சிங்கப்பூரில், ஒற்றுமையான தமிழ்ச் சமூகம் இருப்பதாகவும் இங்குள்ள அனைவருக்கும் கலைகளில் ஆர்வம் இருப்பதைப் பார்ப்பதாகவும் கூறியுள்ளார் ராதே ஜக்கி.
நடனக் கலைஞரான அவர், பரதநாட்டியம், இசை ஆகிய நிகழ்ச்சிகளின்மீது சிங்கப்பூர் மக்களுக்கு ஆர்வம் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். தாம் கலாஷேத்திராவில் நடனம் பயின்ற காலத்திலிருந்தே சிங்கப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவதை அறிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியாவின் பிரபல நடனக் கலைஞரும் கோவையில் உள்ள ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவின் மகளுமான ராதே ஜக்கியின் நடனக்குழு, சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் (‘சிஃபாஸ்’) கலைத் திருவிழாவில் நடன அங்கம் ஒன்றைப் படைக்கவுள்ளது.
மே மாதம் 2, 3ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியின் பயிற்சிகளுக்காகச் சிங்கப்பூருக்கு வருகை தந்திருந்த ராதே ஜக்கி தமிழ் முரசுக்குச் சிறப்பு நேர்காணல் அளித்தார்.
“சிஃபாஸ் ப்ரொடக்ஷன்சுடன் இணைந்து எங்கள் ‘ப்ரொஜெக்ட் சம்ஸ்க்ருதி’ அமைப்பு, ‘அனுமார்கா’ எனும் நடன நாடகத்தைப் படைக்கவுள்ளது,” என்றார் அவர்.
“இதற்காக, எங்கள் குருகுலத்திலிருந்து ஐந்து நடனக் கலைஞர்கள், இரண்டு களரிப்பயிற்றுக் கலைஞர்கள் பங்கேற்பதுடன், ‘சிஃபாஸ்’ அமைப்பிலிருந்து ஐந்து நடனக் கலைஞர்களும் இணைந்து படைக்கவுள்ளனர்,” என்றார் திருவாட்டி ராதே.
புராணக் கதைகூறும் நடனப் படைப்பு
‘அனுமார்கா’ என்பதன் பொருள் ‘ஒரு வழியைத் தேடுதல்’ என்று கூறிய ராதே, இது புராணக் கதைகளில் வரும் மாந்தர்கள் தங்களுக்குரிய வழியை எவ்வாறு கண்டறிந்தனர்; அவர்களின் பயிற்சி எத்தகையது; அவர்களது உணர்வுகள் எவ்விதம் வெளிப்பட்டன ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்நடனம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார்.
சிவபெருமானை மணாளனாக அடைய வேண்டி பார்வதி தேவி மேற்கொண்ட கடும் தவத்தை விவரிக்கும் காளிதாசரின் வரிகள் அதில் இடம்பெறவுள்ளதைச் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
ராவணன் கைலாய மலையை இலங்கைக்கு எடுத்துச்செல்ல முயன்றபோது, அவரது கரங்கள் மலையின்கீழ் சிக்கி நசுங்கிய தருணத்தில், அவர் பாடிய ‘சிவதாண்டவ ஸ்தோத்திரம்’ அதில் இடம்பெற்று, சிவபெருமான் மீதான ராவணனின் தீராத பக்தி அதில் கொண்டாடப்படுவதாகவும் அவர் சொன்னார்.
பாசுபத அஸ்திரத்தைப் பெறுவதற்காக அர்ஜுனன் மேற்கொண்ட தவமும் வேடன் உருவில் வந்த சிவபெருமானுடன் அவர் போர் புரிந்த கதையும் அதில் விளக்கப்படுவதையும் அவர் சுட்டினார்.
ஒன்றரை மணிநேரம் நீடிக்கவுள்ள இப்படைப்பு, பல்வேறு கதைகளையும் உணர்வுகளையும் பகிரும் என்றும் அதனை உள்ளூர்க் கலைஞர்களுடன் இணைந்து படைப்பதில் தமக்கு மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.
பல்லின சமூகத்திற்கான நடனப் படைப்பு
“சிங்கப்பூர் பல்லின, பன்மொழிச் சமூகம் என்பதை உணர்ந்துள்ளோம். இது, வெவ்வேறு கலாசாரத்தைச் சேர்ந்தவர்களும் பரதநாட்டியம் குறித்த அடிப்படைகளை அறிந்திராதவரும் ரசிக்கும் வண்ணம் அமைத்துள்ளோம்,” என்று விளக்கினார் திருவாட்டி ராதே ஜக்கி.
“பக்தி என்பது ஒரு குறிப்பிட்ட கடவுளைப் பற்றியதல்ல. ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படும் ஓர் உணர்வு. இது பொதுவானது,” என்றார் அவர்.
“இது, அடிப்படையில் மனித உறவுகளின் கொண்டாட்டமாக அமையவுள்ளது. நட்பு, கிண்டல், ஒருவருக்கு உதவும் குணம் உள்ளிட்ட அன்றாட மனித உணர்வுகளை இந்த நடனம் வெளிப்படுத்துகிறது.”
“எந்தக் கலாசாரப் பின்னணியிலிருந்து வந்தாலும் அவர்களுக்கு நட்பு, பெற்றோர் அன்பு, நேசத்துக்குரியவர்களுடனான பிணைப்பு போன்ற அடிப்படை மனித அனுபவங்கள் தெரிந்திருக்கும் என்பதால், இந்தக் கலை வடிவம் சிங்கப்பூர் ரசிகர்களைச் சென்றடையும் என நம்புகிறோம்,” என்றார் திருவாட்டி ராதே.
மேலும், அனைவருக்கும் புரியும் வகையில் ஒவ்வொரு நடனப் பகுதிக்கு முன்பும் அதன் கதையை விரிவாக விளக்கிய பின்னரே நடனம் தொடங்கும் என்றும் சொன்னார் அவர்.
பார்வையாளர்கள் அனைவருக்கும் நடனத்தின் நுணுக்கமான முத்திரைகள் தெரியாவிட்டாலும் சொல்லப்படும் கதையின் மூலம் அந்தக் கதாபாத்திரத்தின் உணர்வுகளை உணர முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
கதையில் வரும் கதாபாத்திரங்களின் உணர்வுகளைப் பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்க முடியும் என்பது இதன் சிறப்பம்சம் என்றும் அவர் சொன்னார்.
சிங்கப்பூரில் கலை உணர்வு
ஏப்ரல் 8, 9ஆம் தேதிகளில் ‘சிஃபாஸ்’ மாணவர்களுக்குப் பயிற்சியளித்த திருவாட்டி ராதே, அவர்களில் சில அனுபவம் வாய்ந்த கலைஞர்களும் இளம் மாணவியரும் இருப்பதைச் சுட்டினார்.
தாம் கலாஷேத்திராவில் பயின்ற காலத்திலிருந்தே சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் பற்றியும் இங்கிருக்கும் உயர்ந்த கற்பித்தல் பற்றியும் அறிந்ததாக அவர் சொன்னார்.
“எனது ஆசிரியர்கள், மூத்தோர் பலர் தேர்வாளர்களாகவும் ஆசிரியர்களாகவும் பணியாற்றிய அதே இடத்தில் நானும் தற்போது ஓர் ஆசிரியராகப் பயிற்சியளிப்பது வியப்பான, அழகான அனுபவமாக உள்ளது,” என்று புன்னகையுடன் அவர் கூறினார்.
சமூக ஊடகங்களின் தாக்கத்தால் இளையர்களின் கவனிப்புத் திறன் குறைந்துவிட்டதாக நிலவும் கருத்தை மறுத்த அவர், ஒரு படைப்பின் தரமும் தீவிரத்தன்மையும் ஆர்வத்தைத் தூண்டும் என்று தாம் நம்புவதாகச் சொன்னார்.
தமது ‘ப்ரொஜெக்ட் சம்ஸ்க்ருதி’, ‘சத்குரு குருகுலம்’ மூலம் ஏழு வயது முதல் 18 வயது வரையிலானோர் முழுமையாகக் கலை பயிலும் முறையைப் பின்பற்றுவதைச் சுட்டிய ராதே ஜக்கி, இதன்மூலம் கலை என்பது ஒரு கூடுதல் பாடமாகயில்லாமல் வாழ்க்கைமுறையாக மாறிவிடுவதாகக் கூறினார்.
கோயில் சிற்பங்கள் மூலம், இந்தியக் கலாசாரத்தில் பொதுமக்களுக்குக் கலை குறித்த அறிவு பரவலாக இருந்தது என்பதை அறிய முடிவதாகக் குறிப்பிட்ட அவர், நவீனக் காலத்திலும் ஒவ்வொருவரின் வாழ்விலும் சிறிதளவாவது நடனமும் பாட்டும் இடம்பெறச் செய்யும் நோக்கில் பயணம் செய்வதாகவும் சொன்னார்.

