சிங்கப்பூரின் மூத்த தலைமுறைக் கவிஞர் கடையநல்லூர் ஜமீலா காலமானார்

சிங்கப்பூரின் மூத்த தலைமுறைக் கவிஞர் கடையநல்லூர் ஜமீலா காலமானார்

2 mins read
தமிழ் இலக்கியத்திற்குக் கவிஞர் ஜமீலாவின் பங்களிப்பு
46b8d072-c84b-4b76-a3e0-f78368213545
மறைந்த கவிஞர் ஜமீலா. - படம்: குடும்பத்தினர்

சிங்கப்பூரின் மூத்த தலைமுறைக் கவிஞர் N.M. சம்சுதீன் காலமானார். அவருக்கு வயது 86.

‘கடையநல்லுர் ஜமீலா’ என்ற புனைபெயரில் அறியப்படும் கவிஞரான அவர், சிறுகதை, கட்டுரை போன்ற இலக்கியப் படைப்புகளையும் எழுதியுள்ளார்.

கவிஞர் ஜமீலா சிங்கப்பூர்த் தமிழ் எழுத்துத் துறைக்கு ஆற்றிய பங்கிற்காக அவருக்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 2020ஆம் ஆண்டு ‘தமிழவேள் விருது’ வழங்கி கௌரவித்தது.

கவிஞர் ஜமீலா 1953ல் எழுத்துலகில் காலடி எடுத்து வைத்தார். பநாஸ், தீன் தாஸ் முதலிய பல புனைபெயர்களிலும் அவர் எழுதினாலும், தம் தங்கையின் மீது கொண்ட அளவு கடந்த பாசத்தின் காரணமாக ஜமீலா என்ற புனைபெயரையே நிரந்தரமாக்கிக்கொண்டார்.

அச்சு வசதி இல்லாத காலத்தில் கையெழுத்து இதழை உருவாக்கி வெளியிட்ட அவர், 1957ல் தமது நண்பரான கவிஞர் க.து.மு.இக்பாலுடன் இணைந்து ‘உமறுப்புலவர் நினைவு மலர்’ எனும் கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டார்.

“1950களிலிருந்து நான் கவிஞர் ஜமீலாவுடன் நெருக்கமான நட்பு கொண்டுள்ளேன். அவருடன் இணைந்து பல மலர்களை எழுதியுள்ளேன். அவரது மறைவு வருத்தத்தை அளிக்கிறது,” என்று உணர்வுபொங்கக் கூறினார் கவிஞர் க.து.மு. இக்பால், 85.

பெருநாள் மலர், மீலாத் மலர், திருவள்ளுவர் மலர் போன்ற பல்வேறு மலர்களில் கவிஞர் ஜமீலாவின் படைப்புகள் வெளிவந்துள்ளன.

கடந்த 2005ஆம் ஆண்டு தங்கமுனை விருதுப்போட்டியில் கவிஞர் ஜமீலா முதல் பரிசை வென்றுள்ளார்.

“புதிய கவிஞர்களுக்கு உந்துசக்தியாக இருப்பவர் கவிஞர் ஜமீலா. முன்னோடிக் கவிஞரான அவர் பல கவிதைகளை எழுதியுள்ளார். அவருடைய படைப்புகளை தேசிய நூலக வாரியத்தின் மின்வளங்களில் பெறலாம்,” என்றார் கவிமாலை அமைப்பின் தலைவர் கவிஞர் இன்பா.

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக், உமறுப்புலவர் கல்வி உதவி அறங்காவல் நிதி, உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து 2016ஆம் ஆண்டு ஏற்பாடு செய்த உமறுப்புலவர் நினைவு அரங்கத்தில், சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதைத் துறையை தமது கவிதைகளால் வளப்படுத்த உதவிய கவிஞர் ஜமீலாவுக்கு ‘அ. நா. மெய்தீன்’ விருது அளித்துச் சிறப்பிக்கப்பட்டது.

2007ஆம் ஆண்டில் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகமும் வளர்தமிழ் இயக்கமும் இணைந்து ஏற்பாடு செய்த பாரதியார்-பாரதிதாசன் விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட்டது.

“சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராக விளங்கிய என் தாத்தாவின் மறைவு சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய உலகில் ஈடு செய்யமுடியாத ஓர் இழப்பு. அவருடைய கவிதைகள் என்றும் சிங்கைத் தமிழ் இலக்கியப் பெட்டகத்தில் ஒரு பொக்கிஷமாக விளங்கும். ‘தங்கவாப்பா’ என்று பேரப்பிள்ளைகளால் செல்லமாக அழைக்கப்படும் தாத்தாவின் புன்னகையும் நகைச்சுவையான பேச்சும் என்றும் எங்கள் நினைவுகளில் இருக்கும்,” என்று கவிஞர் ஜமீலாவை நினைவுகூர்ந்தார் அவரது பேரன் முஹம்மது ஷஹீர், 29.

குறிப்புச் சொற்கள்