தேசிய தினத்தை உவகையுடன் கொண்டாடிய சிங்கப்பூரர்கள்

தேசிய தினத்தை உவகையுடன் கொண்டாடிய சிங்கப்பூரர்கள்

3 mins read
2761c9e7-5599-42cc-973e-b382c1126587
தேசிய தின அணிவகுப்பை நேரடியாகக் காண 59 ஆண்டுகள் காத்திருந்த ரேமாணும் அவரது குடும்பத்தினரும். - படம்: விஷ்ருதா நந்தகுமார்
Google News Preferred Icon

தங்கள் தேசத்தின் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாட ஆயிரக்கணக்கான சிங்கப்பூரர்கள் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 9) தேசிய விளையாட்டரங்கப் பகுதியில் ஒன்றுகூடினர்.

தேசத்தின் 61வது பிறந்தநாளை ஒரு தேசமாக இணைந்து கொண்டாடிய அவர்கள் அணிவகுப்பையும் வாணவேடிக்கையையும் கண்டுகளிக்க உற்சாகத்துடன் வந்திருந்தனர்.

59 ஆண்டு காத்திருப்பிற்குப் பிறகு கிடைத்த வாய்ப்பு

தேசிய தின அணிவகுப்பை நேரில் கண்டால்தான் ஒரு சிங்கப்பூரரின் வாழ்நாள் முழுமையடையும் என்பது 59 வயது ரேமாணின் நம்பிக்கை. அந்தக் கனவு இவ்வாண்டு அவருக்கு நிறைவேறியது.

பல ஆண்டுகளாக விடாமல் முயற்சி செய்து இறுதியாக இந்த ஆண்டு உறவினர் ஒருவரின் உதவியால் தேசிய தின அணிவகுப்பை நேரில் காண அவரது குடும்பத்திற்கு நுழைவுச்சீட்டுகள் கிடைத்தன.

ஆறு பேர் கொண்ட அவரது குடும்பம் முழுதும் முதல்முறையாகத் தேசிய தின அணிவகுப்பை நேரில் கண்டு ரசித்தது.

“59 ஆண்டுகளாக இந்த ஒற்றை வாய்ப்பிற்காகக் காத்திருந்தேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் என் கனவு நிறைவேறியுள்ளது,” என்று பூரித்தார் ரேமாண்.

நீண்ட கால காத்திருப்பிற்குப் பிறகு நாட்டுப்பற்று நிரம்ப பெருமையுடன் தேசிய தின அணிவகுப்பைக் கண்டு ரசித்தது அவர் குடும்பம்.

குடியுரிமை பெற்றவுடன் முதல் அணிவகுப்பு

23 ஆண்டுகள் சிங்கப்பூரில் வசித்து, அண்மையில் குடியுரிமை பெற்றுள்ள திருவாட்டி சுபாஷினி தேவி வால்முருகம், இவ்வாண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தில் உற்சாகத்துடன் கலந்துகொண்டார்.
23 ஆண்டுகள் சிங்கப்பூரில் வசித்து, அண்மையில் குடியுரிமை பெற்றுள்ள திருவாட்டி சுபாஷினி தேவி வால்முருகம், இவ்வாண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தில் உற்சாகத்துடன் கலந்துகொண்டார். - படம்: சிவாய சுப்ரமணியம்

அண்மையில் சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற கையுடன் இவ்வாண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார் திருவாட்டி சுபாஷினி தேவி வால்முருகம், 44. கடந்த 23 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் வசித்துவரும் இவர் அண்மையில்தான் சிங்கப்பூரராக உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

“பல ஆண்டுகளாகத் தொலைக்காட்சியில் தேசிய தினக் கொண்டாட்டங்களைப் பார்த்துள்ளேன். சிங்கப்பூர் குடிமகனாகப் பார்க்கும் முதல் தேசிய தினக் கொண்டாட்டம் நிச்சயம் நேரடியானதாகத்தான் இருக்க வேண்டும் என்ற நோக்குடன் தஞ்சோங் ரூ பூங்காவிற்கு வந்தேன்,” என்று அவர் சொன்னார்.

பெருமிதத்தில் திளைத்த முன்னாள் ஆகாயப்படை வீரர்

முன்னாள் சிங்கப்பூர் ஆகாயப்படை வீரராக அணிவகுப்பில் பங்கேற்ற லோகேஸ்வரி ஆனந்தகிருஷ்ணன் கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்குப் பிறகு அணிவகுப்பைக் கண்டுகளிக்க வருகையளித்திருந்தார்.

2007ஆம் ஆண்டு ஆகாயப்படைத் தளத்தின் 149வது படைப்பிரிவில் (Safety Control, Singapore Airforce) ஒரே இந்தியப் பெண்ணாகச் சேவையாற்றி, தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர் இவர்.

“முன்பு அணிவகுப்பில் பங்கேற்ற அனுபவம் இருந்ததால் மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கட்டும் என இத்தனை ஆண்டுகள் நேரில் வருவதைத் தவிர்த்தேன்.

“ஆனால், இந்த ஆண்டு என் மகளுக்காக விண்ணப்பித்து, அவரை முதல்முறையாக நேரடி தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு அழைத்து வந்துள்ளேன்,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

தேசத்தின் பிறந்தநாளன்று மிளிர்ந்த நட்பு

முதல்முறையாக அணிவகுப்பை காண வந்த தோழிகள் மலர்விழி, 57 (இடது), தேன்மொழி, 68.
முதல்முறையாக அணிவகுப்பை காண வந்த தோழிகள் மலர்விழி, 57 (இடது), தேன்மொழி, 68. - படம்: ஆயிஷா ரோஸ்

தேசியத் தினக் கொண்டாட்டத்தைக் குடும்பத்துடன் பார்க்க வாய்ப்பிருந்தும் தமது நீண்டகால தோழியுடன் அணிவகுப்பைக் காண ஆசையோடு வருகையளித்திருந்தார் திருவாட்டி மலர்விழி. 30 ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்களாக இருக்கும் மலர்விழி, 57 - தேன்மொழி, 68, இருவரும் தேசிய தின அணிவகுப்பைக் கண்டது இதுவே முதன்முறை என்பதால் இருவரும் உற்சாகம் கரைபுரண்டோட சிறுபிள்ளைகள் போலப் பூரித்தனர்.

தேசிய தினத்தைக் கொண்டாடிய தாதி

ஆண்டுதோறும் தேசிய தினத்தைக் கொண்டாட விடுப்பு எடுப்பது தாதி சரஸ்வதி அன்பழகனுக்கு வழக்கம்.

தொடக்கக் காலத்திலிருந்து சிங்கப்பூர் அடைந்துள்ள வளர்ச்சியைக் குடும்பத்தோடு இணைந்து கொண்டாடுவது மிக முக்கியம் எனக் கருதுகிறார் 34 வயது சரஸ்வதி.

“ஒவ்வோர் ஆண்டும் தேசிய தின அணிவகுப்பிற்கான நுழைவுச்சீட்டுகள் கிடைக்காவிட்டாலும், வாணவேடிக்கை எங்கே நடக்கின்றது என்பதை அறிந்துகொண்டு, சிவப்பு வெள்ளை நிறத்தில் ஆடைகள் அணிந்துகொண்டு அங்குச் சென்றுவிடுவோம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்