சிங்கப்பூரரான ரேமன் பரசுரமேஷ், 59, ‘ஏபட் உலக மேஜர்ஸ்’ நெடுந்தொலைவோட்டத்தில் புகழ்பெற்ற ஆறு நட்சத்திரப் பதக்கத்தைப் பெற்றுள்ளார். இந்த ஆறு நட்சத்திரப் பதக்கத்தைப் பெற்ற முதல் சிங்கப்பூர் இந்தியர் திரு ரேமன் ஆவார்.
உலக மேஜர்ஸ் நெடுந்தொலைவோட்டம் என்பது ஓட்டப்பந்தய வீரர்களுக்காகத் தொடங்கப்பட்ட ஓர் உலகளாவிய நிகழ்வாகும்.
இந்த ஆறு நட்சத்திரப் பதக்கத்தைப் பெற, ஓட்டப்பந்தய வீரர் ஒருவர் உலகப் புகழ்பெற்ற ஆறு நெடுந்தொலைவோட்டப் பந்தயங்கள் அனைத்தையும் ஓடி முடிக்க வேண்டும். ஒவ்வொரு நெடுந்தொலைவோட்டத்தையும் முடிக்க, குறிப்பிட்ட நேரத்துக்குள் 42 கிலோமீட்டர் தூரத்தை ஓடிக் கடக்க வேண்டும்.
2018ஆம் ஆண்டு பெர்லினில் தொடங்கி, 2019ல் லண்டன், சிகாகோ, 2023ல் தோக்கியோ, நியூயார்க், இவ்வாண்டு போஸ்டன், சிட்னிவரை ஏழு உலக மேஜர்ஸ் நெடுந்தொலைவோட்டப் பந்தயங்களை முடித்துள்ளார் திரு ரேமன்.
“உலகளாவிய குலுக்கல் முறையில் ஓட்டப்பந்தய வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதால் இந்த நெடுந்தொலைவோட்டத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்பைப் பெறுவது மிகவும் கடினம். 42 கிலோமீட்டர் ஓடவேண்டிய நெடுந்தொலைவோட்டப் போட்டிக்காகத் தயாராவது எளிதான செயல் அல்ல.
“ஐந்து மாதங்களுக்கு முன்பே பயிற்சியைத் தொடங்க வேண்டும். இலக்கை அடைய முறையான உணவுப் பழக்கமும், புகை, மதுப்பழக்கத்தைத் தவிர்க்கும் சுயக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் மிகவும் அவசியம்,” என்று திரு ரேமன் பகிர்ந்துகொண்டார்.
“தனித்துப் பயிற்சி செய்வதைவிட, நண்பர்களுடன் இணைந்துப் பயிற்சி செய்வது சிறப்பு. கடினமான நாள்களிலும், சோர்வடையும் நேரங்களிலும் ஒருவருக்கொருவர் ஊக்குவிக்கலாம். வார நாள்களில் மாலையிலும், வார இறுதி நாள்களில் அதிகாலை நான்கு மணிக்கும் எழுந்துப் பயிற்சி செய்வோம்,” என்றார் திரு ரேமன் பரசுரமேஷ்.
2024ஆம் ஆண்டு தமது மனைவியை இழந்தபோதும், தமது நண்பர்கள், குடும்பத்தினரின் ஆதரவால் இந்தச் சாதனையைப் புரிய முடிந்ததாகத் திரு ரேமன் குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு ‘தாறுமாறு ரன்னர்ஸ்’ என்ற உள்ளூர்க் குழுவைச் சேர்ந்த நண்பர்களுடன், கேப்டவுனில் அவர் தமது எட்டாவது உலக மேஜர்ஸ் நெடுந்தொலைவோட்டப் பந்தயத்தில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளார்.
