மண்ணில் வேரூன்றி, விண்ணைத் தொட்ட சிங்கப்பூரின் வளர்ச்சி

பெருமிதத்தில் பூரிக்கும் மூத்த தலைமுறை

மண்ணில் வேரூன்றி, விண்ணைத் தொட்ட சிங்கப்பூரின் வளர்ச்சி

4 mins read
ff8b0aea-8b76-484d-948c-afdfb8eb1a09
தேசியத் தினக் கொண்டாட்டத்தில் ஜலாலுதீன் பீர் முஹம்மது. - படம்: ஜலாலுதீன் பீர் முஹம்மது.
multi-img1 of 4
Google News Preferred Icon

தேசிய தின அணிவகுப்பு என்றாலே நினைவுக்கு வருவது மரினா பே வட்டாரத்தின் விமானச் சாகசக் காட்சிகளும், கண்கவர் ஒளி விளக்குகளும் நவீன வானளாவிய கட்டடங்களும்தான்.

ஆனால் ஏறத்தாழ அரை நூற்றாண்டு பின்னோக்கி பார்த்தால், கொட்டும் மழையிலும் நனைந்த சீருடைகளுடன் அசராது சாலைகளின் அணிவகுத்து சென்ற வீரர்கள், அவர்களை பார்க்க வீதியோரம்  காத்து நின்றுக்கொண்டிருந்த மக்கள் என முற்றிலும் மாறுபட்ட சூழலில் கூட தேசிய தினம் கொண்டாட்டங்கள் நடந்தேறியுள்ளன.

தற்போது நாடு அதன் 61வது தேசிய தின விழாவைக் கொண்டாடி மகிழும் வேளையில் அமைதியான தீவாக இருந்த சிங்கப்பூர் உலகளாவிய பெரு வல்லரசாக உருவெடுத்த வரலாற்றுப் பயணத்தை நேரில் கண்ட முன்னோடித் தலைமுறையினர் தங்களின் நெகிழ்ச்சியான நினைவுகளை தமிழ் முரசுடன் பகிர்ந்து கொள்கின்றனர

மூத்தோரின் நினைவுகளில் உள்ள வேறொரு சிங்கப்பூர்

இன்றையத் தலைமுறை இளையர்களுக்குச் சிங்கப்பூர் என்றால் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, போக்குவரத்து வசதிகள் ஆகியவை நினைவுக்கு வரலாம். ஆனால் மூத்த சிங்கப்பூரர்களின் நினைவுகளில் வேறு ஒரு சிங்கப்பூர் இன்னும் பசுமையாக இருக்கிறது.

“நான் சிறுவனாக இருந்தபோது, சாலைகளின் இருபுறமும் கண்ணாடி மேலடுக்கு மாளிகைகளோ அல்லது மேம்பாலங்களோ கிடையாது,” என்று நினைவுகூர்கிறார் கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவு மேம்பாட்டுப் பிரிவில் பணியாற்றி ஓய்வுப்பெற்ற திரு. பூபதி தியாகாராஜன், 77.

“நாங்கள் வீதி வழியே நடந்து செல்லும்போது ரம்புட்டான் மங்கூஸ்தான் மரங்களை பார்த்தவாறு செல்வோம். கம்போங் வாழ்க்கையில் கால்நடைகளையும் காணலாம்.

‘‘இப்போதுள்ளது போன்ற பல்கலைக்கழகங்கள் இருந்ததில்லை. வீடமைப்பு வளர்ச்சிக் கழகங்கள் இல்லை. தெரிந்தவர்கள் எல்லாம் அருகருகே வசிப்போம். அதனை இப்போது நினைத்து பார்க்கையில் இரண்டு வெவ்வேறு உலகங்களில் வாழ்ந்தது போல் உள்ளது,’’ என்றார் திரு தியாகராஜன். 

1960களில் இளம்பருவத்தில்  சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்தது தெரிந்திருந்தது ஆனாலும் அது பற்றி ஒன்றும் புரியவில்லை என்ற அவர், ஆனாலும் அதன்பிறகு தலைமைத்துவம் தேசத்திற்கு காட்டிய நல்வழி தனித்துவமானது என்றார்.

‘‘காலஞ்சென்ற தலைவர் லீ குவான் இயூ தலைமையில் முக்கிய தலைவர்கள் கரம்கோக்க, மக்களாகிய நாங்களும் அவர்களின் கொள்கைகளுக்கு மதிப்பு கொடுத்து ஒற்றுமை, கட்டுப்பாடு எனும் விழுமியங்களால் தேசத்தை கட்டியெழுப்பியுள்ளோம்,’’ என்றார் அவர்.

நாட்டிற்கு இயற்கை கொடுத்த பரிசாக துறைமுகம் அமைய, கடின உழைப்பால் தேசம் இந்த நிலையை அடைந்ததை சுட்டிய திரு தியாகராஜன், ‘‘நிலையான கொள்கையை திறம்பட வகுத்த அரசியல் தலைமத்துவத்தால் தான் சிறிய நாடான சிங்கப்பூர் இன்று பரிய நாடுகளின் குடிமக்களுக்கும் வேலை வாய்ப்பு தரும் நிலையில் உயர்ந்துள்ளது,’’ என்று மகிழ்ந்தார்.

தேசிய தின அன்பளிப்புப் பை  -  செழிப்பின் அடையாளம்:

தன்னை பொறுத்தவரை சிங்கப்பூர் எட்டியுள்ள பரிணாம வளர்ச்சியை, தேசிய தினத்தில் வழங்கப்படும் ‘ஃபன்பேக்’ பரிசுப் பையைக்காட்டிலும் வேறு எதுவுமே சிறப்பாக விளக்கிவிட முடியாது என்றார் திரு ஜலாலுதீன் பீர் முஹம்மது,69.

இந்த ஆண்டு தேசியத் தின அணிவகுப்பு நடைபெறும் தேசிய விளையாட்டரங்கம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் சிறப்பு நிகழ்வு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதனை சுட்டிய அவர், ‘‘அப்போதெல்லாம் தேசிய தின அணிவகுப்பை காண எளிதாக சென்றுவிட முடியும். அன்பளிப்பு பைகளில் பிஸ்கெட் இருக்கும். அலங்கார பொம்மைகள் இருக்காது. போவோம் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வருவோம். யாரும் எங்களிடம் தேசத்திற்கான உங்கள் கனவு என்ன என்றெல்லாம் கேட்டது கிடையாது.

’’ஆனால் இப்போது  நவீனத் தொழில்நுட்பச் சாதனங்கள்,  சுற்றுச்சூழல் நட்புப் பொருட்கள் ஆகியவை நாம் பேணிக்காக்கும் அழகிய நினைவுப் பரிசாக உள்ளது. 

‘‘வறுமை, அடிப்படை வாழ்வாதாரத்தில் இருந்து நாம் அடைந்துள்ள செழிப்பை இது காட்டுகிறது.

‘‘குறிப்பாக தமிழ் மொழி உட்பட நான்கு மொழிகளில் இடம்பெறும் அறிவிப்புகள், தேசிய தின விருதுகள், கொண்டாட்டடங்களுடன் வாணவேடிக்கை என அனைத்தையும் உள்ளடக்கும் மின்னிலக்க திரைகள், நாடு அடைந்துள்ள அசுர வளர்ச்சிக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு,’’ என்றார் திரு ஜலாலுதீன்.

நாட்டின் தேசிய தினத்தை இன்றளவும் ஆச்சரியம் விலகாமல் பார்த்துக்கொண்டிருப்பதாக கூறிய திரு லோகநாதன், 72 ‘‘1965ல் இந்த சிறிய தீவு, உலகின் மிகப் பணக்கார நாடுகளின் குடிமக்களுக்கே வர்த்தக வாய்ப்புகளை நல்கும் என்று சொன்னால் அதை யாருமே நம்பியிருக்க மாட்டார்கள்,” எனக் குறிப்பிட்டார் 

சமகால சுதந்திரம் அடைந்த இதர நாடுகளுடன் ஒப்பிடுகையில் உழைப்பையும் பல்லின சமத்துவத்தையும் அடித்தளமாக வைத்து முன்னேற முன்னோடித் தலைவர்கள் கற்றுக் கொடுத்ததால், இன்று வெளிநாட்டு ஊழியர்கள் தொடங்கி அனைத்துலக செல்வந்தர்களுக்கும் வாழ்க்கைத் தொழில் தரும் இடமாக தேசம் மாறியிருப்பதை நினைவுகூர்ந்து நெகிழ்ந்தார் அவர்.

இளம் தலைமுறைக்குக் கைமாறும் ஒளிவிளக்கு

தேசிய தினத்தை கொண்டாடும் வேளையில் தமக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவது சிங்கப்பூரில் இந்த ஆண்டு தொடக்கம் கண்ட தேசிய விண்வெளி ஆய்வு அமைப்பு என்றார் ஓய்வுப்பெற்ற மூத்த ஆசிரியர் திருவாட்டி கௌசலா தாவி ராமச்சந்திரா, 85.

‘‘சிறுவயதிலிருந்தே நட்சத்திரம், கோள்கள் என பலவற்றை பார்க்க ஆசைப்பட்டதுண்டு, அவ்வகையில் இந்த விண்வெளி அமைப்பு அவற்றையெல்லாம் சாத்தியமாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் அவர்.

“தேசிய தினம் என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல; அது நமக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதன் நினைவூட்டல்,” என்று கூறிய அவர், தேசிய தின பொன்விழாவைக் காண கிடைத்த வாய்ப்பு இன்றும் நினைவில் விட்டு நீங்க மறுக்கிறது,’’ என்றார்.

வயது மூப்பின் காரணமாக இந்த ஆண்டு தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை கண்டுகளித்தாலும், முதன்முறையாக அணிவகுக்க உள்ள உடற்குறையுள்ளோர் அணியை காண ஆவலாக உள்ளதாக சொன்னார் திருவாட்டி கௌசலா. 

இந்த நாட்டை உருவாக்க நாங்கள் எங்கள் வியர்வையையும் இளமையையும் கொடுத்தோம் என்ற திரு பால் டேவிட், 81, வாடைகைக்கு வசித்து வந்தததையும் பல குடியிருப்பாளர்கள் ஒரே வசிப்பிடம் கழிவறை ஆகியவற்றை பகிர்ந்து நட்புறவுடன் வாழ்ந்ததையும் நினைவுகூர்ந்தார்.

‘‘இந்த தேசிய தினத்தில் இளைய தலைமுறைக்கு சொல்லும் செய்தி, நாம் பெற்ற அமைதியைப் போற்றவும், ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கவும் வேண்டும் இந்த வானுயரக் கட்டடங்களுக்கு அடியில் இருக்கும் வேர்களை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.” என்றார் திரு டேவிட்.

சிங்கப்பூரர்கள் அனைவரும் சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளில் ஒன்றிணையும் வேளையில், முன்னோடி தலைமுறையினர் பெருமையோடும் எதிர்கால நம்பிக்கையோடும் நாட்டை நடத்துவார்கள் என்ற நம்பிக்கையோடு அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகக்  நிறைவு செய்தனர் மூத்தோர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்