சிங்கப்பூரின் முதல் ஒடிசி கலைவிழா

சிங்கப்பூரின் முதல் ஒடிசி கலைவிழா

3 mins read
நடன நிகழ்ச்சிகள், பயிலரங்குகள் மற்றும் பாரம்பரியக் கண்காட்சிகள்
b00aaa26-5017-4960-9ed5-52788f6693ff
சிங்கப்பூரின் முதல் ஒடிசி கலைவிழாவில் நடனமாடிய ஒரிசா நடனமணிகள். - படம்: காமினி ஹஷ்வின்

சிங்கப்பூரின் கலைச் சூழலில் ஒரு மைல்கல்லாக, முதலாவது ‘ஒடிசி கலைவிழா 2026’,  வெள்ளிக்கிழமை (மே 8) தேசிய நூலக வாரியத்தில் நடைபெற்றது. 

பாஸ்கர்ஸ் கலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த அந்நிகழ்ச்சியில், அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

சிங்கப்பூரில் அதிகம் அறியப்படாத, ஆனால், தொன்மையான இந்தியப் பாரம்பரிய நடனமான ஒடிசியை முன்னிலைப்படுத்துவதே நிகழ்ச்சியின் நோக்கம்.

ஒரிசா நடனக் கலைக் கழக நடனமணிகள் வழங்கிய நடனம்.
ஒரிசா நடனக் கலைக் கழக நடனமணிகள் வழங்கிய நடனம். - படம்: காமினி ஹஷ்வின்

அந்த நிகழ்ச்சியில், நடன நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது, பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள் எனப் பல்வேறு அங்கங்ளும் இடம்பெற்றன.

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய, பல மாதங்களாயின. 

பாஸ்கர்ஸ் கலைக் கழகத்தின் ஒடிசி நடனக் கலைஞரும் நடன அமைப்பாளருமான 46 வயது இந்து விஜய் அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

இந்தியாவிலிருந்து வருகை தந்த பத்மஸ்ரீ விருது பெற்ற 67 வயது குரு அருணா மொஹந்தியின் குழுவினரின் ‘ஏகா பிரஸ்னா’ (Eka Prashna) நடன நிகழ்ச்சி தொடக்க விழாவின் முத்தாய்ப்பாக அமைந்தது. 

“மாணவர்கள் தங்கள் வேர்கள், மொழி, பாரம்பரியத்தை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்; உங்கள் பாரம்பரியத்தை நீங்கள் போற்றினால் மட்டுமே உலகம் உங்களை ஒரு தனித்துவமான மனிதராக அங்கீகரிக்கும்,” என்று குரு அருணா வலியுறுத்தினார்.

 குரு அருணா மொஹந்தி வழங்கிய நடனம்.
 குரு அருணா மொஹந்தி வழங்கிய நடனம். - படம்: காமினி ஹஷ்வின்

“மக்களிடையே அமைதியையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குவதும் அனைவரையும் ஒன்றாக இணைப்பதுமே கலையின் அடிப்படை நோக்கம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என இந்து விஜய் தெரிவித்தார்.

மேடையில் நடனமணிகளை பாராட்டிய திருமதி இந்து விஜய்.
மேடையில் நடனமணிகளை பாராட்டிய திருமதி இந்து விஜய். - படம்: காமினி ஹஷ்வின்

நடனக் கலை என்பது வகுப்பறையோடு நின்றுவிடுவதில்லை. அது, மேடை அனுபவங்கள் மூலமாகவும் வளர்கிறது. 

அதனை உறுதிசெய்ய, ‘ஒடிசி மஞ்சா’ (Odissi Mancha), ‘பிரஷிக்‌ஷனா’ (Prashikshana) என இரு பிரிவுகளாக நிகழ்ச்சி பிரிக்கப்பட்டது.

‘பிரஷிக்‌ஷனா’ எனப்படும் நடனப் பயிற்சி வகுப்புகள் ஒரு விரிவான கற்றல் தளமாக அமைந்தன.

அவற்றில் பங்கேற்பாளர்கள் தொடர் தீவிர அமர்வுகள்மூலம் ஒடிசி பாரம்பரியத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். 

ஒரிசா நடனக் கலைக் கழக நடனமணிகள் வழங்கிய நடனம்.
ஒரிசா நடனக் கலைக் கழக நடனமணிகள் வழங்கிய நடனம். - படம்: காமினி ஹஷ்வின்

இந்தியாவின் இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய கலைக் கழகம் வழங்கிய ‘உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார்’ எனப்படும் தேசிய இளையர் விருதைப் பெற்ற திரு ராகுல் ஆச்சார்யா, நிருத்யாலயாவின் ‘அரபி பல்லவி’ குறித்த பயிற்சிப் பட்டறையை நடத்தினார். 

சனிக்கிழமை (மே 9) தேசிய நூலக வாரியத்தின் நடன அரங்கில் மாணவர்கள் அந்தப் பல்லவியைத் தொடக்க நிகழ்ச்சியாக வழங்கினர். 

திரு ராகுல், ‘கோனார்க் - நித்தியத்தின் ஒரு பார்வை’ என்ற அங்கத்தையும் வழங்கினார். 

அதோடு, அவர், நடன வடிவத்தை வளப்படுத்தும் அடிப்படை நூல்கள் குறித்த வழிகாட்டப்பட்ட கல்வி ஆய்வையும் வழங்கினார்.

நடனம் மட்டுமல்லாமல், ஒடிசாவின் கைவினைப் பொருள்கள், நெசவு முறைகள், இலக்கியங்கள் குறித்த கண்காட்சியும் ஒடியா சங்கத்தின் ஆதரவுடன் நடைபெற்றது. 

ஒடிசாவின் கைவினைப் பொருள்கள், நெசவு முறைகள், இலக்கியங்கள் குறித்த கண்காட்சி ஒடியா சங்கத்தின் ஆதரவுடன் நடைபெற்றது. 
ஒடிசாவின் கைவினைப் பொருள்கள், நெசவு முறைகள், இலக்கியங்கள் குறித்த கண்காட்சி ஒடியா சங்கத்தின் ஆதரவுடன் நடைபெற்றது.  - படம்: காமினி ஹஷ்வின்
ஒடிசாவின் கைவினைப் பொருள்கள், நெசவு முறைகள், இலக்கியங்கள் குறித்த கண்காட்சி ஒடியா சங்கத்தின் ஆதரவுடன் நடைபெற்றது. 
ஒடிசாவின் கைவினைப் பொருள்கள், நெசவு முறைகள், இலக்கியங்கள் குறித்த கண்காட்சி ஒடியா சங்கத்தின் ஆதரவுடன் நடைபெற்றது.  - படம்: காமினி ஹஷ்வின்

2,000 ஆண்டுகளுக்கும் மேலான ஒடிசி நடனத்தின் பரிணாம வளர்ச்சியை விளக்கும் புகைப்படக் கண்காட்சி பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தந்தது.

பார்வையாளர்களில் ஒருவர் 25 வயது ஒடிசி பயிலும் மாணவர் சாரா யசோதா பால்ஹெட்செட்.

“சிங்கப்பூரில் ஒடிசி நடனம் அரிதானது. எனவே, இந்த நிகழ்ச்சி நடைபெறுவது சிறப்பு. கலைஞர்களின் அபாரமான திறமையும் விடாமுயற்சியும் வியக்கவைத்தன. ஒரு நடனக் கலைஞராக, அவர்களின் தரம் எனக்குப் புதிய இலக்கையும் ஊக்கத்தையும் அளிக்கிறது,” என்றார் அவர்.

அந்த நிகழ்ச்சி ஒடிசி நடனக் கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாக அமைந்தது.

குறிப்புச் சொற்கள்