அனைத்துலக ஷேக்ஸ்பியர் விழாவில் தடம் பதித்த சிங்கப்பூரர்

அனைத்துலக ஷேக்ஸ்பியர் விழாவில் தடம் பதித்த சிங்கப்பூரர்

2 mins read
f17210e0-b5cc-428f-a562-74ddfe92296f
முதலாம் நாள் நாடகத்தின் முடிவில் பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டிய மகிழ்ச்சியில் ‘ஒத்தெல்லோ’ நாடகக் குழுவினர். - படம்: சுரேந்திரன் ஆனந்தன்
நாடகம் மேடையேறுவதற்கு முன்பு தம் குழுவினரோடு திரு சுரேந்திரன்.
நாடகம் மேடையேறுவதற்கு முன்பு தம் குழுவினரோடு திரு சுரேந்திரன். - படம்: சுரேந்திரன் ஆனந்தன்

உலகப் புகழ்பெற்ற ருமேனியாவின் கிராயோவா அனைத்துலக ஷேக்ஸ்பியர் விழா 2026இல் பங்கேற்கும் சிறப்பைப் பெற்றார் உள்ளூர் நாடகக் கலைஞர் சுரேந்திரன் ஆனந்தன், 35.

அண்மையில் சிங்கப்பூரின் கலாசாரங்களுக்கு இடையிலான நாடகப் பள்ளியில் பட்டயக் கல்வியை முடித்துப் பட்டம் பெற்ற திரு சுரேந்திரன், இந்த அனைத்துலக அரங்கில் தடம் பதித்துள்ளார்.

மே 24, 25 ஆகிய தேதிகளில் ‘ஒத்தெல்லோ’ என்ற மூன்று மணி நேர நாடகத்தைச் திரு சுரேந்திரனும் அவரது குழுவும் மேடையேற்றினர். இதில் பெண் கதாபாத்திரமான ‘டெஸ்டிமோனா’ (Desdemona) பாத்திரத்தை ஏற்று நடித்தார் திரு சுரேந்திரன்.

நாடகத்தின் முதல் நாளன்று, பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டி நாடகக் குழுவினருக்குத் தங்களின் பெரும்பாராட்டைத் தெரிவித்தனர்.

திரு சுரேந்திரனின் இறுதியாண்டுப் பட்டமளிப்புத் திட்டமாக, பிரபல இயக்குநர் டான் ஷூ விங் இயக்கத்தில் வில்லியம் ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற ‘ஒத்தெல்லோ’ நாடகம் அரங்கேற்றப்பட்டது.

பட்டப்படிப்பிற்குப் பிறகு அதே இயக்குநரிடமிருந்து வந்த மின்னஞ்சலால் திரு சுரேந்திரன் ருமேனியாவில் கிடைத்த இந்த நல்வாய்ப்பை ஏற்றார்.

மே 21 முதல் மே 31 வரை ருமேனியாவில் நடைபெற்ற இவ்விழாவில் உலகெங்கிலும் இருந்து 200க்கும் மேற்பட்ட உலகத்தரம் வாய்ந்த நாடகத் தயாரிப்புகள் மேடையேற்றப்பட்டன.

“பிரம்மாண்டமான மேடையில் நடிக்க தொடக்கத்தில் சற்று அச்சமாக இருந்தாலும், சிங்கப்பூர் நாடகச் சூழலைச் சிறந்த முறையில் வெளிப்படுத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு என் 200 விழுக்காட்டு உழைப்பைச் செலுத்தினேன்,” என்று தமிழ் முரசிடம் கூறினார் திரு சுரேந்திரன்.

ஹாங்காங்கில் பயிற்சியில் ஈடுபட்ட திரு சுரேந்திரன்.
ஹாங்காங்கில் பயிற்சியில் ஈடுபட்ட திரு சுரேந்திரன். - படம்: சுரேந்திரன் ஆனந்தன்

இரண்டரை மாதக் கடும்பயிற்சி, ஹாங்காங்கில் இரு வாரத் தீவிர ஒத்திகைக்குப் பிறகு, குழுவினர் ருமேனியா சென்றடைந்து அங்கு நான்கு நாள்கள் ஒத்திகை பார்த்தனர்.

ருமேனியாவின் கலை அணுகுமுறையும் பண்பாடும் திரு சுரேந்திரனுக்குப் புதிய அனுபவமாக இருந்தது.

“அங்கு மனித உடலையே ஒரு முக்கியக் கலைக் கருவியாகப் பயன்படுத்துகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, அங்குள்ள மக்கள் நாடகக் கலையை மிகவும் மதித்துப் பாராட்டுகின்றனர். அந்தப் பாராட்டுகளை நேரில் பெற்றது நெகிழ்ச்சியான தருணம்,” என்றார் அவர்.

சிங்கப்பூர்க் கலைஞர்களுக்கு இத்தகைய அனைத்துலகத் தளங்கள் மிகவும் அவசியம் என்று கருதுகிறார் கலாசாரங்களுக்கு இடையிலான நாடகப் பள்ளியின் இயக்குநர் திருநலன் சசிதரன், 68.

“எங்கள் நாடகப் பள்ளியிலிருந்து பட்டம் பெற்ற மாணவராகத் திரு சுரேந்திரன் இந்நிலையத்திற்குப் பெருமை தேடித் தந்துள்ளார்,” என்றார் அவர்.

வெளிநாடுகளில் அங்கீகாரம் பெறும்வரை உள்ளூரில் சிங்கப்பூர்க் கலைஞர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பதால், இப்படிப்பட்ட மேடைகள் அவர்களுக்கு மிகவும் முக்கியம் என்றும் அவர் கருதுகிறார்.

குறிப்புச் சொற்கள்