சுதா ரகுநாதனின் குரலுடன் கலந்த சிங்கையின் பல்லின இசைநாதம்

சுதா ரகுநாதனின் குரலுடன் கலந்த சிங்கையின் பல்லின இசைநாதம்

படம்: பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமி

21 Nov 2026 - 6:45 am

2 mins read

சிங்கப்பூரின் எஸ்பிளனேட் கலையரங்கில் நவம்பர் 12ஆம் தேதி, ‘பூந்தோட்ட நகரின் ஆன்மா’ எனப் பொருள்படும் ‘சோல் ஆஃப் த கார்டன் சிட்டி’ (Soul of the Garden City) நிகழ்ச்சியில், இந்தியாவின் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனும் சிங்கப்பூரில் தளம் கொண்டுள்ள பல்லினக் கலைஞர்களும் ஒன்றிணைந்து செவிக்கினிய கானங்களைப் படைத்தனர்.

சிங்கப்பூரின் பன்முகப் பண்பாட்டை அரவணைக்கும் அதே வேளையில், கர்நாடக இசையின் அழகை வெளிப்படுத்தும் வகையில் ‘பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமி’ இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

டாக்டர் சுதா ரகுநாதன் சிங்கப்பூரில் இத்தகைய கூட்டு இசை நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறை என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

எஸ்பிளனேட் கலையரங்கில் நவம்பர் 12ல் இசைக்கச்சேரி நடந்தேறியது.
எஸ்பிளனேட் கலையரங்கில் நவம்பர் 12ல் இசைக்கச்சேரி நடந்தேறியது. - படம்: பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமி

‘பத்மா’, கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு ஆகியவற்றின் ஆதரவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பல்வேறு இசைப் பாணிகளில் பாடல்கள் படைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பாபநாசம் சிவனின் ‘கருணை செய்வாய்’, ‘தேவி நீயே துணை’, கல்கி கிருஷ்ணமூர்த்தியின் ‘காற்றினிலே வரும் கீதம்’, அன்னமையாவின் ‘பிரம்மம் ஒக்கடே’ ஆகிய பாடல்களோடு ‘ராசா சாயாங்’ (Rasa Sayang), ‘சிங்கப்பூரா ஓ சிங்கப்பூரா’ (Singapura, Oh Singapura) ஆகிய உள்ளூர்ப் பாடல்களும் இடம்பெற்றன. நிகழ்ச்சியின் நிறைவில் இடம்பெற்ற பாரதியாரின் ‘சாந்தி நிலவ வேண்டும்’ பாடல், நிகழ்ச்சியின் நல்லிணக்கக் கருப்பொருளுக்கு மிகவும் பொருத்தமாக அமைந்தது.

பழம்பெரும் செவ்விசைப் பாடகியான காலஞ்சென்ற எம்.எல்.வசந்தகுமாரியின் மாணவியான டாக்டர் சுதா ரகுநாதன், 135க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளார். 200க்கும் மேற்பட்ட இசைத் தொகுப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.

டாக்டர் சுதா ரகுநாதனின் குரலுக்குப் பக்கபலமாக அமைந்தது உள்ளூர் இசைக்கலைஞர் டாக்டர் கானவிநோதன் ரத்தினத்தின் புல்லாங்குழல் இசை. பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமியின் இசை இயக்குநரும் 2024ஆம் ஆண்டில் கலாசாரப் பதக்கம் பெற்றவருமான டாக்டர் கானவிநோதன் தலைமையிலான இசைக்குழு நிகழ்ச்சிக்கு மெருகு சேர்த்தது.

வயலினில் டி.வி. சஜித், வீணையில் டி.கே. அருண்குமார், மிருதங்கத்தில் டி. ரமணன், ‘குஸெங்’ (Guzheng) கருவியில் சென் யிஃபான், சீனத் தாள வாத்தியங்களில் ஷெரில் ஓங், ‘ஊட்’ (Oud) வாத்தியத்தில் முஹம்மது அன்சாரி, ‘ரெபானா’ (Rebana) இசைக்கருவியில் முகமது யாசிஸ் ஆகியோர் இந்த இசை நிகழ்ச்சியில் அங்கம் வகித்தனர்.

“டாக்டர் சுதா ரகுநாதனுடன் இணைந்து ‘சோல் ஆஃப் த கார்டன் சிட்டி’ நிகழ்ச்சியில் பணியாற்றியது பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமிக்கு ஒரு முக்கிய மைல்கல்,” என்று அக்கலைப்பள்ளியின் கலை இயக்குநர் மீனாட்சி பாஸ்கர் தெரிவித்தார்.

இசைக்கலைஞர்கள் ஒருவரையொருவர் கூர்ந்து கவனித்து, அதற்கேற்பப் படைத்ததைக் குறிப்பிட்டு அவர் பாராட்டினார்.

“இந்தியப் பாரம்பரியக் கலைகளால் வெவ்வேறு பண்பாடுகளைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைக்க முடியும் என எப்போதும் நம்புகிறோம். சிங்கப்பூரின் சீன, மலாய், தமிழ்ச் சமூகங்களுக்கு அறிமுகமான மெட்டுகளுடன் திருமதி சுதாவின் கர்நாடக இசை மிக இயல்பாக ஒன்றிணைந்ததைக் கேட்பது பெருமகிழ்ச்சியாக இருந்தது,” என்றார் திருவாட்டி மீனாட்சி.

குறிப்புச் சொற்கள்