின் இலக்கை எட்டச் சமூகத்தில் பல தனிநபர்களும் கைகொடுக்கிறார்கள்.

சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைப் பயணத்தில் தங்களின் சொந்த முயற்சியால் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய தனிநபர்களை அங்கீகரிக்கச் சிங்கப்பூரின் தேசிய சுற்றுப்புற அமைப்பு ஆண்டுதோறும் ‘இக்கோ பிரெண்ட்’ விருதுகளை வழங்குகிறது.

இந்த விருதை 2019ஆம் ஆண்டு வென்ற திருவாட்டி லலிதா நாயர், சமூகத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை உருவாக்க 15 ஆண்டுகளாகப் பல சுற்றுச்சூழல் பட்டறைகளையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.

“சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது அரசாங்கத்தின் அல்லது பெரிய நிறுவனங்களின் பொறுப்பு மட்டுமன்று. இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படைக் கடமை. நமக்குத் தேவை இல்லாதவற்றை மறுக்க நாம்தான் பழக வேண்டும். ஒரு பொருளை வாங்குவதற்கு முன், அது எதனால் செய்யப்பட்டது, பயன்பாட்டிற்குப் பின் எங்கே போகும், அதை மறுசுழற்சி செய்ய முடியுமா என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்,” என்றார் திருவாட்டி லலிதா.

இயற்கை முறையில் முழுவதுமாக உணவை உண்ண வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் விலை உயர்வு தடையாக இருக்கலாம். இதற்காகத்தான் ‘குரோலா’ (GrowLah) என்ற எளிய அறுவடைத் திட்டத்தைத் தொடங்கியுள்ளதாகத் திருவாட்டி லலிதா கூறினார்.

2019ஆம் ஆண்டு ‘ஈகோ பிரெண்ட்’ விருது வென்ற திருவாட்டி லலிதா நாயர்.
2019ஆம் ஆண்டு ‘ஈகோ பிரெண்ட்’ விருது வென்ற திருவாட்டி லலிதா நாயர். - படம் : லலிதா நாயர்.

எளிய அறுவடைத் திட்டத்தைப் போல் மரங்களை நடுவம், கட்டடங்களின் உள்கட்டமைப்புகளில் பசுமையை இணைப்பதும் சிங்கப்பூரில் அதிக அளவில் காணப்படுகிறது.

“சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030ன் கீழ், ஒரு மில்லியன் மரங்கள் நடும் திட்டத்தில் நாம் சரியான பாதையில் பயணம் செய்கிறோம். ஆனால், மறுசுழற்சி விகிதத்தை அதிகரிப்பதில் நாம் கூடுதலான முக்கியத்துவம் கொடுத்துச் செயல்பட வேண்டும்,” என்றார் சுற்றுச்சூழல் ஆர்வலர் கவிக் குமார், 38.

சுற்றுச்சூழல் ஆர்வலர் கவிக் குமார், 38.
சுற்றுச்சூழல் ஆர்வலர் கவிக் குமார், 38. - படம்: கவிக் குமார்.

இன்றைய தினமான உலக சுற்றுச்சூழல் தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்த ஒரு நாளோடு நின்றுவிடாமல், ஆண்டின் 365 நாள்களும் அரசாங்கத்துடன் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க நிறுவனங்களும் பொதுமக்களும் தங்களின் அன்றாட வாழ்வில் நிலையான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று திரு கவிக் குமார் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்