‘கண்முன்னே மறைந்திருப்பவை’ (Hidden In Plain Sight) எனும் கருப்பொருளில் நடைபெறும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2026, குற்றப் புனைவு எழுத்தாளர்கள், மருத்துவம், ஊடகவியலுடன் சமூகத்தில் பேசப்படாமல் மறைக்கப்பட்ட கதைகளையும் ஆராய்கிறது.
அஸ்வனியின் நாடகம்
இருமொழி நாடகாசிரியரான அஸ்வனி அஸ்வத், பெண்களின் உடல்நலம், மாதவிடாய் குறித்த சமூகத் தயக்கங்களைப் பற்றியும் பேசும் ‘ஸ்ட்ராபெரி கேர்ள்ஸ்’ நாடகத்தை விழாவில் மேடையேற்றினார்.
பேசப்படாமல் மறைந்திருக்கும் விஷயங்களை விவாதிக்க நாடக வாசிப்புகள் மற்றும் குறும்படத்தைப் பயன்படுத்திய ‘முகத்தைக் காத்தல்: பண்பாடு, சமூகம், பேசப்படாதவை’ எனும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இது இடம்பெற்றது. மகளின் பூப்புனித நீராட்டு விழா குறித்து மூன்று தலைமுறைத் தமிழ்ப் பெண்களிடையே நிலவும் மாறுபட்ட கருத்துகளை அந்நாடகம் பேசியது. தமிழ்ப் பண்பாட்டு மரபுகளைப் புரிந்துகொள்ளும் அதேவேளையில், காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை ஏற்க வேண்டியதன் அவசியத்தையும் இது வலியுறுத்தியது.
சுவரோவிய நடைப்பயணம்
எழுத்தாளர்களான ஹேமலதாவும், பி. கங்காவும், லிட்டில் இந்தியாவின் சந்துகளில் மறைந்திருக்கும் ‘கேட்டில்லேண்ட் 2’ (Cattleland 2) உள்ளிட்ட ஏழு சுவரோவியங்களைச் சுற்றிக் காட்டும் நடைப்பயணத்தை நடத்தினர்.
இந்திய மரபுடைமை நிலையத்தில் நிறைவடைந்த அந்த நடைப்பயணத்தில், தமிழ் எழுத்தாளர்கள் உமா கதிர், கே. சுப்பிரமணியம் ஆகியோர் புலம்பெயர் தொழிலாளர்கள், சாமானியர்களின் மறைக்கப்பட்ட கதைகள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொண்டனர்.
“பங்கேற்பாளர்களுக்கு இது ஒரு கண்திறப்பாக அமையலாம். அடுத்தமுறை அவர்கள் பல இடங்களுக்குச் செல்லும்போது, சுவரோவியங்களைப் பார்த்து அவற்றின் பின்னால் உள்ள கதையைப் பற்றிச் சிந்திக்கலாம்,” என்று திருவாட்டி கங்கா கூறினார்.
குடும்ப உண்மைகள்
தமது வாழ்க்கை அனுபவங்களையும் புதுமையான ஒரு தமிழ்ப் பெண்ணாக வாழ்வதன் அர்த்தத்தையும் பேசும் ‘டி/ஓ’ எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார் 23 வயது யாஷ்மிதா ஆனந்தன்.
நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற ‘என் தாய் அறிந்தவை: குடும்ப நினைவு, மௌனம், கவிதை ஆவணம்’ எனும் கலந்துரையாடலிலும் கவிஞர் யாஷ்மிதா உரையாற்றினார்.
“மற்றவர்களிடையே உள்ள வேறுபாடுகளை மதிக்கும் நம் திறனில், நம் தாயுடனான உறவு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நான் நினைக்கிறேன். ஒரு மகளாக, ஒரு பெண்ணாக, உங்கள் தாயுடனான உறவே இவை அனைத்தையும் பெரிதும் சாத்தியமாக்கி வடிவமைக்கும் முதல் விஷயமாகும்,” என்றார் அவர்.
செய்தி: எஸக்கியேல் எல் எஸ் சென்
தமிழாக்கம்: மீனா அண்ணாமலை
