கொவிட்-19 கிருமித்தொற்று பரவிய காலத்தில், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் சிங்கப்பூர்த் தொழிலதிபர் புஷ் சர்மா, மஞ்சளை மாத்திரைகளாகவும் பொடியாகவும் உட்கொண்டார்.
உடலுக்கு நல்லது என்றாலும் அது மருந்து சாப்பிடுவது போன்ற உணர்வைத் திரு.சர்மாவுக்குக் கொடுத்தது.
மேலும் முகக்கவசம் அணிந்ததால் திரு.சர்மாவும் அவரது குடும்பத்தினரும் சுவாச துர்நாற்றம் ஏற்படாமல் இருக்கப் புதினா மிட்டாய்களை அதிகமாக உட்கொண்டனர்.
வீட்டில் குவிந்திருந்த மிட்டாய் அட்டைகளைப் பார்த்தபோது, பலவற்றில் சர்க்கரை அல்லது அவருக்குப் பிடிக்காத பொருள்கள் இருப்பதை அவர் கவனித்தார்.
இது அவருக்கு வித்தியாசமான சிந்தனையைத் தூண்டியது. ‘மஞ்சளையும் புதினா மிட்டாயையும் ஏன் ஒன்றாக இணைக்கக் கூடாது?’ என்பதே அது.
இந்த யோசனைதான் இறுதியில் ‘ஹால்டி’ உருவாவதற்குக் காரணமானது.
மஞ்சளைக் குறிக்கும் ‘ஹால்டி’ என்ற இந்தி வார்த்தையையும் ஆரோக்கியத்தைக் குறிக்கும் ‘ஹெல்தி’ என்ற ஆங்கில வார்த்தையையும் இணைத்து இந்தப் பெயர் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இந்தியாவில் உள்ள ஆய்வு, மேம்பாட்டுக் குழுவொன்றுடன் இணைந்து பணியாற்றிய அவர், அதன்பிறகு சீனாவில் இந்த மிட்டாய்களை உற்பத்தி செய்தார்.
2023ஆம் ஆண்டு ஹால்டியை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, இதன் தயாரிப்பு முறை, பயனர் சோதனைகள், பொட்டலமிடல் ஆகியவற்றிற்காக அவர் இரண்டு ஆண்டுகள் உழைத்தார்.
ஹால்டி, மருத்துவ துணைப் பொருளாக மட்டும் அல்லாமல், சுவாசத்திற்குப் புத்துணர்வளிக்கும் மிட்டாயாகவே இருப்பதை உறுதி செய்வதே சவாலாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
அதேபோல் மிட்டாய் உடல்நலனை மேம்படுத்தும் என்று கூறுவதைத் திரு சர்மா வேண்டுமென்றே தவிர்த்தார்.
“உற்பத்தி அல்லது ஒப்புதல் செயல்முறையில் நான் எந்தக் குறுக்கு வழியையும் பின்பற்ற விரும்பவில்லை; தரம் அல்லது பொருள்களில் எந்தச் சமரசமும் செய்ய விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரில் சந்தை வாய்ப்புகளும் சுவாரசியமாக அமைந்தன. ‘சுவிங்கம்’ மெல்லுவதற்குத் தடை உள்ளதால், சுவாசத்திற்குப் புத்துணர்வளிக்க விரும்பும் மக்களுக்குப் புதினா மிட்டாய்கள் இயற்கையான மாற்றாக அமைந்தன.
ஹால்டி தற்போது எலுமிச்சை, பெர்ரி, பெப்பர்மின்ட், ஆப்பிள் லவங்கப்பட்டை ஆகிய நான்கு சுவைகளில் வருகிறது. $5 மதிப்புள்ள ஒவ்வொரு பெட்டியிலும் கிட்டத்தட்ட 40 மிட்டாய்கள் உள்ளன.
2023ஆம் ஆண்டு சிங்கப்பூர்க் கண்காட்சியில் ஹால்டி மிட்டாய் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மூன்று நாள் நடந்த அந்த நிகழ்வில் அது முழுமையாக விற்றுத் தீர்ந்தது.
ஹால்டி மிட்டாய்க்காகச் செய்த முதலீட்டையும் திரும்ப எடுத்த திரு.சர்மாவின் தொழில் இப்போது லாபத்தை நோக்கி நகர்ந்துள்ளது. உலகளாவிய பொருளியல் நிச்சயமற்ற நிலைக்கு இடையில் இயங்கும் புதிய நிறுவனத்திற்கு இது மிகவும் முக்கியமானது என்று அவர் கருதுகிறார்.
அனைத்துலக அளவில் விரிவுபடுத்துவதுதான் அடுத்த இலக்கு என்றும் திரு.சர்மா கூறினார்.
