இந்தியாவின் திருப்பதி நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற அன்னமாச்சார்யா திருவிழாவில் முதன்முறையாகச் சிங்கப்பூரைச் சேர்ந்த இசைக் கலைஞர் குழு பங்கேற்றுள்ளது.
இசைக் கலைஞரும் இசை ஆசிரியையுமான திருவாட்டி பாக்யாமூர்த்தியும் சிங்கப்பூரைச் சேர்ந்த அவரின் 16 இசைக்குழு மாணவர்களும் விழாவில் பங்கெடுத்தனர்.
15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாடலாசிரியர் அன்னமாச்சார்யாவின் புகழைப் போற்றும் வகையில் ஒரு மாதகால நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அதில் அனுபவமிக்க இசைக்கலைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு, நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு வழங்கப்படும். அதில் முதன்முறையாக ஒரு தனி நிகழ்ச்சியை நடத்துவதற்கான வாய்ப்பு சிங்கப்பூர்க் குழுவுக்குக் கிடைத்தது.
மார்ச் 14, 15ஆம் தேதிகளில் நடைபெற்ற ‘கோஷ்டி கானம்’ எனப்படும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன் 16, 17ஆம் தேதிகளில் அன்னமாச்சார்யாவின் பிறப்பிடமான தாளப்பாக்கம் எனும் இடத்தில் தனி நிகழ்ச்சியையும் இக்குழுவினர் நடத்தினர்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த இசைக்கலைஞர் ராதிகா நரசிம்மன் நடாதூர், “இது நல்ல வாய்ப்பு. கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு அன்னமாச்சார்யா திருவிழா முக்கியமானது. அதில் பங்கேற்றதும் தொடர்ந்து தனி நிகழ்ச்சி நடத்தியதும் பெருமை,” என்றார் அவர்.
இதற்குத் தனி விண்ணப்ப முறை இருப்பதாகவும் இசைக் கலைஞர்களின் அனுபவம், குழுவின் அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்து வாய்ப்பளிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
பொதுவாக வெளிநாட்டைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்பது குறைவு என்று கூறிய ராதிகா, தங்களுக்கு அது அமைந்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
குழுவில் பங்கேற்றோரில் ஆக இளையவருக்கு வயது 17 என்றும் ஆக மூத்தவருக்கு வயது 75 என்றும் அவர் குறிப்பிட்டார்.

